Tuesday, October 24, 2023
HomeAalayangalகுழந்தைப்பேறு அருளும், பாவம் போக்கும் திருக்காட்கரை கோவில்

குழந்தைப்பேறு அருளும், பாவம் போக்கும் திருக்காட்கரை கோவில்

இறைவனின் பத்துத் தோற்றங்களில் ஒன்றான வாமன தோற்றம் நிகழ்ந்த இத்தலத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு, அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி மனநிறைவும், செல்வப்பெருக்கும் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருக்காட்கரை என்னும் இடத்தில் அமைந்திருக்கிறது, திருக்காட்கரையப்பன் கோவில். இந்த ஆலயத்தில்தான், கேரளத்தில் மிகவும் முக்கியமான நிகழ்வாக கருதப்படும் ‘ஓணம் திருவிழா’ உருவானதாக சொல்லப்படுகிறது. அது என்ன வரலாறு என்பதைப் பார்ப்போம்.

புராணத் தகவல்

பிரகலாதன் என்ற விஷ்ணு பக்தனின் பேரன்தான் மகாபலி சக்கரவர்த்தி. இவரும் விஷ்ணுவின் மீது பக்தி கொண்டவர்தான். அசுர குலத்தைச் சேர்ந்த இந்த மன்னன், மலையாள தேசத்தை ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சியில் மக்கள் அனைவரும் இன்புற்று வாழ்ந்து வந்தனர். ஒரு கட்டத்தில் மகாபலி சக்கரவர்த்திக்கு, மூவுலகையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்காக அவன், அசுரர் குலக்குருவான சுக்ராச்சாரியாரைக் கொண்டு மிகப்பெரும் வேள்வியை நடத்தத் தொடங்கினான்.

அந்த வேள்வியால், தன்னுடைய இந்திர பதவி பறிபோய் விடுமோ என்று பயந்த இந்திரலோகத்து அரசன் இந்திரன், அந்த வேள்வியை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட முடிவு செய்தான். அதன்படி தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர்கள் சொல்வதைக் கேட்ட மகாவிஷ்ணு, மகாபலியின் வேள்வியை நிறுத்தி, மூவுலகையும் காப்பதாக கூறினார்.

மகாவிஷ்ணு ஒரு கையில் ஓலைக்குடையும், மற்றொரு கையில் கமண்டலமும் தாங்கி, மூன்று அடி உயரத்திலான வாமனத் தோற்றத்தில் பூலோகம் வந்தார். பின்னர் மகாபலி வேள்வி நடத்தும் இடத்துக்குச் சென்றார். ஆனால் அங்கு அதற்கு முன்பாகவே தானம் அளிக்கும் நிகழ்வு முடிவடைந்திருந்தது.

அங்கிருந்த மகாபலி, வாமனரைப் பார்த்து, ‘நீங்கள் தாமதமாக வந்திருக்கிறீர்கள். பரவாயில்லை, உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள், நான் தருகிறேன்’ என்றான்.

வாமனர் அவனிடம், தனது காலால் அளக்கும் வகையில் மூன்று அடி நிலம் தானமாக அளிக்க வேண்டினார். அப்போது அங்கிருந்த சுக்ராச்சாரியார், ‘நம் வேள்வியை நிறுத்தும் எண்ணத்துடன் மகாவிஷ்ணுவே வாமனர் உருவத்தில் வந்திருக்கிறார். எனவே தானம் செய்து ஏமாற்றமடைய வேண்டாம்’ என்று மகாபலியை எச்சரித்தார்.

ஆனால் மகாபலி, அந்த எச்சரிக்கையை மீறி, வாமனரின் கையிலிருந்த கமண்டல நீரைக் கொண்டு தானமளிக்க முன் வந்தான். அதனைத் தடுக்க நினைத்த சுக்ராச்சாரியார் வண்டாக உருமாறிச் சென்று, கமண்டலத்தின் நீர் வரும் வழியை அடைத்தார். உடனே வாமனர், ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து சுக்ராச்சாரியாரின் கண்ணைக் குத்தினார். அதனால் காயமுற்ற வண்டு உருவிலிருந்த சுக்ராச்சாரியார் கமண்டலத்தில் இருந்து வெளியேறினார்.

மகாபலி வாமனரிடம் இருந்த கமண்டல நீரைப் பெற்று, நிலத்தில் விட்டுத் தானமளிக்கத் தயாரானான். உடனே, வாமனர் தோற்றம் மிகப்பெரும் தோற்றமாக மாறி, ஒரு அடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் விண்ணுலகையும் அளந்தார். பின்னர், ‘மூன்றாவது அடி வைக்க நிலம் எங்கே?’ என்று மகாபலியிடம் கேட்டார்.

அதனைக் கண்டு வியப்படைந்த மகாபலி, வாமனர் தோற்றத்திலிருந்த மகாவிஷ்ணுவை வழிபட்டு, ‘தங்களது மூன்றாவது அடியை என் தலை மீது வையுங்கள்” என்று கூறினான். வாமனரும் அவ்வாறே வைத்து, மகாபலியை நிலத்தினுள் அழுத்தினார்.

அப்போது மகாபலி, “இறைவா என் நாட்டின் மீதும், என் மக்களின் மீதும் நான் பேரன்பு கொண்டிருக்கிறேன். ஆண்டுக்கொருமுறை என் நாட்டு மக்களைக் காணும் வாய்ப்பை எனக்கு வரமாகத் தந்தருள வேண்டும்” என்று வேண்டினான். வாமனர் தோற்றத்திலிருந்த மகாவிஷ்ணுவும் அவன் கேட்ட வரத்தைத் தந்தருளினார்.

மகாவிஷ்ணு வாமனத் தோற்றமெடுத்து மகாபலி மன்னனை நிலத்தினுள் அழுத்தி அழித்த இடத்தில் அமைந்ததே திருக்கட்காரை ஆலயம் என்று சிலர் இத்தலத்தின் வரலாற்றைத் தெரிவிக்கின்றனர்.

இன்னொரு தரப்பினர், மகாபலி அழிவுக்குப் பின், கபில முனிவர் மகாவிஷ்ணுவை வாமனத் தோற்றத்தில் காண விரும்பியதாகவும், அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மகாவிஷ்ணு இங்கு வாமனர் தோற்றத்தில் காட்சியளித்தார் என்றும், கபிலருக்குக் காட்சியளித்த இடத்தில் அமைந்ததே இக்கோவில் என்றும் சொல்கின்றனர்.

மகாவிஷ்ணு வாமனர் தோற்றத்தில், நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை தாங்கியபடி நின்ற நிலையில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். வாமனர் தோற்றத்தில் இருக்கும் இவரை ‘திருக்காட்கரையப்பன்’ என்றே அழைக்கின்றனர். இங்கிருக்கும் இறைவி ‘வாத்சல்யவல்லி’ (பெருஞ்செல்வ நாயகி) என்று அழைக்கப்படுகிறார். இக்கோவில் வளாகத்தில் பகவதி, சாஸ்தா, கோபாலகிருஷ்ணன், பிரம்மராட்சசன், யட்சி ஆகியோருக்குத் தனிச்சன்னிதிகள் இருக்கின்றன.

இக்கோவிலின் எதிர்புறம் மகாபலி அரசன் நிறுவி வழிபட்ட சிவபெருமான் கோவில் அமைந்திருக்கிறது. ‘தெற்குக்கரை தேவர் கோவில்’ என்றழைக்கப்படும் இந்த ஆலயம், திருக்காட்கரையப்பன் கோவிலைக் காட்டிலும் மிகவும் பழமையானது. இக்கோவில் வளாகத்தில் பார்வதி, துர்க்கை, கணபதி, முருகன் ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன.

இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள், எதிரில் உள்ள சிவபெருமானை முதலில் வழிபட்டு, அதன் பிறகு வாமனரை வழிபட்டுச் செல்கின்றனர். இக்கோவிலில் வாமனருக்குப் பால் பாயசம் படைத்தும், சிவபெருமானுக்கு நெய் பாயசம் படைத்தும் வழிபடுகிறார்கள். இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி சிங்கம் (ஆவணி) மாதம் 10 நாட்கள் நடைபெறும் திருவோணம் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். விழா நாட்களில் சாக்கியார் கூத்து, ஓட்டம் துள்ளல், கதகளி மற்றும் படகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பெறுகின்றன.

இறைவனின் பத்துத் தோற்றங்களில் ஒன்றான வாமன தோற்றம் நிகழ்ந்த இத்தலத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு, அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி மனநிறைவும், செல்வப்பெருக்கும் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும், குழந்தைப்பேறு இல்லாதவர்கள், இக்கோவிலின் யட்சி மண்டபத்துக்கு முன்னால், பொம்மைத் தொட்டில்களை வாங்கிக் கட்டி தங்களுக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டிக் கொள்கின்றனர்.

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகத் திகழும் இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, நம்மாழ்வார் பத்து பாசுரங்கள் பாடி போற்றியிருக்கிறார். இத்தல இறைவனுக்கு நேந்திரம் பழங்களை படைத்து வழிபடுகிறார்கள். இங்கு கபில முனிவரால் உருவாக்கப்பட்ட கபில தீர்த்தம் உள்ளது. இதுவே ஆலய தீர்த்தமாக பயன்படுகிறது. ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம்

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் திருக்காட்கரை எனுமிடத்தில் இந்த ஆலயம் உள்ளது. திருச்சூர் நகரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், இரிஞ்சாலக்குடா என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + eight =

Most Popular