Thursday, October 19, 2023
HomeAalayangalசயன கோலத்தில் காட்சியளிக்கும் வல்வில் ஸ்ரீ ராமர் ஆலயம்!

சயன கோலத்தில் காட்சியளிக்கும் வல்வில் ஸ்ரீ ராமர் ஆலயம்!

சயன கோலத்தில் காட்சியளிக்கும் வல்வில் ஸ்ரீ ராமர் ஆலயம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருபுள்ளம்பூதங்குடி அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் பிரதான இறைவனாக ஸ்ரீ ராமர் வல்வில் ராமன், சக்கரவர்த்தி திருமகன் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக இது இருக்கிறது.

ஆலயத்தின் சிறப்பு:

இவ்வாலயத்தில் அருள்பாளிக்கும் இறைவி, பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் ஸ்தல விருக்ஷமாகப் புன்னை மரம் இருக்கிறது. கோயிலின் தீர்த்தம் ஜடாயு தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.

புராணக் கதை:

ஜடாயு எனப்படும் கழுகுகளின் தலைவனாகிய புள்ளிற்கு ராமன் ஈமக்ரியைகள் செய்த ஸ்தலம் என்பதால் இது திருப்புள்ள பூதங்குடி ஆனது. ஸ்தல புராணத்தின் படி சீதா பிராட்டியாரைத் தனது புஷ்பக விமானத்தில் இலங்கைக்கு ராவணன் கவர்ந்து சென்ற போது, பட்சிகளின் ராஜனாகிய ஜடாயு சீதா தேவியை மீட்க ராவணனை எதிர்த்துப் போரிட்டார். மிகுந்த ஆற்றல் வாய்ந்த ராவணன் ஜடாயுவைத் தீவிரமாகக் காயப்படுத்தி, ஜடாயுவின் இரண்டு இறகுகளையும் வெட்டி வீழ்த்தினான்.

சீதையைத் தேடிக்கொண்டு இப்பகுதிக்கு வந்த ராம லக்ஷமணர் ராமரின் பெயரை முனகிக் கொண்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஜடாயுவைக் கண்டு அவரை ஆசுவாசப்படுத்தினர். தன்னை ஸ்ரீராமர் ஏந்தியிருக்க. ராவணன் சீதையை இலங்கைக்குக் கவர்ந்து போன செய்தியைக் கூறிய பின்பு உயிர் நீத்தார் ஜடாயு. ஜடாயுவின் வீரம் மற்றும் தன் மீதான பக்தியை எண்ணி உருகிய ஸ்ரீராமர் ஜடாயுவிற்கு தானே மகன் ஸ்தானத்தில் இருந்து ஈமக்ரியைகளை செய்ய முற்பட்டார்.

ஈமக்ரியைகள் செய்ய, மனைவி, உடன் இருப்பது அவசியம். இதை எண்ணிய ராமர் தன் மனைவி சீதா தேவியை மானசீகமாக நினைத்தார். அப்போது சீதையின் மறுஅம்சமான பூமாதேவி தோன்றி ஸ்ரீ ராமருடன் இணைந்து ஈமக்கிரியைகளை செய்தனர். இதனடிப்படையிலேயே இந்த வல்வில் ராமர் கோயில் கட்டப்பட்டது.

சயன கோலத்தில் காட்சியளிக்கும் ஸ்ரீ ராமர்:

பொதுவாக ராமர் கோயில்களில் ராமர் நின்ற கோலத்தில் காட்சி தருவார். ஆனால் இந்த வல்வில் ராமர் கோயிலில் ராமர் சயன கோலத்தில் காட்சி தருகிறார். இவர் கிழக்கு திசை நோக்கி புஜங்க சயன கோலத்தில் சோபன விமானத்தின் கீழ் சயனித்தவாறு பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.

வைஷ்ணவர்களைப் பொறுத்தவரை இரண்டு பூதபுரிகள் உண்டு. ஒன்று காஞ்சிபுரத்தில் ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூர். இதை ஆழ்வார்கள் சிறப்பித்தார்கள். மற்றொன்று தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் இந்த புள்ள பூதங்குடியை வைஷ்ணவ ஆச்சார்யர்கள் சிறப்பித்தார்கள்.

பலன்கள்:

நவகிரகங்களில் புதன் க்ரஹத்திற்குரிய பரிகார கோயிலாக வல்வில் ராமன் கோயில் இருக்கிறது. திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடத் திருமணத் தடை நீங்கும். வேலைகளில் இருப்பவர்கள் தங்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க இக்கோயிலில் இருக்கும் நரசிம்மருக்குத் திருமஞ்சனம் செய்து வழிபடுவதால் பதவி, உத்தியோக உயர்வுகள் கிடைக்கப் பெறுவார்கள் என்பது பக்தர்களின் வாக்காக இருக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + five =

Most Popular