திருச்சேறையில் பிரசித்தி பெற்ற சாரபரமேஸ்வரர் கோவில்

228

கும்பகோணத்தில் திருச்சேறை என்ற இடத்தில் உள்ளது சாரபரமேஸ்வரர் திருக்கோவில். இந்த கோவிலின் வரலாற்றை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இந்தக் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் மொட்டை கோபுரமும், அதையடுத்து விசாலமான வெளிப் பிரகாரமும் உள்ளன. வெளிப் பிரகாரத்தின் வடக்குப் பகுதியில் இறைவியின் சன்னிதியும், ஆலய தல விருட்சமான மாவிலங்கை மரமும் உள்ளது. இந்த விருட்சத்தை மகாலிங்க மரம் என்றும் சொல்வதுண்டு.

மொட்டை கோபுரத்தின் உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் சிவபெருமான், பார்வதியின் சுதை வடிவ திருமேனிகள் உள்ளன. அடுத்துள்ள ராஜகோபுரத்தைத் தாண்டியதும், சிறப்பு மண்டபமும் மகாமண்ட பமும் உள்ளன. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாசலில் துவார பாலகர்கள் அருள்பாலிக்க, அடுத்துள்ள கருவறையில் இறைவன் சாரபரமேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக் கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற 127 தலங்களில் 95-வது தலமாக விளங்குகிறது திருச்சேறை.

இந்த ஆலயத்தில் மூன்று தீர்த்தங்கள் உள்ளன. முதல் தீர்த்தம் ‘பிந்து சுதா தீர்த்தம்’. இது கோவிலின் உள்ளே அமைந்துள்ள கிணறு ஆகும். அமுதத்தில் ஒரு துளி விழுந்ததால் ஏற்பட்ட தீர்த்தம் இது. இரண்டாவது ‘ஞான தீர்த்தம்’. இது ஆலயத்தின் எதிரே உள்ள திருக்குளம் ஆகும். மூன்றாவது தீர்த்தமாக ‘மார்க்கண்டேய தீர்த்தம்’ விளங் குகிறது. இது ஆலய தெப்பக்குளம் ஆகும்.

கருவறை தேவக் கோட்டத்திலும் பிரகாரத்திலும் விநாயகர், ஜூரஹர லிங்கேஸ்வரர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, அமிர்தகடேஸ்வரர், அபிராமி, மிருகண்டு மகரிஷி, சப்த கன்னிகள், சமயக்குரவர்கள், பால சுப்பிரமணியர், மகாலட்சுமி, வாயுலிங்கம், ஜேஷ்டா தேவி, மூன்று துர்க்கைகள், சண்டிகேஸ்வரர், சூரியன், காளீஸ்வரர், நாகராஜர், நவக்கிரக நாயகர்கள் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

மகரிஷி மோட்ச தலம் :

மகாபாரதத்தில் எரியும் அரக்கு மாளிகையில் இருந்து பாண்டவர்கள் வெளியேற யுத்திகள் கூறியவரும், குந்திதேவிக்கு உபதேசம் செய்தவருமான தவுமிய மகரிஷி இத்தலத்தில் மோட்சம் பெற்றதாக வரலாறு.

ஞானம் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழு மனிதன் ஆவான். எவ்வளவு செல்வம் இருப்பினும் அதை காக்க அறிவு என்ற ஞானம் வேண்டும். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளித் தருவதால், இத்தல இறைவி ஞானாம்பிகை என அழைக்கப்படுகிறாள்.

இத்தலத்தில் பரிகார தெய்வமாக ‘ரிண விமோசன லிங்ககேஸ்வரர்’ விளங்கு கிறார். மார்க்கண்டேய முனிவர் தன்னுடைய ஆசிரமத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். அந்த மார்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அவரின் ஆத்மார்த்த லிங்கமே ரிண விமோசன லிங்கேஸ்வரர்.

பொதுவாக மனிதனாகப் பிறந்தவருக்கு பிறவிக்கடனும், இப்பிறவியில் பொருள் கடனுமாக இரண்டு கடன் உண்டு. ரிண விமோசன லிங்கேஸ்வரரை முறையோடு வழிபட்டால், இந்த இரண்டு கடன்களிலிருந்து விடுபடலாம். எனவே இவர் கடன் நிவர்த்தீஸ்வரர் என போற்றப்படுகிறார். தொடர்ந்து 10 திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்து, 11-வது வார முடிவில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் உரிய பலன் கிடைக்கும்.

இங்குள்ள பைரவரை தொடர்ந்து எட்டு அஷ்டமி திதியில் அர்ச்சனை செய்து வழிபட்டு, ஒன்பதாவது அஷ்டமி திதி அன்று பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபட்டால் வேண்டியது நிறைவேறும்.

மூன்று துர்க்கைகள் :

வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில் சிவதுர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை என்று மூன்று துர்க்கை சன்னிதிகள் இந்த ஆலயத்தில் ஒரே இடத்தில் அமைந்துள்ளது. ராகு கால நேரத்தில் இந்த மூன்று துர்க்கை களையும் வழிபடுவது நல்ல பலனைத்தரும்.

இந்த ஆலயத்தில் ஆடிப்பூரம், நவராத்திரி, கந்த சஷ்டி, கார்த்திகை, பிரதோ‌ஷம், அஷ்டமியில் பைரவர் சகஸ்ரநாம அர்ச்சனை ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன.

மாசி மாதம் 13,14,15 தேதிகளில் சூரிய கதிர்கள் மூலவர் மேல் விழுகிறது. இறைவனுக்கு சூரிய பூஜை செய்து முடித்து சில மணி நேரங்களில் இறைவியின் திருப்பாதங்களில் சூரிய ஒளி படுவதைக் கண்டு நாம் சிலிர்க்காமல் இருக்க முடியாது.

கும்பகோணம் – திருவாரூர் சாலையில் கும்ப கோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு செல்ல கும்பகோணத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.