மகாவிஷ்ணு சயன கோலத்தில் அருள்பாலிக்கும் கோவில்கள்

180

மகாவிஷ்ணு சில இடங்களில் அமர்ந்த கோலத்திலும், சில இடங்களில் நின்ற கோலத்திலும், இன்னும் சில இடங்களில் சயன (கிடந்த) கோலத்திலும் பெருமாள் காட்சி தருகிறார். அப்படி அவர் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் சில தலங்களைப் பற்றி சிறு குறிப்புகளாக இங்கே பார்ப்போம்..

வைணவ மூர்த்தியாக இருக்கும் மகாவிஷ்ணுவுக்கு பல்வேறு இடங்களிலும் ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றில் அமர்ந்த கோலத்திலும், சில இடங்களில் நின்ற கோலத்திலும், இன்னும் சில இடங்களில் சயன (கிடந்த) கோலத்திலும் பெருமாள் காட்சி தருகிறார். அப்படி அவர் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் சில தலங்களைப் பற்றி சிறு குறிப்புகளாக இங்கே பார்ப்போம்..

திருவட்டாறு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிறது திருவட்டாறு திருத்தலம். இது திருவனந்தபுரத்திற்கு கிழக்கே 51 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு அருளும் இறைவன், ‘ஆதிகேசவப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் சயன கோலத்தில் மேற்கு நோக்கி பள்ளிகொண்டுள்ளார். ஆதிசேஷனின் மீது சயனித்திருக்கும் இந்தப் பெருமாள், 18 அடி நீளம் கொண்டவர். இவர் கடுகு- சர்க்கரை கலவையால் உருவானவர். இந்தப் பெருமாளை, மூன்று வாசல் வழியாகத்தான் தரிசிக்க முடியும். தாயாரின் திருநாமம், மரகதவல்லி நாச்சியார்.

திருவனந்தபுரம்

மலைநாட்டு திருத்தலமான திருவனந்தபுரத்தில், பாம்பணை மீது பள்ளிகொண்ட கோலத்தில் அனந்த பத்மநாம சுவாமி வீற்றிருக்கிறார். இவர் 12 ஆயிரம் சாளக்கிராம கல்லாலும், அஷ்டபந்தன கலவையாலும் உருவாக்கப்பட்டவர். இவர் ஆதியில் பிரமாண்ட உருவம் கொண்டிருந்தார். பரமனின் உடல் அனந்தபுரத்திலும், திருமுகம் தெற்கே எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவல்லத்திலும், திருப்பாதங்கள் வடமேற்காக 12 கிலோமீட்டர் தூரம் உள்ள திருப்பாப்பூர் திருத்தலத்திலும் அமைந்திருந்ததாம். இதைக் கண்ட திவாகர முனிவர், அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மேனியை சுருக்க வேண்டினார். அதன்படி தன் உருவை 18 அடியாக பெருமாள் சுருக்கிக்கொண்டார். இங்குள்ள தாயார் பெயர், ஸ்ரீஹரி லட்சுமி.

ஸ்ரீவில்லிபுத்தூர்

தேவர்களுக்காக, காலநேமி என்ற அசுரனை சக்கராயுதம் கொண்டு அழித்தார், பெருமாள். பின்னர் சக்கராயுதத்தை புண்ணிய நதிகளில் நீராட்டி, ஒரு ஆலமரத்தின் அடியில் ஆதிசேஷனின் மீது பள்ளிகொண்டார். இதுவே ஸ்ரீவில்லிப்புத்தூர் திருத் தலம். மூலவர் ரெங்கமன்னார். தாயார் ஆண்டாள். இந்த ஆலயம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒன்று வடபத்ரசாயி கோவிலாகவும், இன்னொன்று தென்மேற்கில் நாச்சியார் கோவிலாகவும் காணப்படுகிறது. இந்த இரண்டு கோவில்களுக்கும் இடையே உள்ள நந்தவனத்தில்தான் ஆண்டாள் நாச்சியார் தோன்றினாள்.

திருப்பேர் நகர்

தஞ்சாவூர் மார்க்கத்தில் உள்ளது கோவிலடி. திருப்பேர் நகர் எனப்படும் இந்த இடத்தில் அப்பக்குடத்தான் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. காவிரி-கொள்ளிடம் நதிகளுக்கிடையில் இந்த தலம் உள்ளது. இத்தல பெருமாள் புஜங்க சயனத்தில் மேற்கு திசை நோக்கி அருள்புரிகிறார். தாயார் திருநாமம் கமலவல்லி என்பதாகும். இங்குள்ள பெருமாள், தனது வலது கையில் அப்பக்குடம் ஒன்றை வைத்திருக்கிறார்.

திருமோகூர்

மதுரைக்கு வடகிழக்கே 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருமோகூர். ராஜ கோபுரத்துடன் நான்கு பிரகாரங்கள் கொண்டதாக இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தபோது, அதில் ஒரு துளி இங்குள்ள குளத்தில் விழுந்ததாக சொல்லப்படுகிறது. இந்த குளத்திற்கு தெற்கே பெருமாள் பள்ளிகொண்டுள்ளார். பெருமாள் மோகினியாக வந்து தேவர்களுக்கு அமிர்தம் வழங்கிய தலமாகவும் இது விளங்குகிறது. இங்குள்ள பெருமாளின் கோலத்தை, ‘பிரார்த்தனா சயன கோலம்’ என்கிறார்கள். தாயார் திருநாமம், மோகனவல்லி என்பதாகும்.