திருமுருகநாதர் திருக்கோவில்- திருப்பூர்

70

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகில் இருக்கிறது, திருமுருகன்பூண்டி என்ற திருத்தலம். இங்கு திருமுருகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகில் இருக்கிறது, திருமுருகன்பூண்டி என்ற திருத்தலம். இங்கு திருமுருகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. திருமுறை பாடல்கள் இடம்பெற்ற இந்தக் கோவில், மேற்கு திசை நோக்கி அமைந்திருக்கிறது. கோவிலுக்கு வெளிப்புறம் கொங்குநாட்டு தலங்களின் சிறப்புக்கு உரித்தான வகையில், கருங்கல்லால் ஆன தீப ஸ்தம்பம் காணப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு மற்ற கோவில் களைப் போல நுழைவு கோபுரம் என்று எதுவும் இல்லை.

நான்கு புறமும் உயர்ந்த மதில்களை அரணாகக் கொண்டு, சுமார் 1 ஏக்கர் பரப்பரளவில் இந்தக் கோவில் இருக்கிறது. கோவிலுக்குள் 2 பிரகாரங்கள் காணப்படுகின்றன. கோவிலில் மூலவராக வீற்றிருக்கும், திரு முருகநாதர், சிவலிங்க வடிவில் மேற்கு திசை நோக்கி காட்சியளிக்கிறார். முருகப்பெருமான் வழிபடுவதற்கு முன்பாக, ‘மாதவிநாதர்’ என்று அழைக்கப்பட்ட இத்தல இறைவன், முருகப்பெருமான் பூஜித்து வழிபட்ட பிறகு ‘திருமுருகநாதர்’ என்று பெயர் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது.

ஆலயத்தின் உள் பிரகாரத்தில் நிருதி விநாயகர், சண்முகர், துர்க்கை, பைரவர், சனீஸ்வரர் மற்றும் நவக் கிரக சன்னிதிகள் உள்ளன. மூலவர் சன்னிதியின் வலது பக்கம் தெற்குப் பார்த்த நிலையில் முருகன் ஆறு முகங்களுடன் காட்சி தருகிறார். இடதுபுறம் மேற்குப் பார்த்த நிலையில் அம்பாள் ஆவுடைநாயகியின் சன்னிதி அமைந்துள்ளது. இந்தக் கோவில் வளாகத்தில் கேது சன்னிதி இருக்கிறது. கேது கிரகம் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்கின்றனர்.

சேரமான் நாயனாரிடம் பெற்ற பரிசுப் பொருட்களுடன், சிவ யாத்திரையை மேற்கொண்டார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். அப்போது சுந்தரரை சோதிக்க எண்ணிய சிவபெருமான், தன்னுடைய பூதகணங்களை அனுப்பி, சுந்தரரிடம் இருக்கும் பரிசுப் பொருட்களை கொள்ளையடிக்கும்படி கூறினார். சுந்தரர் திருமுருகன்பூண்டி அருகே வந்தபோது பூதகணங்கள், திருடர்கள் வேடத்தில் வந்து அவரிடம் இருந்த பரிசுப் பொருட்களை பறித்துச் சென்றனர். இதனால் கவலை அடைந்த சுந்தரர், திருமுருகன்பூண்டி சென்று இறைவன் மேல் பதிகம் பாடி முறையிட்டார்.

இறைவன் நேரில் தோன்றி கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீண்டும் சுந்தரரிடம் ஒப்படைத்தார். இதனை விளக்கும் வகையில் இக்கோவில் மண்டபத்தில் வில் ஏந்திய வேடுவன் கோலத்தில் சிவபெருமான் சிற்பமும், பரிசுப் பொருட்களை பறிகொடுத்த சுந்தரர் கவலையுடன் இருப்பது போன்றும், பின்னர் ஈசனால் பரிசுப்பொருட்களை திரும்ப பெற்று மகிழ்வாக இருப்பது போன்றும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இழந்த பொருளை மீண்டும் பெற்றிட பரிகாரத் தலமாக திருமுருகன் பூண்டி தலம் விளங்குகிறது.

கோவிலின் உள்ளே சண்முக தீர்த்தமும், ஞான தீர்த்தமும் காணப்படுகின்றன. சித்த பிரமை பிடித்தவர்கள் இங்கு தங்கி நீராடி சுவாமியை வழிபட்டால் அவர்களுடைய சித்த பிரமை நீங்கும் என்பது நம்பிக்கை. இங்கு மாசி மாதம் பெருந்திருவிழா நடக்கிறது. கார்த்திகை, சஷ்டி, விசாகம், பிரதோஷம், ஆடி அமாவாசை மற்றும் தமிழ் மாதம் முதல் திங்கள் அன்று ருத்ராபிஷேகம், சூரசம் ஹாரம், பங்குனி உத்திரம் ஆகிய முக்கிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

திருப்பூரில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் திருமுருகன்பூண்டி திருக்கோவில் அமைந்திருக்கிறது. இங்கு செல்ல திருப்பூரில் இருந்து ஏராளமான பஸ் வசதிகள் இருக்கின்றன.