நான்கு நிலையிலும் பெருமாள் தரிசனம் செய்யும் ஸ்தலம்!

58

நான்கு நிலையிலும் பெருமாள் தரிசனம் செய்யும் ஸ்தலம்!

சென்னை பல்லாவரத்திலிருந்து 6. கி.மீ. துரத்தில் இருக்கிறது திருநீர்மலை . இந்தத்தலத்தில் இரு நூறு அடி உயரமுள்ள ஓர் சிறிய மலை இருக்கிறது. மலை அடிவாரத்தில் பெருமாளின் சந்நிதி ஒன்றும் மலை மேல் மூன்று சந்நிதிகளும் இருக்கின்றன.

ஆலயத்தின் சிறப்பு:

அடிவாரக் கோவிலில் உள்ள மூலவர் நீலமுகில் வண்ணன், நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். தாயார் அணிமாமலர் மங்கை, தனிக்கோவில் நாச்சியாராக எழுந்தருளியிருக்கிறார். மலைமேல் சாந்த நரசிம்மன், வீற்றிருந்த திருக்கோலத்தில், கிழக்கு நோக்கியும், ரங்கநாதன், மாணிக்க சயனமாகத் தெற்கு நோக்கியும், திருவிக்கிரமன் நின்ற திருக்கோலமாகக், கிழக்கு நோக்கியும் சேவை சாதிக்கிறார்கள்.

ஒரே இடத்தில் நின்ற, நடந்த கோலத்திலும், பள்ளிகொண்ட கோலத்திலும், சிங்க உருவிலும் பெருமாள்:

நீர்வண்ணன், (நீலமுகில்வண்ணன்), அணிமாமலர் மங்கை – நின்ற திருக்கோலம்.
சாந்த நரசிம்மன் – வீற்று இருந்த திருக்கோலம்.
ரங்கநாதன், ஸ்ரீதேவி, பூதேவி – கிடந்த திருக்கோலம்.
உலகளந்த பெருமாள் (த்ரிவிக்ரமன்) – நடந்த திருக்கோலம்.
திருநறையூரிலே நின்ற திருக்கோலமாகவும், திருவாலியிலே சிங்க உருவிலும் திருக்குடந்தையில் பள்ளி கொண்ட திருக்கோலமாகவும், திருக்கோவலூரில் உலகளந்த திருவடியாகவும் காட்சியளிப்பதை இங்கே ஓரிடத்தில் காணலாம். இங்கே நின்ற கோலத்தில் நீர் வண்ணப் பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மமூர்த்தி, கிடந்த கோலத்தில் அரங்கநாதப் பெருமான், நடந்த கோலத்தில் உலகளந்த மூர்த்தியும் காணப்படுகிறார்.

ஸ்தல வரலாறு:

ராம கதையை எழுதிய வால்மீகி முனிவர் இத்தலத்தில் சயனித்திருந்த அரங்கநாதரையும், இருந்த கோலத்தில் சாந்த ரூபியாக இருகரங்களுடனிருந்த நரசிம்மரையும், நடந்த கோலத்தில் திருவிக்ரமனையும் பார்த்தார். ஆமாம் அவருடைய ராமன் எங்கே? மலையை விட்டுத் துயரத்துடன் இறங்கினார். முனிவரின் துயரைத் துடைக்க இத்தலத்து எம்பிரான்களே வால்மீகியின் சக்கரவர்த்தித் திருமகனாகக் காட்சியளித்தனர். ரங்கநாதரே ராமனாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும், லட்சுமிதேவி ஜானகியாகவும் கருடன் அனுமான் என்று ரம்மியமான நீர் வண்ணப் பெருமாள் ரூபத்தில் காட்சி கொடுத்தனர். மூவர் நால்வராயினர். தம்முடைய திருவாலியில் உள்ள உருவத்திலேயே சாந்தமூர்த்தி நரசிம்மரை திருமங்கையாழ்வார் கண்டாராம்.

நீர் பெருமாள்:

ராமாயணம் எழுதிய வால்மீகி மகரிஷிக்கு, ராமபிரானை, திருமணக்கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்று ஆசை எழுந்தது. அவர் இத்தலம் வந்து சுவாமியை வேண்டி தவமிருந்தார். பெருமாள் அவருக்கு சீதா, லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் ஆகியோருடன் திருமணக்கோலத்தில் காட்சி தந்தார். அப்போது வால்மீகி, தனக்கு காட்டிய தரிசனப்படியே நிரந்தரமாக தங்கும்படி வேண்டினார். சுவாமியும் அவ்வாறே அருளினார்.

இவர் மலையடிவாரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். நீர் சூழ்ந்த மலையின் மத்தியில் இருந்ததால் இவருக்கு, நீர்வண்ணப்பெருமாள் என்றும், தலத்திற்கு திருநீர்மலை என்றும் பெயர் ஏற்பட்டது. நீல நிற மேனி உடையவர் என்பதால் இவருக்கு “நீலவண்ணப்பெருமாள்’ என்ற பெயரும் உண்டு. ராமபிரானுக்கும் சன்னதி இருக்கிறது. இவரது சன்னதியில், சுவாமியை வணங்கியபடி சுயம்புவாக தோன்றிய வால்மீகி காட்சி தருகிறார்.

ஒரே தலத்தில் நான்கு பெருமாள்:

இத்தலத்து பெருமாளை தரிசிக்க திருமங்கையாழ்வார் வந்தபோது, மலையைச் சுற்றிலும் நீர் நிறைந்திருந்தது. அவரால் நீரைக் கடந்து சென்று சுவாமியை தரிசிக்க முடியவில்லை. ஆனாலும், அவர் காத்திருந்து சுவாமியை தரிசித்துவிட்டுச் செல்வதென முடிவெடுத்தார். கோயில் எதிரேயுள்ள மற்றொரு மலையில் தங்கினார். நாட்கள் நகர்ந்ததே தவிர, தண்ணீர் குறைந்தபாடில்லை. ஆனாலும் பெருமாளை தரிசிக்க வேண்டுமென்பதில் தீர்க்கமாக இருந்த திருமங்கையாழ்வார், தண்ணீர் வடியும் வரை காத்திருந்து, சுவாமியை தரிசிக்கச் சென்றார்.

தன் மீது பாசம் கொண்ட பக்தனுக்காக பெருமாள் நின்ற கோலத்தில் நீர்வண்ணப்பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மர், சயன கோலத்தில் ரங்கநாதர், நடந்த கோலத்தில் உலகலந்த பெருமாள் என நான்கு கோலங்கள் காட்டியருளினார். இந்த நால்வரையும் இத்தலத்தில் தரிசிக்கலாம். நீர்வண்ணப்பெருமாள் மலையடிவாரத்திலுள்ள கோயிலிலும், ரங்கநாதர், நரசிம்மர், உலகளந்த பெருமாள் ஆகியோர் மலைக்கோயிலிலும் அருள்கின்றனர்.

பால நரசிம்மர்:

நரசிம்மரை உக்கிரமான கோலத்தில் தரிசித்திருப்பீர்கள். அவரை சாந்தமாக, பால ரூபத்தில் இத்தலத்தில் தரிசிக்கலாம். இரணியனை சம்ஹாரம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, உக்கிரமாக இருந்தார். இந்த வடிவம் கண்டு பிரகலாதன் பயந்தான். எனவே, சுவாமி தன் பக்தனுக்காக உக்கிர கோலத்தை மாற்றி, அவனைப்போலவே பால ரூபத்தில் தரிசனம் தந்தார்.

இவரை “பால நரசிம்மர்’ என்கின்றனர். மலைக்கோயிலில் இவருக்கு சன்னதி இருக்கிறது. இவருக்கு பின்புறம் நரசிம்மர், சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறார். இவரிடம் சங்கு, சக்கரம் இல்லை. இவ்வாறு இங்கு பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில் நரசிம்மரை தரிசிக்கலாம்.

மூலவர், உற்சவர் இருவரையும் ஒன்றாக தரிசனம் செய்யும் அந்த ஒரு நாள்:
பொதுவாக பெருமாள் கோயில்களில் உற்சவர் சிலையை மூலவர் முன்பு வைப்பது வழக்கம். இக்கோயிலில் மூலவர் ரங்கநாதர் மலைக்கோயிலிலும், உற்சவர் அழகியமணவாளர் அடிவாரத்திலுள்ள கோயிலிலும் காட்சி தருகின்றனர். சித்திரை பிரம்மோற்ஸவ கொடியேற்றம் மற்றும் கொடி இறக்கம், பங்குனி உத்திரத்தில் நடக்கும் திருக்கல்யாணம் ஆகிய மூன்று நாட்கள் மட்டும் அழகிய மணவாளர் மலைக்கோயிலுக்கு எழுந்தருளுவார். அன்று மட்டுமே மூலவரையும், உற்சவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.

இரட்டை திருவிழா:

மலைக்கோயிலில் உள்ள ரங்கநாதருக்கு சித்திரையிலும், அடிவாரத்திலுள்ள நீர்வண்ணப்பெருமாளுக்கு பங்குனியிலும் பிரம்மோற்ஸவம் நடக்கிறது.

நான்கு தீர்த்தம்:

இந்தக் கோயிலின் எதிரிலுள்ள புஷ்கரிணியில் (குளம்) சித்த தீர்த்தம், சொர்ண தீர்த்தம், காருண்ய தீர்த்தம், க்ஷீர தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் சங்கமித்துள்ளன. நாராயணனின் சிலை வடிவத்தை நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்று குறிப்பிடுவார்கள். இங்கு, நான்கு நிலைகளிலும் பெருமாளைத் தரிசிக்கலாம்.