பாதாள படவி லிங்கம் -காலத்தை கடந்து நிற்கும் ஒரு அதிசயம்!!

408

பழங்காலத்தில் பல்வேறு
சிறப்பு மிக்க கோவில்கள் கட்டப்பட்டிருப்பதை நாம்
கண்கூடாக கண்டு வருகிறோம்.

அந்த வகையில் பார்ப்பவரை பிரமிக்க செய்யும் ஒரு பாதாள
சிவலிங்கத்தை பற்றியும் அந்த லிங்கத்திற்கு கடந்த 35 வருடங்களாக அனுதினமும் பூஜை செய்து வரும் ஒரு முதியவரின் சிவத்தொண்டு பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி என்னும் மாவட்டத்தில் உள்ளது ஹம்பி என்னும் ஊர்.

இங்கு கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டிட கலையில்
சிறந்து விளங்கும் பல
அற்புதமான கோவில்கள் கட்டப்பட்டன.

ஆனால் ராஜாவால் கட்டப்படாமல் ஒரு ஏழை பெண்ணால் கட்டப்பட்ட ஒரு வியத்தகு பாதாள சிவ லிங்கமும் இங்கு உள்ளது.

ஒரு ஏழை பெண் தன்னுடைய வருவாய் கொண்டும் பிறரிடம் யாசகம் பெற்றும் கட்டிய அந்த பாதாள லிங்கம் “படவி லிங்கம்” என்றழைக்கப்படுகிறது.

படவி என்றால் ஏழை பெண் என்று பொருள்.

ஒரே சிறிய நுழைவு வாயிலை கொண்ட பாதாள அறைக்குள் இந்த லிங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

மூன்று கண்களோடு, பார்ப்பதற்கு பிரமாண்டமாக காட்சி தரும் இந்த லிங்கம் இருக்கும் அறைக்குள் ஒரு பாதாள கால்வாய் ஓடிக்கொண்டே இருக்கிறது.

அந்த கால்வாயின் நீரோட்டமானது அந்த இடத்திற்கு ஒரு புது வித உணர்வை தருகிறது.

கங்கை நதியானது சிவனின் கட்டுப்பாட்டில் உள்ளதை உணர்த்தவே லிங்கத்தின் கீழே இங்கு எப்போதும் நீர் ஓடிக்கொண்டிருக்கிறது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

ஹம்பியில் எத்தனையோ சிவலிங்கங்கள் இருந்தாலும் இதுவே மிகப்பெரிய சிவலிங்கமாக உள்ளது.

சுமார் 3 மீட்டர் உயரம் கொண்ட அந்த லிங்கத்தின் மீது எப்போதும் சூரிய ஒளி படும்படி இந்த ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாதாள லிங்கம் உள்ள கால்வாயில் தண்ணீர் எப்போதும் செல்வதால் பக்தர்கள் அனைவரும் வெளியில் இருந்தே லிங்கத்தின் மீது பூக்களை தூவி வழிபடுகின்றனர்.

எப்போதும் தண்ணீரிலேயே இருக்கும் இந்த லிங்கத்திற்கு
பூஜை செய்வது அவ்வளவு
எளிதான காரியம் அல்ல.

முட்டி அளவு உள்ள தண்ணீரில் நடந்து சென்று பின் லிங்கத்தை பிடித்து அதன் மீது ஏறியே பூஜை செய்ய முடியும்.

ஆனால் 86 வயது உள்ள கிருஷ்ண பட் என்ற முதியவர் ஹம்பியிலுள்ள “படவி லிங்கம்” கோயிலின் பாதாள சிவலிங்கத்திற்கு கடந்த 35 வருடங்களாக அனுதினமும் பூஜை செய்து வருகிறார்.

அக்காலத்தில் பாகுபலியைப் போல் உடல் தோற்றம் பெற்றிருந்த கிருஷ்ண பட் தன்னந்தனியாக இந்த உயரமான சிவலிங்கத்திற்கு 1984 முதல் பூஜை செய்து வருகின்றார்.

ஆண்டுக்கு இருமுறைதான் இவருக்கு ஊதியம் வழங்கப்பட்டாலும் எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் தன்னந்தனியாக இவர் பூஜை செய்து வருவதுதான் ஆத்மார்த்தமான சிவத்தொண்டு.

ஓம் சிவாய நம