கல்வியில் சிறந்து விளங்க வழிபட வேண்டிய கோயில்!
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை சக்கரப்பள்ளியில் அருள்பாளிக்கும் சக்கரவாகேஸ்வரர் திருக்கோவில் பற்றி இப்பதிவில் பார்ப்போம்…
ஆலயத்தின் சிறப்பு:
இத்தலத்தின் புராண பெயர் திருச்சக்கரப்பள்ளி. இவ்வாலயத்தின் மூலவர் சக்கரவாகேஸ்வரர் அம்மன் தேவநாயகி ஆவார். இக்கோவிலில் உள்ள தல விருட்சம் வில்வ மரம். தீர்த்தம் காவிரியாறு, காக தீர்த்தம்.
தல சிறப்பு:
இங்கு மூலவர் சுயம்புலிங்கமாக உயர்ந்த தோற்றத்துடன் அருள்பாலிக்கிறார். அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய தலம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 80 வது தேவாரத்தலம் ஆகும். மக்கள் வழக்கில் இவ்வூர் ஐயம்பேட்டை என்று வழங்குகிறது. இப்பெயரில் பல ஊர்கள் இருப்பதால் வழக்கில் இவ்வூரைத் தஞ்சாவூர் ஐயம்பேட்டை என்று கூறுகின்றனர்.
வரலாற்று கதை:
இந்திரன் குமாரனான ஜயந்தனும் தேவர்களும் பூஜித்த தலம். திருமால் இத்தல இறைவனை வழிபட்டு சக்கராயுதம் பெற்றதனால் இத்தல இறைவனுக்கு சக்கரவாகேஸ்வரர் என்றும், ஊர் சக்கரப்பள்ளி என்றும் பெயர். சப்த தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். பிராமி, மகேஸ்சுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மாகேந்திரி, சாமுண்டி முதலிய சப்தமாதர்கள் வழிபட்ட தலம். சயந்தனும் தேவர்களும் வழிபட்ட தலம்.
திருமால் அம்மனை வழிபட்டுச் சக்கராயுதம் பெற்ற தலம். சக்கரவாளப் பறவை வழிபட்ட தலம் என்றும் கூறுவர். “” வண்சசக்கிரம் மால் உறைப்பால் அடிபோற்றுக் கொடுத்தபள்ளி’ என்பது இத் தலபுராண வரலாற்றை உறுதிப்படுத்தும்.
ஆலய அமைப்பு:
கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. கொடிமரமில்லை. உள்ளே நுழைந்ததும் முதலில் வலப்பால் அம்பாள் சன்னதி உள்ளது. தெற்கு நோக்கியது. நின்றநிலை. கருவறை கீழ்புறம் கருங்கல்லாலும் மேற்புரம், விமானம் சுதையாலும் ஆக்கப்பட்டவை. விமானத்தில் அதிக சிற்பங்களில்லை. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தெட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை அகியோர் உள்ளனர். பிரகார வலம் வரும் போது விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. மகாமண்டபத்தில் சூரியன், சந்திரன், அழகான பைரவர், நால்வர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.
கல்வெட்டுக்களில், இவ்வூர், குலோத்துங்க சோழவள நாட்டு, விளநாட்டு, இராசேந்திர சோழ சதுர்வேதிமங்கலம்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் குலோத்துங்க சோழனின் 12 ஆவது ஆண்டுக் கல்வெட்டு, இவ்வூர்ச்சபைக்குரிய சில விதிகளைக் கூறுகின்றன. நாற்பது வயதுக்கு மேற்பட்டவரே ஊர்ச்சபை உறுப்பினராகலாம் என்றும், அவர்களும் பத்து ஆண்டுகளுக்குள் உறுப்பினர்க்கு நிற்காதவராக இருக்கவேண்டுமென்றும் ஊர்ச்சபை விதிகள் கூறப்பட்டுள்ளன.
பலன்கள்:
திருமணத்தடை நீங்கவும், செல்வ வளம் செழிக்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை முதலிய திருவிழாக்கள் இவ்வாலயத்தில் சிறப்பு.
