48 நாட்கள் சுற்றி வந்து வேண்டிக் கொண்டால் நினைத்த காரியம் கைகூடும்

422

 

திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படும் 108 கோவில்களில் மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் 47-வதாக திகழ்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில்திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படும் 108 கோவில்களில் மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் 47-வதாக திகழ்கிறது. இந்த கோவில் சங்க காலத்துக்கு முன்பே தோன்றிய பழம் பெருமையுடையது. வைணவ சான்றோர் களான ஆழ்வார்களால் பாடப்பட்ட தலம் இதுவாகும். முற்கால பாண்டியர்கள் குல பரம்பரையாக வழிபட்டும் திருப்பணிகள் செய்தும் வந்த தொன்மையை கொண்டது. பெரியாழ் வாரால் திருமால் ஒருவரே பரம்பொருள் என நிர்ணயம் செய்த தலமாகவும், திருப் பல்லாண்டு விளைந்த திருத்தலமாகவும் விளங்குகிறது.

கோவிலில் உள்ள அஷ்டாங்க விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். 2-வது நிலையில் சூரிய நாராய ணர் தேவியருடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தெய்வங்களும், அஷ்டபாலகர்களும் ஓவிய வடிவில் அருள் பாலிக்கின்றனர். இதனால் இந்த சன்னதியை ‘ஓவிய மண்டபம்‘ என்று அழைக்கிறார்கள்.

3-வது நிலையில் பாற்கடல் நாதர், பள்ளி கொண்ட கோலத்தில் தாயார் களுடன் அருளுகி றார். இவ்வாறு பெருமாள் இந்த தலத்தில் நின்ற, அமர்ந்த, சயன என 3 கோலங்களிலும் காட்சி தருகிறார். மேலும் பூவநாதர், லட்சுமி நரசிம்மர், நாராயணன், லட்சுமி நாராயணன், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர்கள் ஆகியோரையும் விமானத் தில் தரிசிக்கலாம்.

மலைக்கோவில்களில் பவுர்ணமியன்று கிரிவலம் வருவது போல் இங்கே பக்தர்கள் விமானத்தை வலம் வருகிறார்கள். இங்குள்ள உற்சவர் வியூக சுந்தர்ராஜன் என அழைக்கப்படுகிறார். எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன்பு சரியாக திட்டமிட்டு வியூகம் அமைத்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். எதிலும் வெற்றி தரும் அழகராக இவர் திகழ்வதால் இந்த பெயரில் அழைக்கப்படுகிறார். இந்த பகுதியை ஆண்ட மன்னர்கள் போருக்குச் செல்லும்போது இவரை வேண்டி வியூகம் அமைத்துக் கொண்டனர். இதனால் கூடலழகருக்கு இந்த பெயர் ஏற்பட்டது எனவும் கூறுகிறார்கள்.

பஞ்சபூத தத்துவம்

இந்த கோவில் பஞ்சபூத தத்துவங்களை உணர்த்தும் வகையில் 5 கலசத்துடன் கூடிய 5 நிலை ராஜகோபுரம், 8 எழுத்து மந்திரத்தை உணர்த்தும் வகையில் 8 பிரகாரங்களுடன் அமைந்த கோவில் இதுவாகும். ஆண்டாள் சக்கரத் தாழ்வார், நவக்கிரகம், ஆழ்வார்கள், ஆச்சாரியார் கள், மணவாள மாமுனிகள், விஸ்வஷேனர், ராமர், கிருஷ்ணன், லட்சுமி நாராயணன், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. சூரிய மண்டலத்தில் சூரியன் அஷ்டாங்க விமானத்துடன் கூடிய ரதத்தில் வலம் வருவார். இந்த ரதத்தின் மாதிரி சிற்பம் கோவிலின் சுற்றுச் சுவரில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

பெயர் காரணம்
ஒருமுறை மதுரையில் தொடர்ந்து மழை பெய் யவே மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தங்களை மழையில் இருந்து காத்தருளும்படி பெருமாளை வேண்டினர். பக்தர்களின் வேண்டுதலை ஏற்ற பெருமாள் நான்கு மேகங்களை ஏவினார். அவை மதுரையைச் சுற்றி 4 மாடங்களாக ஒன்று கூடி மழையில் இருந்து மக்களை காத்தது. இவ்வாறு 4 மேகங்கள் ஒன்று கூடியதால் இந்த கோவில் நான்மாடக்கூடல் என்றும் கூடல் மாநகர் என்றும் அழைக்கப்படுகிறது. சுவாமியும் கூடல் அழகர் என்று அழைக்கப்படுகிறார்.

108 திவ்ய தேசங்களில் கூடல் அழகர் கோவிலிலும், திருக்கோஷ்டி யூரிலும் மட்டுமே அஷ்டாங்க விமானத்தில் சுவாமிகள் காட்சி தருகின்றனர். இந்த விமானம் 125 அடி உயரம் கொண்டதாகும். இதில் உள்ள கலசம் 10 அடி உயரமுடையது. இதன் நிழல் தரையில் விழாது என்பது சிறப்பம்சமாகும். 8 பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் ‘ஓம்‘ நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும்.

தினமும் 6 கால பூஜை

மதுரை கூடலழகர் கோவிலில் தினமும் 6 கால பூஜை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு விஸ்வரூப பூஜை. காலை 8 மணிக்கு கால சந்தி பூஜை. 10 மணிக்கு சுற்று கோவில் பூஜை. 12 மணிக்கு உச்சிகால பூஜை. மாலை 5 மணிக்கு சாயரட்சை பூஜை. இரவு 7 மணிக்கு சுற்று கோவில் பூஜை. இரவு 9 மணிக்கு அர்த்தசாம பூஜை.

முக்கிய திருவிழாக்கள்

மதுரை கூடலழகர் கோவிலில் நடை பெறும் திருவிழாக்கள் விவரம் வருமாறு:-

சித்திரை மாதம்: தமிழ் வருட சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பெருமாள் புறப்பாடு.
வைகாசி மாதம்: 14 நாட்கள் தேர்த் திருவிழா நடைபெறும். 9-வது திருநாளன்று அனுஷ நட்சத்திரத்தில் தேரோட்டம் நடைபெறும்.
ஆனி மாதம்: கருட சேவை, சயனத் திருவிழா, முப்பழ விழா மற்றும் எண்ணை காப்பு விழா நடைபெறும்.
ஆடி மாதம்: ஆடிப்பூரத் திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.
ஆவணி மாதம்: திருப்பவித்திர திருவிழா மற்றும் உறியடித்திருவிழா கொண்டாடப்படும்.
புரட்டாசி மாதம்: நவராத்திரி விழா 9 நாட்களும் வெகு விமரிசையாக நடைபெறும். மேலும் பவுர்ணமி அன்று தாயாருக்கு பாலாபிஷேகம், 5 கருட சேவை, 4 மாசி வீதி புறப்பாடு மற்றும் விஜயதசமி அன்று அம்பு போடுதல் விழாக்கள் பாரம் பரிய முறைப்படி நடை பெறும்.
ஐப்பசி மாதம்: தீபாவளி அன்று மூலவ ருக்கு தைலக் காப்பு மற்றும் மணவாள மாமுனிகள் திருநட்சத்திர திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
கார்த்திகை மாதம்: திருக்கார்த்திகை மற்றும் திருமங்கை ஆழ்வார் திரு நட்சத்தி ரத்தில் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
மார்கழி மாதம்: திருப்பல்லாண்டு தொடக்கம், பகல் பத்து, வைகுண்ட ஏகாதசி, ராப்பந்து வைபவங்கள் நடைபெறும்.
தை மாதம்: கனுப்பானரி வேட்டை (அனுப்பானடிக்கு எழுந்தருளல்) மற்றும் தை மாதம் முதல் தேதியில் தாயார் பெருமாள் மாலை மாற்றுதல் போன்ற வைபவங்கள் நடைபெறும்.
மாசி மாதம்: 12 நாட்கள் தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
பங்குனி மாதம்: பங்குனி உத்திரத்தன்று மதுரவல்லித் தாயார் திருக்கல்யாணம். வசந்த உற்சவம் 5 நாட்கள் நடைபெறும். சுக்ல பட்ச துவாதசி அன்று கஜேந்திர மோட்சம், கோவர்த்தனகிரி புறப்பாடு நடைபெறும்.

மண்டல தரிசனம் மாங்கல்ய பாக்கியம்

மதுரை கூடலழகர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். புரட்டாசி சனிக்கிழமை கூடலழகரை தரிசிக்க வரும் பக்தர்கள் அவருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுவார்கள். கூடலழகர் கோவில் வேண்டுதல் ஸ்தலமாக திகழ்கிறது. கோவிலை 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் சுற்றி வந்து வேண்டிக் கொண்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.