‘காதலாகி..’ எனத் தொடங்கும் நமச்சிவாய திருப்பதிகம் பாடிய தலம்

443

நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் ரெயில் நிலையத்திற்கு கிழக்கே, நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆச்சாள்புரம் என்ற திருத்தலம்.

நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் ரெயில் நிலையத்திற்கு கிழக்கே, நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆச்சாள்புரம் என்ற திருத்தலம். திருமணசம்பந்தரின் தந்தையான சிவபாத இருதயர், சம்பந்தரை அணுகி “மறை முறைப்படி வேள்விகள் செய்வதற்கு, ஒரு பெண்ணை மணம் செய்து கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சம்பந்தர் முதலில் மறுத்தார். சிவபாதர் மீண்டும் வலியுறுத்தவே திருவருளை நினைத்து, சம்பந்தர் சம்மதம் தெரிவித்தார்.

சிவபாத இருதயர், நம்பியாண்டார் நம்பியின் மகளான சொக்கியாரை மணம் பேசினார். சம்பந்தர் ஆச்சாள்புரம் வந்தார். இறைவனை வழிபட்டு மணக் கோலம் பூண்டார். திருநீலநக்க நாயனார் மணவிழா சடங்குகளை நடத்தினார். மணப்பெண்ணுக்கு ‘ஸ்ரீ தோத்திர பூரணாம்பிகை’ என்ற பெயரும் உண்டு. சம்பந்தர், இறைவன் திருவடியை சேரும் நினைவோடு ‘கல்லுர்ப் பெருமணம்..’ எனத் தொடங்கும் பதிகம் பாடி இறைவனை வழிபட்டார்.

அப்போது இறைவன் சிவலோகத் தியாகர், ஜோதிப் பிழம்பாகத் தோன்றி “நீயும் நின் மனைவியும், திருமணம் காண வந்த அனைவரும் இந்த ஜோதியில் புகுந்துகொள்ளுங்கள்” என்று அருளினார்.

சம்பந்தர் ‘காதலாகி..’ எனத் தொடங்கும் நமச்சிவாய திருப்பதிகம் பாடினார். கூட்டத்தில் இருந்த பலர் ஜோதியில் கலக்க, சிலர் பயத்துடன் பின் வாங்கி ஒடத் தொடங்கினர். நந்தி பகவான் அவர்களை துரத்தி தடுத்து நிறுத்தினார். பின்னர் அவர்களும் ஜோதியில் கலந்தனர். அப்படி நந்தி ஆர்ப்பரித்து துரத்திய தலங்களில் ‘ஆர்ப்பாக்கம்’ என்ற திருத்தலமும் ஒன்றாகும். ரிஷபமான நந்தி துரத்தியதால், இத்தலத்திற்கு ‘ரிஷபம் துரத்தி’ என்ற பெயரும் உண்டு. இந்த ஊரில் உள்ளது கயிலாசநாதர் ஆலயம். இறைவன் கைலாசநாதர். இறைவி அகிலாண்டேஸ்வரி.

சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது, இந்த ஆலயம். கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டியதும் மகாமண்டபம் உள்ளது. மகா மண்டபத்தின் தென் திசையில் இறைவி அகிலாண்டேஸ்வரியின் சன்னிதி காணப்படுகிறது. மகா மண்டபத்தில் பூலோகநாதர், சிவலோகநாதர், சம்பந்தர், சுந்தரர் திருமேனிகள் உள்ளன.

அர்த்தமண்டபம் நுழைவு வாசலில் விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

கருவறையில் இறைவன் கயிலாசநாதர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பிரம்மா ஆகியோரும், திருச்சுற்றில் சண்டிகேஸ்வரரும், பைரவரும் வீற்றிருந்து அருள்கிறார்கள். இந்த ஆலயத்தில் சித்திரா பவுர்ணமி அன்று, சுமார் 500 பேர் இந்த ஆலயத்திற்கு அலகு காவடி சுமந்து வந்து நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். அன்று அன்னதானமும் நடைபெறும். ஆலயத்தின் தல விருட்சம் வேம்பு ஆகும். இங்கு பிரதோஷம் வெகு சிறப்பாக நடைபெறும். கார்த்திகை மாத கார்த்திகைகளில் சொக்கபனை தீபம் ஏற்றப்படுகிறது. எமபயம் நீக்கும் தலமாக இத்தலம் விளங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர். இந்த ஆலயம தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை, பக்தா்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் இருந்து 4 கிலோமீட்டா் தொலைவில் கொப்பியம் சாலையில் உள்ளது ஆர்ப்பாக்கம் ஆலயம்.