Monday, October 16, 2023
HomeAalayangalசீயாத்தமங்கை திருச்சாத்தமங்கை கோயில்!

சீயாத்தமங்கை திருச்சாத்தமங்கை கோயில்!

சீயாத்தமங்கை திருச்சாத்தமங்கை கோயில்!

ஒவ்வொரு அண்டும் ஆவணி மூல விழா, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

தல சிறப்பு:

மூலவர் அயவந்தீசுவரர் சுயம்புலிங்கமாக மேற்குநோக்கி அருள்பாலிக்கிறார். இத்தல அம்மன் இருமலர்க்கண்ணம்மையின் நெற்றியில், சிவனைப்போல நெற்றிக்கண் இருப்பது சிறப்பு. அர்த்தநாரீஸ்வரத் திருமேனி ரிஷபத்தின் தலைமீது ஒரு கை வைத்திருக்கும் அமைப்பில் இருப்பது சிறப்பம்சமாகும்.திருநீலநக்க நாயனார் அவதார தலம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 144 வது தேவாரத்தலம் ஆகும்.

பொது தகவல்:

மேற்கு நோக்கிய திருக்கோயில். சுவாமி, அம்பாள் சன்னதிகள் தனித்தனி வாயில்களுடனும், கோபுரங்களுடனும் மேற்கு நோக்கியே உள்ளன. உயர்ந்த சுற்றுமதிலையுடைய பெரிய கோயில். ஆலயத்தின் பக்கத்தில் நகரத்தார் சத்திரம் உள்ளது. சுவாமி ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது, விசாலமான உள் இடம், வெளிச்சுற்றில் வலம் வரும்போது சந்திரன், சனிபகவான் (காகத்தின் மீது ஒரு காலூன்றிய அமைப்பில்) சப்தமாதர்கள், பைரவர், நவகிரகங்கள், மாலிங்கம், விசுவநாதர் விசாலாட்சி, விநாயகர் முதலிய சன்னதிகள் உள்ளன.

உள்வாயிலைக் கடந்து முன்மண்டபம் அடைந்து, வலம் வரும் போது, வள்ளி தெய்வயானை சுப்பிரமணியர், மகாலட்சுமி, நால்வர் சன்னதிகள் உள்ளன.
அடுத்து திருநீலநக்க நாயனார், அவருடைய மனைவி ஆகியோரின் உருவங்கள் உள்ளன. நாயனாரின் மனைவியின் பெயர் மங்கையர்க்கரசி என்று இங்கு வழக்கில் சொல்லப்படுகிறது. சோமஸ்கந்தர், மகாகணபதி சன்னதிகளைத் தரிசித்துப் படிகளேறி உட் சென்றால் வலதுபுரம் உள்ள நீலநக்கர், அவருடைய மனைவி, நடனசுந்தரர் முதலிய உற்சவத் திருமேனிகளைத் தரிசிக்கலாம். நடராசசபை உள்ளது. அம்பலக்கூத்தர், அம்மை சிவகாமி மணிவாசகருடன் காட்சி தருகின்றார்.

(சோழர் காலக்) கல்வெட்டில் இத்தலத்து இறைவன் ‘ அயவந்தி உடையார் என்று குறிக்கப்பட்டுள்ளார். திரிபுவனச்சக்கரத்தில், குலோத்துங்க சோழர், இராசராசதேவர் காலத்தியவை.

தலபெருமை:

திருநீலநக்க நாயானரின் அவதாரத் தலம். கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, நர்த்தனகணபதி, லிங்கோற்பவர், பிரம்ம, பிட்சாடனர், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரத் திருமேனி ரிஷபத்தின் தலைமீது ஒரு கை வைத்திருக்கும் அமைப்பில் இருப்பது தரிசிக்கத்தக்கது. இம்மூர்த்தங்களுடன் அகத்தியரும் உள்ளார்.
ருத்ர வியாமளா தந்திர’ ஆகம முறைப்படி நாடொறும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஆவணி மூலவிழா சிறப்பாக நடைபெறுகிறது. 1945ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ள இக்கோயிலுக்குப் பக்கத்தில் திருமருகல், திருநள்ளாறு முதலிய திருமுறைத் தலங்கள் உள்ளன. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளியபோது திருநீலநக்கர் வரவேற்று அவருடைய நட்பைப் பெற்றதும் இத்தலமேயாகும்.

தல வரலாறு:

திருநீலநக்க நாயனார் அவதரித்ததும், திருத்தொண்டு புரிந்ததும் இத்தலமேயாகும். ஒரு சமயம் நாயனார் தன் மனைவியாருடன் இத்தல இறைவனை வழிபடத் திருக்கோவிலுக்குச் சென்றார். அப்போது ஒரு சிலந்திப் பூச்சி இலிங்கத்தின் மீது விழுந்தது. மனைவியார் அன்பு மேலீட்டினால் அப்பூச்சியை வாயால் ஊதி அகற்றினார். இதைப் பார்த்த நாயனார் தமது மனைவியாரின் இச்செயல் தகாதது என்று எண்ணி அவரைத் துறந்தனர். மனைவியாரும் வீடு செல்லாது கோவிலில் கவலையுடன் இருந்தார்.

அன்று இரவு வீட்டில் நாயனார் தூங்குகையில் சிவபெருமான் அவருடைய கனவில் தோன்றி அவர் மனைவியர் ஊதின இடத்தை தவிர ஏனைய இடமெல்லாம் சிலந்தியின் கொப்புளம் இருப்பதைக் காட்டி அவ்வம்மையாருடைய அன்பின் பெருக்கை வெளிப்படுத்தி அவரை நாயனாரோடு கூட்டுவித்த பெருமை வாய்ந்த தலமாகும்.

சாத்த மங்கை என்று உலகெலாம் புகழ் வுறும் தகைத்தால் வாய்த்த மங்கல மறையவர் முதல்பதி வனப்பு என்பது சேக்கிழார் பெருமான் திருவாக்கு
ஆச்சார்யராம் திருஞானசம்பந்தப் பெருமான் நீலகண்டப் பெரும்பாணர்க்கு இன்று தங்க ஓர் இடம் கொடுத்து அருளுவீர் என்று இவரிடம் இறைஞ்சி கேட்கும் அளவிற்கு நாயனார் பெருமை சால்புடைத்தவர் ஆவார்.

யாழ்முரலும் நாயனாருக்கு வேதிகைக்கு அருகே இடங்கொடுத்து 1600 வருடங்களுக்கு முன்பே சாதிஒழிப்பு புரட்சி செய்தவர் நம் நீலநக்க நாயனார் ஆவார்
அவர் அவதரித்த திருப்பதி திருச்சாத்தமங்கை என்பது, இது தற்காலத்தே சீயாத்தமங்கை என்று வழங்குகின்றது.

நாகையில் இருந்து வாஞ்சூர் வழியே சன்னாநல்லூர் செல்லும் சாலையில் 18 கிமீ தொலைவில் அமைந்துள்ளது, சீயாத்தமங்கை என்ற கைக்காட்டியில் இருந்து 1 கிமீ தொலைவில் வடக்கே கிராம உட்புறத்தில் ஆலயம் உள்ளது. இது அயன் வந்தித்த தலம் ஆதலின் அயவந்தீச்சரம் என்று சிறப்பு பெயருடன் விளங்குகின்றது.

இத்தலத்திற்கு முதல் நாள் மதிய வேளையில் எழுந்தருளும் பிள்ளைப் பெருமானார், நீலநக்க நாயனாரது திருமனையில் தம் திருக்குழாத்தினருடன் மதிய உணவும் எடுத்து பின் அன்று இரவு உணவும் எடுத்து கொண்டு அங்கேயே இரவு தங்கியிருந்தனர் என்று சேக்கிழார் பெருமான் காட்டும் காட்சி எண்ணி எண்ணி இன்புறத் தக்கதாம்
மறுநாள் விடிந்த போதில் திருநீலநக்க நாயனாரொடும் அயவந்திக்கு எழுந்தருளிய பிள்ளையார் திருமலர் கொன்றை மாலை என்று எடுத்து பதிகம் பாடினர், அப்பதிகத்தின் இரண்டாம் பாடலில் அடிகள் நக்கன் என்றும் கடைக்காப்பில் நிறையினார் நீலநக்கன் என்றும் நாயனாரை சிறப்பித்து பாடினார்
இதனை பதிக நாள்மலர் கொண்டு தம்பிரான் கழல் பரவி அதிக நண்பினை நீலநக்கருக்கு அருளி என்று காட்சி செய்யும் பாக்கிழாராம் எந்தை சேக்கிழார் பெருமானின் திருவாக்கு எண்ணுந்தொறும் எண்ணுந்தொறும் இனிமையே பயப்பதாம்
பொங்கு செந்தமிழ் திருப்பதிகத் தொடையாம் அதன் பாடல்கள் இவை
பண்: பஞ்சமம்
பாடல்
திருமலர்க் கொன்றைமாலை திளைக் கும்மதி சென்னிவைத்தீர்
இருமலர்க் கண்ணிதன்னோடு உடனாவதும் ஏற்பதொன்றே
பெருமலர்ச் சோலைமேகம் உரிஞ்சும்பெருஞ் சாத்தமங்கை
அருமலராதி மூர்த்தீ அயவந்தி அமர்ந்தவனே
பொடிதனைப் பூசுமார்பிற் புரி நூலொரு பாற்பொருந்தக்
கொடியன சாயலாளோடு உடனாவதுங் கூடுவதே
கடிமணம் மல்கிநாளுங் கமழும்பொழிற் சாத்தமங்கை
அடிகள் நக்கன் பரவ அயவந்தி யமர்ந்தவனே.
நூனலந் தங்குமார்பின் நுகர் நீறணிந்து ஏறதேறி மானன நோக்கிதன்னோடு உடனாவதும் மாண்பதுவே
தானலங் கொண்டுமேகந் தவழும்பொழிற் சாத்தமங்கை
ஆனலந் தோய்ந்த எம்மானயவந்தி யமர்ந்தவனே
பொருள்:
தெய்வத்தன்மை பொருந்திய கொன்றை மலர்களை மாலையாக அணிந்தவனும் , சந்திரனைத் தலையில் தரித்தவனும் , இரு தாமரை மலர் போன்ற கண்களையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு , நறுமணம் பெருகும் மலர்கள் நிறைந்த சோலைகளிலுள்ள மரங்கள் மேகத்தை உராயும்படி விளங்கும் திருச்சாத்த மங்கை என்னும் திருத்தலத்தில் , உலகிற்கு ஒப்பற்றவனாகி விளங்கும் ஆதிமூர்த்தியும் ஆகிய சிவபெருமான் அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார் . இத்திருத்தலத்தின் அம்பிகையின் திருப்பெயரான இருமலர்க்கண்ணம்மை என்பது இப்பாடலில் உணர்த்தப்படுகின்றது.

சிவபெருமான் திருவெண்ணீற்றினைப் பூசிய திருமார்பில் முப்புரிநூல் அணிந்து , பூங்கொடி போன்ற மெல்லிய சாயலுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகிறான் . நறுமண மலர்கள் நாளும் பூத்து வாசனை வீசும் சோலைகளையுடைய திருச்சாத்தமங்கையில் சிவபெருமான் திருநீலநக்க நாயனார் போற்றி வழிபட அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான்
முப்புரிநூல் அணிந்த திருமார்பில் திருவெண்ணீற்றினைப் அணிந்து, இடப வாகனத்திலேறி, மான் போன்ற மருண்ட பார்வையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவன் சிவபெருமான். மேகத்தைத் தொடும்படி உயர்ந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருச்சாத்த மங்கை என்னும் திருத்தலத்தில் பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் திருமுழுக் காட்டப்படும் சிவபெருமான் திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .
சிவ சிவ
திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய சிவயநம சிவயநம சிவயநம
சிவசிவ என்கிலர் தீவிணையாளர்
சிவசிவ என்றிட தீவினை மாளும்
சிவசிவ என்றிட தேவரும் ஆவர்
சிவசிவ என்றிட சிவகதி தானே
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
ஓம் நமசிவாய சிவயநம திருச்சிற்றம்பலம்

RELATED ARTICLES

Most Popular