சிவபெருமானின் தென்னகத்தின் ‘நவ கயிலாயம்’

78

நவ கயிலாயம்’ என்பது சிவபெருமானின் ஒன்பது திருக்கோவில்களைக் குறிப்பதாகும். ஒன்பது கோவில்களில் நான்கு கோவில்கள் திருநெல்வேலி மாவட்டத்திலும், மற்றவை தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளிலும் அமைந்திருக்கின்றன.

‘நவ கயிலாயம்’ என்பது சிவபெருமானின் ஒன்பது திருக்கோவில்களைக் குறிப்பதாகும். இந்த ஒன்பது சிவன் கோவில்களும், பக்தர்களுக்கு உடல் நலம் மற்றும் செல்வத்தை அளிப்பவையாக உள்ளன. ஒன்பது கோவில்களில் நான்கு கோவில்கள் திருநெல்வேலி மாவட்டத்திலும், மற்றவை தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளிலும் அமைந்திருக்கின்றன.

பாபநாசம்

திருநெல்வேலியில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன், பாபவிநாசர், கயிலாசநாதர் என்று அழைக்கப்படுகிறார். இத்தல இறைவியின் பெயர் உலகாம்பிகை என்பதாகும். இந்தக் கோவில் தீர்த்தமாக, தாமிரபரணி நதி உள்ளது. இந்தத் திருத்தலம் முக்கியமான சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் மிக முக்கியமான அகத்தியர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இது சூரிய தலம் ஆகும்.

சேரன்மகாதேவி

திருநெல்வேலியில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் அம்மைநாதர் என்றும், அம்பாள் ஆவுடைநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இத்தலம் சந்திரனுக்குரியதாக விளங்குகிறது. திருநெல்வேலி சந்திப்பில் இருந்து இங்கு செல்ல பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கோடகநல்லூர்

திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவிக்கு செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் கயிலாசநாதர் என்றும், இறைவி சிவகாமிஅம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த ஆலயம் நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு உரிய திருத்தலமாக திகழ்கிறது.

குன்னத்தூர்

திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவேங்கடநாதபுரத்துக்கு அருகில் உள்ள ஒரு சிறிய குன்றில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் பரமேஸ்வரன், கயிலாயநாதர் என்றும், அம்பாள் சிவகாமசுந்தரி என்றும் பெயர் பெற்றுள்ளனர். இந்த திருத்தலம் ‘சங்காணி சிவன் கோவில்’ என்று பக்தர்களால் அறியப்படுகிறது. இது கேது பகவானுக்குரிய தலமாகும்.

முறப்பநாடு

திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்திலும், தூத்துக்குடி நகரில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது. இந்தக் கோவிலில் கயிலாசநாதர், சிவகாமி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். குரு பகவானுக்குரிய தலமாக இது விளங்குகிறது.

ஸ்ரீவைகுண்டம்

திருநெல்வேலியில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும், தூத்துக்குடியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த திருத்தலம் இருக்கிறது. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள இந்த திருத்தலத்தில் கயிலாசநாதர், சிவகாமி அம்மை என்ற பெயரில் இறைவனும், இறைவியும் அருள்கிறார்கள். இது சனி பகவானுக்குரிய கோவிலாக கருதப்படுகிறது.

தென்திருப்பேரை

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 38 கிலோமீட்டர் தூரத்தில் இந்த திருத்தலம் இருக்கிறது. இங்கு கயிலாசநாதரும், அழகிய பொன்னம்மையும், இறைவன்- இறைவியாக வணங்கப்படுகிறார்கள். இது நவக்கிரகத்தில் புதனுக்குரிய திருக்கோவிலாக திகழ்கிறது.

ராஜபதி

இந்தக் கோவிலானது, தென்திருப்பேரை திருத்தலத்தின் அருகிலேயே அமைந்திருக்கிறது. இங்குள்ள இறைவன் கயிலாசநாதர் என்றும், அழகிய பொன்னம்மை என்ற சிவகாமி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்தக் கோவில் கேதுவை வணங்குவதற்கு ஏதுவான திருத்தலமாக உள்ளது.

சேந்தன்பூமங்கலம்

தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் ஆத்தூர் மற்றும் புன்னக்காயல் அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் கயிலாசநாதர் என்றும், இறைவி சவுந்தர்ய நாயகி என்றும் பெயர்பெற்றுள்ளனர். இந்தக் கோவில் சுக்ரனுக்குரிய தலமாக பாவிக்கப்படுகிறது.