விக்ரமாதித்தன் வழிபட்ட மஹாகாளி ஆலயம்!
திருச்சி மாவட்டத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தின் அருகே மூன்று கிலோ மீட்டருக்குள் இருக்கிறது ஆதி சமயபுரம் என்னும் இனாம் சமயபுரத்தையும், விக்கிரமாதித்தன் வழிபட்ட உஜ்ஜையினி மாகாளிக் கோயிலையும் பற்றி இப்பதிவில் விரிவாக காணலாம் வாருங்கள்.
புராணக் கதை:
காடாறு மாசம், நாடாறு மாசம் என வாழ்க்கை நடத்திய விக்கிரமாதித்தன் ஒரு சமயம் காடாறு மாசத்தின் போது ஒரு சமயம் இங்கே காடாறு மாசம் தங்க வந்ததாயும், அப்போது தன்னுடன் கொண்டு வந்த காளி சிலையை இந்தக் கோயிலில் வைத்து வழிபட்டதாகவும், திரும்பச் செல்கையில் அந்தச் சிலையை எடுக்க முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.
விக்கிரமாதித்தன் எவ்வளவோ முயன்றும் அந்தச் சிலையை எடுக்க முடியாததால் காளியிடம் கெஞ்சுகிறன் தன்னுடன் வரும்படி. காளியோ தான் இங்கேயும் இருக்க ஆசைப்படுவதாயும் தன் சக்தி இங்கும் தங்கும் என்றும் கூற வேறு வழியின்றி அங்கேயே அந்த அம்மனை அப்படியே விட்டுவிட்டு வழிபாடுகள் செய்து வந்தான். ஆனால் இங்கே ஏற்கெனவே ஒரு கோயில் இருந்து வந்திருக்கிறது அல்லவா? அந்தக் கோயில் ஆனந்த செளபாக்கிய சுந்தரியின் கோயில். அம்மன் அர்த்த்நாரீஸ்வர வடிவத்தில் ஆனந்த செளபாக்கிய சுந்தரியாகத் தாண்டவக் கோலத்தில் அசுரனை வதைக்கும் கோலத்தில், ஆனால் அதே சமயம் சாந்தமான பாவனையில் காணப்படுகிறாள். அர்த்த நாரீஸ்வர வடிவமும் விசித்திரமாகக் காணப்படுகிறது.
ஆலயத்தின் அமைப்பு:
வழக்கமாய் அம்பாள் இடப்பக்கமும், ஸ்வாமி வலப்பக்கமுமாய்க் காணப்படும் வடிவம் மாறி அம்பாள் வலப்பக்கமும், ஸ்வாமி இடப்பக்கமுமாய்க் காண்கிறோம். அதோடு அம்மனுக்கு இரண்டு, நான்கு, எட்டு,என்றெல்லாம் கைகள் இல்லாமல் மூன்று கைகளும் உள்ளன. அம்மனுக்குள்ளாக ஈசன் அடக்கம் எனச் சொல்வதைப் போல இங்கும் மூலஸ்தானத்தில் விமானத்தின் மீது ஒரே கலசம் காணப்படுகிறது. பொதுவாகச் சிவன் கோயில்களில் சிவன் சந்நிதியின் மேல் மட்டுமே ஏக கலசம் காணப்படும். ஆனால் இங்கே அம்பாள் கோயிலிலும் ஏக கலசம் காணப்படுகிறது.
மூலஸ்தான விமானம் ஏக கலசத்துடன் மாறுபட்ட தோற்றத்துடன் காணப்படுவதோடு அம்பாளின் வாகனம் ஆன சிம்மமும் அங்கே காணப்படவில்லை. மாறாக ரிஷபம் காணப்படுகிறது. வாயு மூலையில் சுதைவடிவில் உள்ள முருகனுக்கு மேலே சீன மனிதன் ஒருவன் தென்படுவதைப் பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் என்று சொல்கின்றனர். இங்கே தர்ம சாஸ்தாவும் காணப்படுகிறார்.
அய்யனார்:
மனைவி, குழந்தை எனக் குடும்பத்தோடு காணப்படும் சாஸ்தா யானை வாகனத்தில் ஐயனார் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். மூலஸ்தானத்து அம்மனும் புடைப்புச் சிற்பமாகவே காண்கின்றோம். கோயிலின் நுழைவிலேயே மாற்றத்தையும் காணலாம். எல்லாக் கோயில்களிலும் இடப்பக்கம் காணப்படும் விநாயகர் இங்கே வலப்பக்கமும், வலப்பக்கம் இருக்கும் முருகனுக்குப் பதிலாக ஆஞ்சநேயரும் காண்கிறோம். சிவலிங்கம் ஒன்று சுவரில் சிற்பமாய்ச் செதுக்கப் பட்டுள்ளது.
உஜ்ஜையின் மஹாகாளி:
ஆனந்த செளபாக்கிய சுந்தரியின் மூலஸ்தானத்துக்கு அருகேயே ஒரு தனி அறையில் உற்சவர் ஆன அழகம்மை நான்கு கைகளோடு நின்ற திருக்கோலத்தில் காணப்படுகிறார். இவருக்கு அருகே தான் உஜ்ஜையின் மஹாகாளி அம்மனைக் காணலாம். இந்தக் கோயிலின் தல வரலாறு விக்கிரமாதித்தன் சம்பந்தப் பட்டதாகவே உள்ளது. விக்கிரமாதித்தன் வழிபட்ட உஜ்ஜையினி காளியம்மன் சிலை முழுக்க முழுக்க ஸ்வர்ணத்தால் ஆனது என்று கூறப்படுகிறது.
விக்ரமாதித்தன் சுளுவன் சன்னதிகள்:
மேலும் இங்கே விக்கிரமாதித்தனுடன் வந்த வேதாளத்துக்கும், விக்கிரமாதித்தனின் மதியூக மந்திரியான பட்டி என்ற சுளுவனுக்கும் சந்நிதிகள் காணப்படுகின்றன. ஒரு சிலர் விக்கிரமாதித்தனை வேதாளம் கேள்விகள் கேட்டது இங்குள்ள முருங்கை மரத்தில் இருந்த போதுதான் என்றும் கூறுகின்றனர். வேறு எந்தத் தலத்திலும் வேதாளத்திற்கும், சுளுவனுக்கும் சிலைகள் கிடையாது. சுளுவனை வழிபட்டால் விடாமுயற்சி செய்யும் தன்மை கிடைக்கும் என்றும் எதிலும் வெற்றி பெறலாம் என்றும் கூறுகின்றனர். இந்தப் பக்கங்களில் சுளுவன் சாதனை என்னும் சொல்லும் இன்னமும் வழக்கில் உள்ளது. அசையாமல் ஸ்திரமாக இருத்தலை இது குறிப்பிடும் என்கின்றனர்.
பூரண ஆயுள் கொடுக்கும் வெங்கடாஜலபதி:
இவற்றைத் தவிரவும் இங்கே அலமேலு மங்கையுடன் கூடிய பிரசன்ன வெங்கடாசலபதியும் கையில் கதையுடன் காணப்படுகிறார். கதை இருப்பதால் கதாதரர் என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இவரை வணங்கினால் பூரண ஆயுள் கிடைக்கும் என்றும் மரணபயம் இல்லை எனவும் கூறுகின்றனர். சந்தான கிருஷ்ணன் வேதாளம், சுளுவன் சந்நிதிகளுக்கு அருகேயே சந்தான கோபாலகிருஷ்ணன் குழந்தை வடிவில் அருள்பாலிக்கிறார். இவருக்கு வெண்ணெய் அபிஷேஹம் செய்து அன்னதானம் செய்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்று நம்பிக்கை. விலங்குத் துறையான் எனப்படும் காவல் தெய்வம் ஆன கருப்பண்ண சுவாமி இங்கே சங்கிலிக் கருப்பு என்னும் பெயரால் அழைக்கப்படுகிறார்.
காவல் தெய்வங்கள்:
இவர்களைத் தவிரவும் காவலுக்கு மதுரை வீரனும், வெள்ளையம்மாள், பொம்மி சகிதம் காட்சி அளிக்கிறான். அம்பிகையின் தேர்த்திருவிழா சமயம் தேரோட்டத்தில் காவலுக்கு மதுரை வீரனே செல்வான் என்றனர். தேர் நிலைக்கு வந்தவுடன் மதுரை வீரனை மீண்டும் கட்டிவிடுவார்களாம். இதற்கு அடையாளமாய் விலங்கு அங்கே காணப்படுகிறது. நவகிரஹங்கள் இந்தக் கோயிலில் தத்தம் மனைவிமாருடன் காட்சி அளிக்கின்றனர்.
தோல் நோய்கள் தீர்க்கும் சக்தி தீர்த்தம்:
இக்கோயிலின் தீர்த்தம் சக்தி தீர்த்தம் என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. நந்தவனத்தில் உள்ள கிணறே சக்தி தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு ஈசன் தவம் செய்வதாகவும், அவரின் சடாமுடியின் கங்கையே இங்கே தீர்த்தமானதாகவும் ஐதீகம். கிணற்றின் அடியில் நீரூற்று இல்லாமல் பக்கவாட்டில் உள்ள ஒரு ஊற்றின் மூலமே கிணற்றில் நீர்வரத்து காணப்படுகிறது. இந்த தீர்த்தம் தோல் நோய், சித்தப்பிரமை போன்றவற்றிற்கு நன்மை பயக்கும் எனவும், பெண்கள் இந்தக் கிணற்றில் நீர் இறைக்கக் கூடாது எனவும் ஆண்களேஇறைத்துப் பெண்களுக்கு வழங்குவார்கள் எனவும் கூறுகின்றனர்.
