அரூப வடிவில் அன்னையுடன் காட்சியளிக்கும் ஈசன் – திருநெடுங்களநாதர் ஆலயம்!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம், திருநெடுங்குளத்தில் அமைந்துள்ளது திருநெடுங்களநாதர், மங்களாம்பிகை ஆலயம்.
ஆலயத்தின் சிறப்பு:
இவ்வாலயத்தில் அருள்பாளிக்கும் மூலவர் திருநெடுங்களநாதர் என்றும் அம்பாள் மங்களாம்பிகை என்றும் அருள்பாளிக்கிறார். இக்கோவிலின் தீர்க்கும் அகத்தியர் தீர்த்தம் ஆகும். தல விருட்சம் வில்வம் மரமாகும்.
தல வரலாறு:
மங்களநாயகி அம்பாள் இத்தல ஈசனின் ஒப்பிலா நாயகி ஆவாள். நான்கு திருக்கரங்களுடன் தெற்கு பார்த்த வண்ணம் நின்ற எழிற்கோலத்தில் அருள் புரிகிறாள். மங்களநாயகி அம்மனை, தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் நெய்தீபம் ஏற்றி, 9 உதிரி எலுமிச்சைப் பழங்களை வைத்து வழிபட்டால் காரியத் தடைகள், உடற்பிணிகள், வறுமை நிலை யாவும் அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது. சிவபெருமான் உமையவளுக்கு தனது திருமேனியின் இடப்பாகத்தில் இடம் கொடுத்ததால், இத்தலத்தின் கருவறையில் ஈசன் சிவலிங்க வடிவமாக இருந்தாலும், அரூப வடிவில் அன்னை உமையவளும் உடன் இருப்பதாக ஐதீகம்.
இதனால் கருவறையின் மேல் இரண்டு விமானங்கள் உள்ளன. இவ்வாலய கருவறை இரட்டை விமான அமைப்பு, அப்படியே காசி விஸ்வநாதர் கோவில் இரட்டை விமான அமைப்பை ஒத்துள்ளது. உள்பிரகாரத்தின் தெற்கே சப்த கன்னியரும், ஐயனாரும், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளும் அருள் பாலிக்கிறார்கள்.
வீடு கட்டும் யோகம் கிட்டும்:
இத்தல ஐயனாரை பங்குனி உத்திர நாளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வீடு கட்டும் யோகம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இங்கு உள்ள யோக தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி தொடர்ந்து 5 வாரம் வழிபட்டு வந்தால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆலயத்தின் அமைப்பு:
இந்த திருக்கோவிலின் வெளிப்புற மதிலை தாண்டினால் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜ கோபுரத்தை தரிசனம் செய்யலாம். அடுத்தாற் போல் கொடிமரம், பலி பீடம் ஆகியவை உள்ளது. இதனை வழிபட்டு வெளிப்பிரகாரத்தை வலம் வரவேண்டும். அப்போது வடகிழக்கு மூலையில் திருக்கல்யாண மண்டபமும், அம்பாள் சன்னிதியும் உள்ளது. வெளிப்பிரகாரத்தின் வடக்கில் அகத்தியர் சன்னிதியும், எதிரே என்றும் வற்றாத அகத்தியர் தீர்த்தமும் இருக்கிறது.
அடுத்து மூன்று நிலை ராஜகோபுரம் கடந்து உள்சென்றால் கருவறையில் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு பார்த்த வண்ணம் திருநெடுங்களநாதர் அருள் பாலிக்கிறார். அகத்தியர் வழிபட்டு பேறு பெற்ற தலம் இதுவாகும். வந்திய சோழ மன்னனுக்கு ஈசன் பேரழகுடன் காட்சி கொடுத்த காரணத்தால், இத்தல இறைவன் “நித்திய சுந்தரேஸ்வரர்” என்றும் அழைக்கப்படுகிறார். இத்தல ஈசனை தொடர்ந்து 6 வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் முகப்பொலிவு கூடும். சகல ஜனவசியம் ஏற்படும் என்பது நம்பிக்கை .