மித்ரபந்து அதிக ஆசை இல்லாத ஒரு மனிதன். தனது பொருள்களுக்கு குறைந்த அளவே லாபம் வைத்து அதுவும் அவனது குறைந்தபட்ச தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கே வியாபாரம் செய்து வந்தான். அதனால்தான் அவனிடம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பணமோ உடமையோ கிடையாது. இருந்தாலும் ராமன் மேல் கொண்ட அன்பினால் தன்னிடம் இருந்த ஒரு உயர் ஜாதி மரத்தை கொண்டு நேர்த்தியான காலணி ஜோடியை செய்து மிக பவ்யமாக எடுத்து சென்று ஸ்ரீ ராமனுக்கு அர்பணிக்க வரிசையில் காத்திருந்தான் வரிசை மெதுவே நகர முன்னும் பின்னும் உள்ளோர் ஏராளாமான விலை மதிக்க முடியாத பொருள்களை சமர்பிக்க உள்ளதை கண்டான்.
அவன், எல்லோரும் பல நல்ல நல்ல அருமையான பொருள்களை வழங்க தான் மட்டும் ஒரு காலணியை போயும் போயும் ஒரு மர காலணியை கொடுக்க வேண்டியுள்ளதே என்று மனம் வருந்தினான். அவன் ஸ்ரீ ராமனின் மேடையை அணுக இருந்த சமயம் தனது முடிவை மாற்றிக் கொண்டு வரிசையில் இருந்து விலக எத்தனித்தான்.
அதை கண்ட எல்லோரது தாபங்களையும் போக்குவதற்கே அவதாரம் எடுத்த அண்ணல் ஸ்ரீ ராமபிரான், மித்ரபந்துவை அன்புடன் அழைத்து, ‘ என்ன! உனது அன்பளிப்பை ஏற்க அடியேனுக்கு தகுதி இல்லையா? ஏன் மேடை வரை வந்து திரும்புகிறாய்? என மதுரமான குரலில் கேட்டார்.
உடனே, மித்ரபந்து மிகவும் பதறியவனாய் “அண்ணலே, பரம்பொருளே “என்ன அபாச்சரம் செய்துவிட்டேன் தங்களிடமிருந்து இப்படி ஒரு வார்த்தை வர. எல்லோரும் விலையுயர்ந்த அன்பளிப்பை கொடுக்கும் போது நான் மட்டும் போயும் போயும் ஒரு காலனியை கொண்டு வந்தேனே என்றுதான் வெட்கி திரும்பினேன் என்றான்.
உடனே ஸ்ரீ ராமன், ‘எங்கே காட்டு அந்த காலணியை என்றவாறு அதை தன் கரங்களில் வாங்கி அதை பார்த்தார். சீதே! பார்த்தாயா எப்படி ஒரு நேர்த்தியான அழகான காலணி என்று சீதையிடம் காட்டினார். சீதையும் அகம் மகிழ்ந்து இது போன்ற ஒரு காலணியை மிதிலையிலும் பார்த்ததில்லை என்றாள். மித்ரா இதையா அற்ப பொருள் என்றாய். “உண்மையான உழைப்பில் உதித்த உன் பரிசுதான் உயர்ந்தது’ எனக் கூறி பாதுகைகளை ஏற்றுக்கொள்ள, மித்ரபந்து மகிழ்ந்து போனான்.
மயன் போன்ற தேவனாலும் இதை இவ்வளவு அழகாக செய்ய முடியாது. இதை நான் இப்போதே அணிந்து கொள்கிறேன் என்று அணிந்து கொண்டார்.
அண்ணல், மித்ரபந்துவை கூப்பிட்டு, மித்ரா வருந்தாதே! நீ கொடுத்து நான் அணிந்திருக்கும் இந்த காலணி ஒரு நாள் உலக புகழ் பெரும் என்று சொல்லி அவன் வாட்டத்தை போக்கி அனுப்பி வைத்தான்.
ராமன் வாக்கு என்றும் பொய்த்ததில்லையே! சத்தியமே உருவானவன் அல்லவா அண்ணல். மரவுரி ஏற்ற ராமன் நகரத்தை விட்டு கிளம்புகிறான். ராமன் கானகம் செல்லுகிறான் என்ற செய்தியை கேட்ட நகர மாந்தார் எல்லோரும் ராமன் செல்லவிருக்கும் வீதியில் கவலை தோய்ந்த முகத்துடனும் துக்கத்துடனும் காத்திருக்கின்றனர். அதில் நம் மித்ரபந்துவும் ஒருவன். அண்ணலின் பாதங்களில் அவன் அளித்த அந்த காலணி . துக்கம் தாங்காமல் அண்ணலே! தாங்கள் கானகம் செல்லவா இந்த துர்பாக்கியசாலியின் காலணி பயன்பட வேண்டும் என விம்புகிறான்.
கண்ணீருடன் நின்ற மித்ரபந்துவை பார்த்து, “விலை உயர்ந்த பரிசுகள் எனக்குப் பயன்படவில்லை. உன்னுடைய பாதுகைகள்தான் கல்லும், முள்ளும் குத்தாமல் காக்கப் போகிறது’ என்றார் அண்ணலும் மெளனமாக அன்றலர்ந்த தாமரை மலர் போன்ற முகத்துடன் சீதை லக்ஷ்மனனுடன் கானகம் ஏகினான்.
பரதன் கேகேய நாட்டிலிருந்து திரும்பி வந்து அரசுரிமை ஏற்க மறுத்ததை இவையகம் அறிந்த ஒன்றுதானே . பரதனும் குல குரு வஷிஸ்டர், மற்றும் மறை ஓதும் வேதியர் சூழ கானகம் சென்று ராமனை மீண்டும் அயோத்தி வர விண்ணப்பிக்கிறான். அண்ணலும் தனது தாய் தந்தையின் கட்டளையை மதிக்க உள்ள சூழ்நிலையை எடுத்துக் கூற, பரதன் ‘”என் உயிருனும் மேலான அண்ணலே நீரே என் தந்தை, நீர் பதினான்கு ஆண்டுகள் காலம் வனவாசம் முடித்து அயோத்தி திரும்பும் வரை தங்களின் பாதுகையை சிம்மாசனத்திலே அமர்த்தி அதன் பிரதிநிதியாய் அயோத்தியின் வெளியில் உள்ள நந்தி கிராமத்தில் ஆட்சி புரிவேன் என்று அண்ணலின் பாதுகையை தனது சிரத்திலே தாங்கி ஊர் திரும்பினான். அந்த பாதுகைதான் 14 ஆண்டுகள் இவ்வுலகை ஆண்டது. அதுதான் மித்ரபந்துவின் அன்பளிப்பாக கொடுத்த காலணி .
அன்பர்களே! ஆண்டவன் என்றுமே ஆடம்பரத்தை விரும்புபவன் அல்ல ! அவன் விரும்புவதல்லாம் தூய பக்தியுடன் கூடிய உள்ளமே. நீவிர் கொடுக்கும் ஒரு துளசி தளமோ அல்லது ஒரு உத்தரணி நீரோ போதும். தூய உள்ளத்தை சமர்ப்பியுங்கள் அவன் உமது இதய சிம்மாசனத்திலே நிச்சயம் அமர்வான்.