தொற்றுநோய்களை அகற்றும் திருச்செங்கோடு ஈசன்

188

ஈரோட்டில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும், சேலத்தில் இருந்து 41 கிலோமீட்டர் தூரத்திலும் திருச்செங்கோடு அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பழங்காலத்தில் இருந்தே தொற்றுநோய்கள், உலகை அச்சுறுத்தி வந்திருக்கின்றன. இதனால்தான் நம் முன்னோர்கள் தங்கள் வீடுகளின் முற்றத்தில் மாட்டுச் சாண கரைசலை தெளித்தும், வீடுகளின் முகப்பில் வேப்பிலை கொத்துக்களைச் கட்டிவைத்தும் பற்பல தடுப்பு நடவடிக்கைகளை கையாண்டதுடன், அவற்றை மாரியம்மன் வழிபாடு, பத்ரகாளி வழிபாடு என்று தெய்வங்களோடு தொடர்பு படுத்தி வைத்தனர். இங்கே தொற்று நோய் தீர்க்கும் ஒரு ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.

சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர், சிவ தலங்களை வழிபட்டுக் கொண்டே யாத்திரை சென்றார். அதன் ஒரு பகுதியாக பவானி வேதநாயகி சமேத சங்கமேஸ்வரர் திருக்கோவிலில் வழிபட்டுவிட்டு, தம் அடியவர்களுடன் திருச்செங்கோடு பாகம்பிரியாள் சமேத அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலுக்கு வந்துகொண்டிருந்தார்.

திருச்செங்கோடு மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும், ஒருவித தொற்றுநோய்க் கிருமி பரவி அனைவரும் குளிர் சுரத்தால் அவதியுற்றனர். திருஞானசம்பந்தர் தங்கள் ஊருக்கு வந்திருப்பதை அறிந்த ஊர் மக்கள், அந்த திருமடத்துக்கு வந்து, ‘தொற்றுநோயில் இருந்து காப்பாற்றுங்கள்’ என்று வேண்டினர். அதுசமயம் திருஞானசம்பந்தருடன் வந்திருந்த அடியவர்கள் ஒருசிலருக்கும் அந்த தொற்று நோய்க் கிருமியால் பாதிப்பு உண்டாகி உடல் நலிந்தனர்.

மக்கள் நலம் பெற வேண்டியும், அடியவர்கள் நலம்பெறும் பொருட்டும் ஈசனை வேண்டி ‘அவ்வினைக்கு இவ்வினையாம்..’ எனத் தொடங்கும் திருநீலகண்டப் பதிகம் பாடினார், திருஞான சம்பந்தர். என்ன ஆச்சரியம்.. மக்களையும், அடியவர்களையும் வருத்திய அந்த குளிர் தொற்றுநோய்க் கிருமி அகல, விஷ சுரமும் அகன்றது.

சம்பந்தர் தனது அடியார்களுடன் தங்கிய மடம் திருச்செங்கோடு தேரடி வீதியில் உள்ளது. இங்கு ‘சுரகண்டநாதர்’ என்னும் ஜுரஹரேஸ்வரர் ஈசன் அருள்பாலிக்கிறார். தொற்று நோயால் துன்பப்படுபவர்கள் அங்கு சென்று ஈசனை வேண்டி மிளகு ரசம் சாதம் வைத்து வழிபாடு செய்து வழிபட்டு, பின்னர் மலைமேல் உள்ள அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவப்பெருமாள், செங்கோட்டு வேலவர் சன்னிதிகளிலும் வழிபட்டு வந்தால் வைரஸ் காய்ச்சலின் பாதிப்பு உடனே படிப்படியாக குறைந்து முற்றிலும் குணமாகிவிடும் என்கிறார்கள். வழிபாட்டுடன், திருஞானசம்பந்தரின் ‘அவ்வினைக்கு இவ்வினையாம்’ எனத் தொடங்கும் திருநீலகண்டப் பதிகம் பாடி வழிபடவேண்டும் என்கிறார்கள்.

திருச்செங்கோட்டு மலைக்கோவிலில் முருகப்பெருமான், ‘செங்கோட்டு வேலவர்’ எனும் பெயரில் அருள்கிறார். இங்கு முருகப்பெருமான் வலக்கரத்தில் சக்திவேல் தாங்கி, இடதுகரத்தால் இடுப்பில் சேவலை அணைத்தபடி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். திருக்கயிலை மலையில் பழத்தினால் ஏற்பட்ட குழப்பத்தினால் கோபம் கொண்டு பழனிக்கு வந்தார், முருகப்பெருமான்.

அதன் பின் அங்கிருந்து இத்தலத்திற்கு வந்து செங்கோட்டுவேலவர் என்ற பெயருடன் காட்சிதருகிறார். இங்கு வந்தபின் அம்மையப்பனின் வேண்டுகோளுக்கு இணங்க தேவர்களை துன்புறுத்திய அசுரர்களான தாரகாசுரன் மற்றும் அவனது தம்பியுமாகிய சூரபத்மன் இருவரையும் முருகன் வதம் செய்தாா். முருகப்பெருமான் கோபம் கொண்டு நாகாசலம் வந்ததால், பார்வதி கவலைகொண்டார். இதைக்கண்ட சிவன், பார்வதியை மகிழ்வூட்ட அவரை இயற்கை வளங்கள் நிறைந்த தாருகாவனத்திற்கு அழைத்து வந்தார்.

அங்கு பல்வேறு இயற்கை காட்சிகளைக்கண்டு மகிழ்ந்த பார்வதிக்கு, முல்லைக்கொடி ஒன்று மாதவி மரத்தை சுற்றி வளர்ந்துள்ளதை சிவன் காட்டினார். அதை கண்ட பார்வதி வெட்கப்பட்டு சிவனின் கண்களை தன் கைகளால் மூடினார். இதனால் அண்டசராசரங்கள் அனைத்தும் இருண்டன. பார்வதி தன் கைகளை விலக்கவே அந்த இருள் நீங்கியது. திடீரென்று ஏற்பட்ட இருளின் காரணமாக உலகின் அனைத்து வழிபாட்டு முறைகளும் மாறின. இதனால் தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

இதைகண்ட பார்வதி, சிவனிடம் “இந்தத் தவறு மீண்டும் நிகழாதிருக்க, நாம் இருவரும் தனித்தனி என்ற நிலை மாறி ஒருவர் என்ற நிலை உருவாகவேண்டும்” என்று வேண்டினார். இந்த வேண்டுகோளை ஏற்று தேவிக்கு தன் உடலில் இடம் கொடுப்பதாக சிவன் ஒப்புக்கொண்டார். அதற்காக பார்வதியிடம் ‘இமயமலையிலும், காசியிலும், காஞ்சி நகரில் உள்ள கம்பையாற்றின் கரையிலும், திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து சாபவிமோசனம் பெறவேண்டும்’ என்று கூறினார். பார்வதி தேவியும் அவ்வாறே தவம் செய்தார்.

இறுதியில் திருவண்ணா மலையில் சிவன் பார்வதிக்கு காட்சி தந்து, “நீ யாருக்காக சோகமுற்று இந்தத் தொல்லைகளுக்கு ஆளானாயோ, அந்த முருகன் இப்போது கொங்கு மண்டலத்தில் உள்ள திருக்கொடிமாடச் செங்குன்றூரில் குடிகொண்டுள்ளான். அதனால் அதுவே நாம் தங்கு வதற்கு ஏற்ற இடம்” என்று கூறி திருக்கொடிமாடச்செங்குன்றூர் சென்று தவம் செய்யுமாறு கூறினார். அதன்படி பார்வதியும் இங்கு வந்து தவம் செய்து சிவனுடன் இரண்டற கலந்து, அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளிக்கின்றனர்.

திருச்செங்கோடு திருத்தலம் முன்பு மரம், செடி, கொடிகள், மாடமாளிகைகள் நிறைந்ததாக இருந்ததால் ‘திருக்கொடிமாடச்செங்குன்றூர்’ என்றும் அழைக்கபட்டது. இந்த திருச்செங்கோடு மலைக்கோவிலை ‘மலைத்தம்பிரான்’ என்றும் அழைக்கின்றனர். ஆதிசேஷபாம்பு மேருமலையை பிடித்த போது காயம் ஏற்பட்டு சிந்திய ரத்தத்தால், மலை செந்நிறம் ஆனதால் ‘திருச்செங்கோடு’ எனப்பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. மலை அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேலே படி வழியாக செல்லும் போது 60 அடி நீளத்தில் மிக பிரமாண்டமாய் ஐந்து தலைகளுடன் அமைந்துள்ள ஆதிசேஷன் உருவத்தை காணலாம். பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ள இந்த நாகருக்கு, மக்கள் குங்குமம் தூவி, தீப ஆராதனை செய்து வழிபடுகின்றனர். நாகதோஷம், காலசர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.

அமைவிடம்

ஈரோட்டில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும், சேலத்தில் இருந்து 41 கிலோமீட்டர் தூரத்திலும் திருச்செங்கோடு அமைந்துள்ளது.