மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவில்

181

மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் நேர்த்திக்கடனுக்காக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் கிடாய் விருந்தைப்பற்றி தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள்.

மதுரையிலிருந்து சுமார் 7 கி.மீ. தூரத்தில் சிவகங்கை செல்லும் ரோட்டின் வடபுறம் ரிங்ரோட்டில் இருக்கிறது பாண்டி முனீஸ்வரர் கோயில். இங்கு 39 சென்ட் இடத்தில் சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த இயற்கை அழகில் மதுரையின் காவல் தெய்வமாக ‘பாண்டி முனீஸ்வரர்’ வீற்றிருக்கிறார். 200 ஆண்டுகளுக்கும் முந்தைய வழிபாட்டு தலப்பெருமைக்குரிய இக்கோயில் இருக்கும் இடம், முன்பு மதுரை மாநகரமாக திகழ்ந்தது என்கின்றனர்.

மன்னர் அரண்மனை பகுதியும் இப்பகுதியில் இருந்ததென்றே தொல்லியல் கூற்றுகளும் இருக்கிறது. அதனாலேயே இந்த பாண்டீஸ்வரரை ‘பழமதுரை பாண்டீஸ்வரர்’ என்றழைக்கின்றனர். இதனை மெய்ப்பிக்கும் வகையில் இக்கோயிலைச் சுற்றிய, வயல்வெளி வரப்புகளில் பெரிய, பெரிய செங்கற்களைக் கொண்ட கோட்டைச் சுவர்கள், மதில்கள் இன்றும் இருக்கின்றன. பாண்டி முனீஸ்வரர் முன்பு மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர் என்றும் கூறப்படுகிறது.

இக்கோயிலில் ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து சமபந்தி விருந்தாக உணவுண்ணும் ‘ஒற்றுமைத் திருவிழா’ நடப்பதும், இக்கோயிலின் மிக உன்னத நிகழ்வாக இருக்கிறது. இங்கு நடக்கும் கூட்டு வழிபாடும் சிறப்பாகும். தென் மாவட்டத்தினர் மட்டுமல்லாது, தமிழகம் கடந்தும் வெளிமாநிலத்தவர், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பாண்டி முனீஸ்வரர் கோயிலுக்கு வந்தவண்ணம் உள்ளனர். ‘கிடாய்’ வெட்டி, ‘பொங்கல் வைத்து’ வழிபாடு செய்வதே இக்கோயிலுக்கான சிறப்பாகும்.

கறி உணவுடன் கடவுளுக்கு மதுவும், சுருட்டும் என படைக்கப்பட்டு, மனிதன் இவற்றைக் கடந்தும் நேயத்துடன் ஒன்றுபடுகிற வாழ்வியலை இக்கோயில் வழிபாடு அனைவருக்கும் உணர்த்தி வருகிறது. முன்பு வாரத்தில் வெள்ளி, செவ்வாய்தான் விசேஷம். ஆனால் இப்போதோ பாண்டி கோவில் ‘முனீஸ்வரர் கோயிலில்’ ‘தினந்தோறும் திருவிழா’ என்று சொல்லும் அளவிற்கு பக்தர்கள் வருகை இருக்கிறது. பாரம்பரிய பூசாரிகளால் பூஜிக்கப்படும் இக்கோயிலில், எல்லா முகூர்த்த நாட்களிலும் கூட்டம், மேலும் எகிறுகிறது.

மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் பாண்டி முனீஸ்வரரை தேடிவந்து தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தங்களது வீடுகளில் சுபகாரியங்கள் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றும், நோய்வாய்ப்பட்டவர்கள் அதில் இருந்து மீண்டு வர வேண்டும் என்றும் பாண்டிமுனீஸ்வரரிடம் வேண்டிக்கொள்கின்றனர். தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறிய உடன், நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சிவகங்கை சந்திப்பு வரையிலான சாலையில் பாண்டிகோவில் முன்பு பகல் நேரங்களில் மோட்டார் சைக்கிள்களும், கார்களும் அணிவகுத்து நிற்பதை காணலாம். பிரமாண்ட கட்டிடம் எல்லாம் பாண்டிகோவிலுக்கு கிடையாது.

சிறிய கோபுரத்துடன் அமைந்துள்ள இந்த கோவிலில் குறிப்பிட்ட வம்சாவளியினர் பூஜைகளை நடத்தி வருகின்றனர். பல மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அழகர்கோவில் குலதெய்வமாக இருப்பதை போல, எண்ணிலடங்கா குடும்பத்தினருக்கு வேண்டும் வரம் அளிக்கும் தெய்வமாக பாண்டிமுனீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இங்குள்ள சமயகருப்பு எனும் தெய்வத்துக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் 1,500 ஆடுகளுக்கும் குறையாமல் நேர்த்திக்கடனாக பலி கொடுக்கப்படும். கிராமத்தில் இருந்து வருபவர்கள் தங்களின் சொந்தபந்தங்களை அழைத்து வந்து கறி விருந்து கொடுப்பார்கள்.

அங்குள்ள தலைமை பூசாரி சிவாஜி கூறியதாவது:-

இந்த கோவிலின் 4-வது தலைமுறை பூசாரியாக நான் இருக்கிறேன். எனது மூதாதையர்கள் கரூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். எனது கொள்ளுப்பாட்டியின் கனவில் ஜடாமுனீஸ்வரர் தோன்றி, “இந்த இடத்தில் மண்ணுக்கு அடியில் நான் இருக்கிறேன். என்னை எடுத்து வழிபட்டு வந்தால் நினைத்த காரியத்தை முடித்து காட்டுவேன்” என கூறியுள்ளார். அதன்படி ஊர் பெரியவர்கள் முன்னிலையில் ஜடாமுனீஸ்வரர் சிலையை தோண்டி எடுத்துள்ளனர். அப்போது இருந்து பரம்பரை பரம்பரையாக நாங்கள் பூசாரியாக இருந்து ஜடாமுனீஸ்வரரை வழிபட்டு வருகிறோம்.

1930-களில் இந்த கோவிலை அரசுடைமையாக்குவதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் எங்கள் மூதாதையர், நீதிமன்றங்களை நாடி, அரசுடைமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட கோவில் என உத்தரவு பெற்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் இந்த கோவிலை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர முயற்சி செய்தனர். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றோம். அங்கு, இந்த கோவிலை அரசு கண்காணிக்கலாம். ஆனால் நிர்வாகத்தை பரம்பரைக்காரர்களிடம் கொடுத்து விடுங்கள் என அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. எங்கள் மூதாதையர் பாண்டி என்பவர் பூசாரியாக இருந்தார். அவர் பெயரையும் சேர்த்து பாண்டிமுனீஸ்வரர் கோவில் என அழைக்கப்பட்டு அதுவே தற்போதைய கோவில் பெயராக அமைந்துவிட்டது.

உண்மையில் ஜடாமுனீஸ்வரர்தான் தெய்வத்தின் பெயர். அவரை வணங்கி, வேண்டுபவர்களுக்கு உரிய காரியத்தை அவர் முடித்து கொடுக்கிறார். அதற்காக பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

கிடாய், கோழிகளை பாண்டிமுனீஸ்வரருக்கு அருகில் இருக்கும் சமயகருப்பு எனும் தெய்வத்தின் முன்பாக பலி கொடுக்கும் வழக்கம் தான் உள்ளது. பாண்டிமுனீஸ்வரருக்கு என பலி கொடுப்பதில்லை. இவருக்கு பொங்கல், பால், பன்னீர்தான் விருப்பமான பொருட்கள்.

நினைத்த காரியத்தை நடத்தி முடிப்பதால் பாண்டிமுனீஸ்வரரை குலதெய்வத்தை போல ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வணங்கி செல்கின்றனர்.

இந்துக்கள் மட்டுமல்ல. கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் இங்கு வருகின்றனர். பல ஆயிரம் பேரின் நம்பிக்கையை முனீஸ்வரர் பெற்றதையே இது காட்டுகிறது. தற்போது பலர் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்ற என்ன செய்வது என கேட்கிறார்கள். அதற்கு நாங்கள், விருப்பப்பட்டால் சமயகருப்பை நினைத்து உங்கள் வீடுகளிலேயே பலி கொடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிடுவோம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். சமூக இடைவெளியை பின்பற்றி கோவில் வாசலிலேயே தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.