அருமையான இரண்டு சிவபெருமான் திருத்தலங்கள்!
திருக்கழுக்குன்றம் திருக்கோயில்:
இத்தலம் வேதமே, மலையாய் இருத்தலின் ‘வேதகிரிஸ்வரர் ‘ எனப் பெயர் பெற்றது.
மலைமேல் ஒரு கோயில்; ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே மலைக்கோயில், தாழக்கோயில் என்றழைக்கப்பபடுகிறது. மார்க்கண்டேர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும், அது முதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதில் கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. மணிவாசகருக்கு இறைவன் குருவடிவாய்க் காட்சி தந்தருளிய தலம்; அப்பெருமான் வாக்கிலும், திருவாசகத்திலும் இத்தலம் இடம் பெற்றுள்ளது. அம்பாளுக்கு ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது.இங்கு பைரவர் வாகனமின்றி உள்ளார். கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது. செங்கற்பட்டிலிருந்து 14-கி. மீ. தொலைவில் உள்ள இத்தலம்.
திருகண்டலம்
சிவானந்தேஸ்வரர் கோயில்:
திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையிலிருந்து சுமார் 36 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்கண்டலம் சிவானந்தேஸ்வரர் கோயில். திருக்கள்ளில் என்பது தேவாரப்பெயர். இது கள்ளி மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டதால் திருக்கள்ளில் என்ற பெயர் கொண்டது.
மண வாழ்வில் இனிமை பெருகவும், இல்லறம் நல்லறமாக விளங்கவும், குடும்ப வாழ்வில் அன்பு நிறையவும் குரு பலம் அவசியம். அந்த பலனை அருள்பவராகத் தரிசனம் அருள்கிறார் சக்தி தட்சிணாமூர்த்தி. இவரைத் தரிசனம் செய்து அர்ச்சித்து வழிபடுவது குடும்ப அமைதியை, இனிய இல்லற வாழ்வை நினைப்பதற்கு அரிய நன்மைகளைக் கொடுக்கும் என்பது ஐதீகம். மூலஸ்தானத்தை அலங்கரிப்பவர் சிவாநந்தீஸ்வரர். நீள் சதுர வடிவ ஆவுடையார் கொண்ட லிங்கத் திருமேனி இவர்.
திருப்புடைமருதூர்:
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திற்கு வடகிழக்கே தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருக்கோவில். இத்தல இறைவனின் புராணப் பெயர், ‘புடார்க்கினியீஸ்வரர்’ என்பதாகும். அம்பாளின் திருநாமம், கோமதி அம்பாள்.
மூலவரின் திருமேனி மீது காயம்பட்ட வடு உள்ளது. இதனால் சுயம்புவாக தோன்றிய இந்த மூலவரின் மீது சந்தனாதித் தைலம் மட்டுமே பூசி பூஜை செய்கிறார்கள். அபிஷேகம் எதுவும் கிடையாது. “நாறும் பூவின் நடுவில் நிற்பவனே நினை தரிசிக்க எனக்கு அருள்புரிவாயோ..” என்று கேட்ட கருவூர் சித்தருக்காக, சுயம்புவான இத்தல மூலவர் சற்றே சாய்ந்து காட்சியளித்தார். அந்த சாய்வு நிலையிலேயே மூலவரை நாம் தரிசிக்கலாம். தேடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை, செவிசாய்த்து கேட்பவர் என்பதாகவும் இதனை பொருள் கொள்ளலாம்.
