பகையை விலக்கும் சங்கிலி கருப்பராயர் கோவில்

225

கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி குறிஞ்சி நகரில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கிலி கருப்பராயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி குறிஞ்சி நகரில் பிரசித்தி பெற்ற சங்கிலி கருப்பராயர் கோவில் அமைந்துள்ளது. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் கன்னிமூல கணபதி, கன்னிமார் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. இந்தக் கோவிலின் தலவிருட்சம் அரச மரமாகும்.

தல வரலாறு

குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினர் சங்கிலி கருப்பராயரை மனமுருகி வழிபட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். தற்போது கோவில் அமைந்துள்ள இடம், முன்பு விவசாய பூமியாக இருந்துள்ளது. மாலை நேரங்களில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச விவசாயிகள் செல்லும்போது ராஜநாகம் ஒன்று அவர்களை தண்ணீர் பாய்ச்ச விடாமல் தடுத்துள்ளது. இதனால் பயந்துபோன விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சாமல் திரும்பிச் சென்றுள்ளனர். அன்று இரவு அவர்களது கனவில் தோன்றிய சங்கிலி கருப்பராயர் இப்பகுதியில் தனக்கு கோவில் கட்டி வழிபட்டால் சகல ஐஸ்வர்யம் தருவதுடன், வேண்டிய வரங்களை அருள்வதாக கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் கருப்பராயருக்கு கோவில் கட்டி வழிபடத் தொடங்கினர்.

கிழக்கு திசை நோக்கி சங்கிலி கருப்பராயர் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் அரச மரம் ஒன்று இருந்தது. அந்த மரம் திடீரென்று பட்டுப்போய் கீழே விழுந்தது. இருப்பினும் அந்த மரம் சங்கிலி கருப்பராயரின் அருளால் மீண்டும் துளிர்த்து தற்போது மரமாக வளர்ந்து உள்ளது.

திருவிழா

தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எதிரி தொல்லை நீங்க, தொழில்வளம் பெருக, குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் கருப்பராயருக்கு எலுமிச்சை மாலை அணிவித்து ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டுச் செல்கிறார்கள். மேலும் சாமிக்கு அரிவாள், கத்தி, சூலம், கண்மலர், நாய் பொம்மை ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகிறார்கள். தினமும் காலை 6 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 9 மணியளவில் நடை அடைக்கப்படுகிறது. அதன் பிறகு மாலை 6 மணியளவில் மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 9 மணியளவில் கோவில் நடை சாத்தப்படுகிறது.

ஆடிமாதம் அமாவாசையன்று கோவில் ஆண்டு திருவிழா நடைபெறும். அன்றைய தினம் மூலவருக்கு பால், தேன், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். இரவு 7 மணியளவில் சங்கிலி கருப்பராயருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அதன் பிறகு 7 நாட்களுக்கு பிறகு ஆடுகள் பலியிடப்படும். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்து செல்வார்கள்.