சாத்தங்குடி விஸ்வநாத சுவாமி கோயில்!

75

சாத்தங்குடி விஸ்வநாத சுவாமி கோயில்!

சாத்தங்குடி விஸ்வநாத சுவாமி கோயில்! பாணலிங்கம் உருவில் உள்ள இறைவன் சாத்தங்குடி எனும் கிராமத்தில் உள்ள விசுவநாத சுவாமி ஆலயத்தில் அருள்புரிகிறார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

விசுவநாதர், விசாலாட்சிபொதுவாக சிவாலயங்களில் மூலவரின் விக்கிரகம் கறுப்பு வண்ணத்தில் இருப்பது இயல்பு. அபூர்வமாக சில ஆலயங்களில் மரகத லிங்கம், பவள லிங்கம் இருப்பது உண்டு. ஆனால் பாணலிங்கம் ‘மதுவர்ணம்’ என அழைக்கப்படும் தேன் நிறத்தில் காணப்படுவது மிகவும் அற்புதமான அமைப்பாகும்.

ஆம். இப்படிப்பட்ட ஒரு பாணலிங்கம் உருவில் உள்ள இறைவன் சாத்தங்குடி எனும் கிராமத்தில் உள்ள விசுவநாத சுவாமி ஆலயத்தில் அருள்புரிகிறார். சாத்தங்குடி ஒரு சின்னஞ்சிறிய அழகிய கிராமம். உத்திரவாகினி எனும் கொள்ளிடம் ஆற்றின் தென் கரையிலும், திருப்புன்கூர் மற்றும் தலையாலங்காடு எனும் தலங்களுக்கு வடமேற்கிலும், திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் ஆலயத்திற்கு வடகிழக்கிலும், செவ்வாய் தலமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு மேற்கிலும், இலுப்பைப்பட்டு திருநீலகண்டர் ஆலயத்திற்கு கிழக்கிலும் என சுற்றிலும் சிவ தலங்கள் சூழ அமைந்துள்ளது சாத்தங்குடி விஸ்வநாத சுவாமி ஆலயம்.

முகப்பில் மொட்டைக் கோபுரம். அதைத் தாண்டியதும் விசாலமான பிரகாரம். அந்தப் பிரகாரத்தின் நடுவே நந்தியும், பலிபீடமும் இருக்க, அடுத்து உள்ளது சிறப்பு மண்டபம். அதை அடுத்து மகாமண்டபமும், அர்த்த மண்டபமும் இருக்கின்றன. இதனையடுத்து இருக்கும் கருவறையில் இறைவன் விசுவநாத சுவாமி லிங்கத் திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

இறைவனின் ஆவுடை பாகம் சதுரமாகவும், நிறம் மதுவர்ணம் என அழைக்கப்படும் தேன் நிறத்திலும் அமைந்துள்ளது. பாணலிங்கத்தின் நிறம் பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் பலவித அபிஷேகங்களாலும், எண்ணெய் சாற்றுவதாலும் மாறாத நிலையிலேயே உள்ளது.

இறைவன் சன்னிதிக்கு வடபுறம் இறைவி விசாலாட்சியின் சன்னிதி உள்ளது. அன்னை நின்ற கோலத்தில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். அன்னை தன் ஒரு கரத்தில் உத்திராட்ச மாலையையும், இன்னொரு கரத்தில் தாமரை மலரையும் ஏந்தி காட்சி தருகிறாள். அன்னையின் மற்ற இரு கரங்கள் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருகின்றன. தவிர அன்னை இங்கு திருமண கோலத்தில் காட்சி தருவது சிறப்புக்குரியதாகும். எனவே இங்கு திருமணமாக வேண்டி காத்திருப்பவர்களும், கிரகப் பாதிப்புகளால் திருமணமாக தாமதமாகும் பெண்களும், இங்கு வந்து அன்னையை ஆராதனை செய்து வந்தால், அவர்களுக்கு விரைவாக திருமணம் நடைபெறுவது உறுதி என்கின்றனர் பக்தர்கள்.

இங்கு இறைவனும் இறைவியும் ஒரே முகமாக கிழக்கு நோக்கி அருள்பாலிப்பது ‘வீரசக்தி’ என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பும் ஒரு சிறப்பான அமைப்பாகவே பக்தர்களால் கருதப்படுகிறது. ஆலயத்தின் தீர்த்தம் கங்கா தீர்த்தம் உள்ளது. தலவிருட்சம் வில்வம். இறைவனின் தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஆலய திருச்சுற்றில் மேற்கில் பிள்ளையார், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னிதிகளும், வடக்கில் சண்டீகேஸ்வரர் சன்னிதியும் உள்ளன.

கிழக்கில் சூரியன் நான்கு கைகளுடனும் திருவாட்சியுடனும் ஒரே கல்லினால் ஆன நான்கு அடி உயரத்தில் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இறைவன் -இறைவி சன்னிதிக்கு இடையே கயிலாசநாதர் சன்னிதி உள்ளது.

இந்த ஆலயம் முற்றிலும் கருங்கல் வேலைபாடுகளால் ஆனது. இந்த ஆலயத்தில் பூஜை முறைகள் மற்றும் திருவிழாக்கள் சைவ ஆகமங்களில் ஒன்றாகிய காரண ஆகமத்தின் படி நடத்தப்படுகின்றன. இந்த ஆலய விழாக்களாக நால்வர் திருநட்சத்திரம், வருடப் பிறப்பு, நவராத்திரி, சிவராத்திரி, விஜயதசமி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, திருக்கார்த்திகை, சங்கராந்தி, தை வெள்ளி, பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் இறைவன் – இறைவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

கன்னியரின் கவலை தீர்க்கும் அன்னையாகவே இங்கு அருள்பாலிக்கும் விசாலாட்சி விளங்குகிறாள் என்று பக்தர்கள் நம்புவது உண்மைதான்.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம் :

கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் – சீர்காழி பேருந்து தடத்தில் உள்ள நாகை மாவட்டம் மணல்மேடு என்ற ஊரில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது சாத்தங்குடி என்ற இந்த தலம்.