Saturday, October 28, 2023
HomeAalayangalதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்!

திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்!

திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்!

திருவாரூர் மாவட்டம் திருவீழிமிழலை என்ற ஊரில் அருள்பாளிக்கும் வீழிநாதேஸ்வரர் ஆலயத்தின் புராணக் கதை பற்றி இப்பதிவில் காணலாம்…

ஆலயத்தின் சிறப்பு:

இவ்வாலயத்தின் மூலவர் வீழிநாதேஸ்வரர் என்றும் உற்சவர் கல்யாணசுந்தரேஸ்வரர் என்ற பெயரிலும் அம்பாள் சுந்தரகுசாம்பிகை, அழகியமாமுலையம்மை என்ற பெயரிலும் அருள்பாளிக்கும் திருத்தலமாக விளங்குகிறது. இவ்வாலயத்தின் தீர்த்தம் விஷ்ணு தீர்த்தம் ஆகும். தல விருட்சமாக வீழிச் செடி இருக்கிறது.

புராணக் கதை:

காத்தியாயன முனிவர் என்பவர் தனக்கு குழந்தை வரம் வேண்டி மனைவியுடன் கடும் தவம் புரிந்தார். இவரது தவத்திற்கு மெச்சிய பார்வதி, அந்த முனிவருக்கே மகளாக பிறந்தாள். அக்குழந்தைக்கு கார்த்தியாயினி என்று பெயரிட்டு வளர்த்தனர். பெண்ணிற்கு திருமண வயது வந்ததும், இறைவனே கார்த்தியாயினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டினார்.

முனிவரின் வேண்டுகோளின் படி சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தில் இத்தலம் எழுந்தருளி அம்மனை திருமணம் செய்தார். அப்போது முனிவர், என்றென்றும் இதே திருமணக்கோலத்தில் இத்தலத்தில் அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டினார். அதன்படி இறைவன் மூலஸ்தானத்திலேயே திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

தலத்தின் பெயர்க்காரணம்:

ஒருகாலத்தில் இத்தலம் முழுவதும் வீழி எனப்படும் சந்தனம், செண்பகம், பலா, விளா ஆகிய மரங்கள் அடங்கிய காடுகளாக இருந்தன. மிழலைக்குறும்பர் என்ற வேடுவர் இத்தல இறைவன் மேல் கொண்ட அன்பினால் தினமும் விளாங்கனியை நைவேத்யம் செய்து வழிபட்டு வந்தார். இறைவன் அவரது அன்பிற்கு இரங்கி, அஷ்டமாசித்திகளை வழங்கினார்.

வேடுவரால் நிவேதனம் செய்யப்பட்ட விளாங்கனி வீழிநாதரின் பாதத்தில் இன்றும் காட்சியளிக்கிறது. இதனால் இத்தலம் திரு+வீழி+மிழலை என்று அழைக்கப்படுகிறது.
சம்பந்தரும், நாவுக்கரசரும் பல தலங்களை தரிசித்து விட்டு திருவீழிமிழலையில் சில காலம் தங்கினர். அப்போது பஞ்சம் ஏற்பட்டது. இருவரும் வீழிநாதரை பணிந்து பஞ்சம் போக்க பாடினர். இருவரது கனவிலும் தோன்றிய ஈசன், தினமும் ஒரு பொற்காசு தருவதாகவும், அடியார்களின் பசி தீர்க்கும்படியும் கூறினார்.

அதன்படி கிழக்குப்பீடத்தில் உள்ள காசை சம்பந்தரும், மேற்குப்பீடத்திலுள்ள காசை திருநாவுக்கரசரும் எடுத்து அடியார்களிடம் கொடுத்து, அவர்கள் பசி போக்கினர். இப்போதும் படிக்காசு பீடம் இருக்கிறது. இங்குள்ள விநாயகர் படிக்காசு விநாயகர் எனப்படுகிறார். இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட “வவ்வால் நந்தி மண்டபம்’ உள்ளது. சஷ்டியப்த பூர்த்தி திருமணங்கள் இங்கு நடத்தப்படுகின்றன.

மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை சலந்தரன் என்ற அரக்கன் பறித்துச் சென்று விட்டான். அவர் பரமசிவனிடம், சக்ராயுதத்தை மீட்டுத்தர வேண்டினார். பூலோகத்தில் வீழிச்செடிகள்அடர்ந்த இடத்தில் தான் இருப்பதாகவும், அங்கு தினமும் பூஜை செய்தால் சக்ராயுதம் கிடைக்கும் என்றும் அருளினார். விஷ்ணுவும் இத்தலத்தில் தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, அதிலிருந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து ஆயிரம் தாமரை மலர்களால் ஈசனை வழிபாடு செய்து வந்தார். ஒருநாள் சிவனின் திருவிளையாடலால், சிவபூஜைக்கான ஆயிரம் தாமரையில் ஒன்று குறைந்தது.

கண்மலர் காணிக்கை:

அந்த ஒரு தாமரைக்கு பதில் விஷ்ணு தன் கண்ணையே ஆயிரமாவது மலராக தந்தார். இதனால் தான் கோயில்களில் “கண்மலர்’ காணிக்கை தரும் பழக்கம் உருவானது. இப்பூஜைக்கு மகிழ்ந்த சிவன், சலந்தரனை வதம் செய்து, சக்கராயுதத்தை கொடுத்தருளினார். விஷ்ணு சிவனுக்கு பூஜை செய்த கண்மலர் இன்றும் சிவனின் பாதத்தில் இருப்பதைக் காணலாம்.

ஆலய அமைப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு பாதாள நந்தி உள்ளது. முழு கோயிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது. இங்கு இறைவன் காசியாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிப்பதால், மாப்பிள்ளை சுவாமி எனப்படுகிறார். மகாமண்டபம் திருமணமண்டபம் போல் பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம்.

இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட “வவ்வால் நந்தி மண்டபம்’ உள்ளது. கோயிலின் எதிரில் பெரிய குளம் உள்ளது. மிகப் பெரிய கோயில். கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. இக்கோயில் மாடக்கோயில் அமைப்புடையது. தெற்குப் பிராகாரத்தில் தல விநாயகர் (படிக்காசு விநாயகர்) சன்னதியும், மேற்கில் சோமாஸ்கந்தர், முருகன், மகாலட்சுமி சன்னதிகளும், வடக்கில் சண்டேசுவரர் சன்னதியும் உள்ளது. நடராசர் சன்னதி சிறப்பானது.

பிரார்த்தனைகள்:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். மேலும் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × five =

Most Popular