மதுராந்தகம் திருவெண்காட்டீஸ்வரர் கோயில்!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் என்ற ஊரில் உள்ள கோயில் திருவெண்காட்டீஸ்வரர். இங்கு திருவெண்காட்டீஸ்வரர் மூலவராகவும், உற்சவராகவும் திகழ்கிறார். மீனாட்சி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். சித்ரா பௌர்ணமி, ஆருத்ரா தரிசனம், மகா சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
தோல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டு சென்றால் தோல் நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. இந்தக் கோயிலில் கால பைரவர், உன்மத்த பைரவர், அசிதாங்க பைரவர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரும் உள்ளனர். சொத்து பிரச்சனையால் கவலைப்படுபவர்கள், வழக்கில் வெற்றி பெறவும் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இந்த சோழ குலத்து மன்னர்கள் அதிசயமானவர்கள். அவர்கள் வீரத்தில் எப்படியோ, அப்படி தான் அறத்திலும் சிறந்து விளங்கியவர்கள். அறத்தில் எப்படியோ, அப்படியே தெய்வ பக்தியிலும் திளைத்தவர்கள். அத்தகைய சோழ குலத்தில் உதித்தவர்கள்தான் கண்டராத்தித்தவர். இவர் பெரிய சிவபக்தர். இவரால் உருவானது தான் இந்தக் கோயில். இவருக்கு திருவெண்காடுடைய மகாதேவர், வேதாரண்யேஸ்வரர், ஸ்வேதாரண்யேஸ்வரர், திருவெண்காடுடைய நாயனார் என்ற பெயர்களும் உள்ளன.
பழங்காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் மந்தாரை மரங்கள் நிறைந்து காணப்பட்டது. அதில் அமர்ந்து வெண்மை கொக்குகள் இளைப்பாறியதாக சொல்லப்படுகிறது. இந்தப் பகுதி வெண்மயமான காடாக தோற்றமளித்தது. ஆகையால், இந்தப் பகுதி வெண்காடு என்றும், இங்குள்ள மூலவருக்கு வெண்காட்டு ஈஸ்வரர் என்ற பெயரும் வந்தது. கோயில் கோபுரமானது 5 நிலைகளைக் கொண்டுள்ளது. இதனை நாம் நெருங்கும்போதே நமது மனம் நெகிழ்ந்துவிடும்.
இதையடுத்து உள்ளே சென்றால், கோயில் கொடிமரம், நந்தி தேவர், அவர்களைத் தொடர்ந்து வெளி பிரகாரத்தில் மீனாட்சி அம்மன், பாண்டீஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பாண்டிய மன்னர் தனது தோல் நோய் குணமானதற்கு நன்றிக் கடனாக இவரை பிரதிஷ்டை செய்துள்ளார். இவர்களைக் கடந்து உள்ளே சென்றால், அங்கு திருவெண்காட்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கும்.
மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பலம் அமர்ந்த பெருமானே என்று இத்தலத்து முருகப் பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலானது சோழர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. கொஞ்சி விளையாடும் நகரம், சோறுடைத்த சொர்க்க பூமி, புலிக் கொடியை சின்னமாக கொண்ட தேசம் இது என்று இத்தலம் சிறப்பாக போற்றப்படுகிறது.
