Monday, October 23, 2023
HomeAanmeega Thagavalgalஅளவற்ற செல்வம் தரும் ஆனித் திருமஞ்சனம்

அளவற்ற செல்வம் தரும் ஆனித் திருமஞ்சனம்

ஒரு நாளைக்கு வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் என்று 6 பொழுதுகள் உண்டு. இதை அடிப்படையாக கொண்டுதான் ஆலயங்களில் தினமும் 6 கால பூஜை நடத்துகிறார்கள். இந்த ஒவ்வொரு பொழுதும் தேவர்களுக்கு ஒரு கால அளவாகவும், மனிதர்களுக்கு வேறு ஒரு கால அளவாகவும் இருக்கும்.

மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாளைத்தான் குறிக்கும்.
அந்த வகையில் தேவர்களுக்கு வைகறை நேரம் என்பது நமக்கு மார்கழி மாதமாகும். தேவர்களுக்கு காலை பொழுது நமக்கு மாசி மாதமாகும். தேவர்களுக்கு உச்சி காலம் என்பது நமக்கு சித்திரை மாதத்தை குறிக்கும். தேவர்களுக்கு மாலை நேரம் என்பது நமக்கு ஆனி மாதத்தை குறிக்கும். அதுபோல தேவர்களுக்கு இரவு நேரம் என்பது நமக்கு ஆவணி மாதத்தை குறிக்கும். அர்த்த ஜாமம் என்பது புரட்டாசி மாதத்தை குறிக்கும்.

இந்த 6 காலங்களில் நடக்கும் பூஜைகள், அபிஷேகங்கள் இறைவனை மிகவும் குளிர்ச்சிப்படுத்தும். அதை பிரதிபலிக்கும் வகையில் சிவாலயங்களில் நடராஜருக்கு ஆண்டுக்கு 6 தடவை அபிஷேகம் செய்வார்கள்.

மாசி சதுர்த்தசி, சித்திரை திரு வோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை ஆகியவையே அந்த 6 அபிஷேக நாட்கள் ஆகும். இந்த 6 நாட்களில் மார்கழி திருவாதிரை, ஆனி உத்திர திருமஞ்சனம் ஆகிய இரு நாட்களில் நடைபெறும் அபிஷேகம், பூஜைகள் சிறப்பானதாக கருதப்படுகிறது.

இந்த இரு நாட்களிலும் சூரிய உதயத்திற்கு முன்பே அதிகாலையிலேயே நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்துவார்கள்.
அதிலும் ஆனி மாத உத்திரம் நட்சத்திரத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சனம் மிக மிக சிறப்பு வாய்ந்தது. திருமஞ்சனம் என்றால் “புனித நீராட்டல்” என்று அர்த்த மாகும். அதாவது ஈசனை பல்வேறு வகைப் பொருட்களால் நீராட்டுவார்கள்.

மன அமைதியும், உடல் வலிமையும் தரக்கூடிய மகத்துவம் வாய்ந்த இந்த புண்ணிய தினத்தில் சிவாலயங்களுக்கு சென்று இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் வாழ்வு சிறக்கும்.
பெரும்பாலான சிவாலயங்களில் அதிகாலை 3 மணியில் இருந்தே அபிஷேகம் தொடங்கி விடுவார்கள்.சிதம்பரம், உத்தர கோசமங்கை உள்பட சில தினங்களில் நடைபெறும் நடராஜர் அபிஷேகம் புகழ் வாய்ந்தது.இந்த தலங்களில் அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து நடராஜரை வழிபடுவார்கள்..

உத்திரம் நட்சத்திர நேரத்தில் கொண்டாடப்படுவதால் இந்த விழாவுக்கு “ஆனி உத்திரம்” என்றும் ஒரு பெயர் உண்டு. அப்போது பலவகை அபிஷேகங்கள் செய்யப்படும்.
அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு மனம் குளிர்விக்கும் வகையில் விதம் விதமான பொருட்களால் அபிஷேகம் செய்வார்கள்.
அதை நேரில் கண்டுகளித்தால் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். அபிஷேகம் முடிந்ததும் கண்கவர் வகையில் அலங்காரம் செய்யப்படும். அபிஷேக, அலங்காரம் முடிந்த பிறகு நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஷோடச ஆராதனைக் காட்டுவார்கள்.

நடராஜரின் இடது பாகம் சக்தி தேவியின் பாகமாக கருதப்படுகிறது. எனவே நடராஜரை வழிபடும்போது அவரது இடது பக்கம் மற்றும் இடது காலையும் சேர்த்து பார்த்து வழிபடுதல் வேண்டும். அப்படி வழிபாடு செய்தால் சிவன்-சக்தி இருவரது அருளாசியை பெற முடியும்.அதுபோல நடராஜரின் வலது பாகம் செல்வத்தை குறிக்கும். அந்த பாகத்தை பார்த்து தரிசனம் செய்தால் குடும்பத்தில் செல்வ வலம் அதிகரிக்கும் என்பது ஐதீகமாகும்.

அபிஷேகம் முடிந்த பிறகு இறைவனும், இறைவியும் ஆனந்தத் தாண்டவமாக நடனம் ஆடியபடி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள்.இந்த நடனத்தை காண கண்கோடி வேண்டும் என்பார்கள். இதனால்தான் இந்த நடனத்தை காண தேவர்களும், முனிவர்களும் படையெடுத்து வந்து ஆவலோடு காத்திருப்பார்கள் என்பது ஐதீகமாகும்.

ஆனித் திருமஞ்சனம் விழா முதன் முதலில் பஞ்ச பூதத்தலங்களில் வானத்தைக் குறிக்கும் சிதம்பரம் தலத்தில்தான் தோன்றியது.
பதஞ்சலி மகரிஷி இந்த திருவிழாவைத் தொடங்கி வைத்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. என்றாலும் மற்ற சிவாலயங்களிலும் ஆனி திருமஞ்சனம் சிறப்பாக நடத்தப்படுகிறது.

ஆனித் திருமஞ்சனத்தை நேரில் பார்த்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

முதலாவது பலன்- நாடு முழுவதும் போதும், போதும் என்று சொல்லும் அளவுக்கு மழை பெய்து, விவசாயம் செழிக்குமாம். விவசாயம் செழித்தால், மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்வார்கள்.

அடுத்து ஆனி திருமஞ்சன விழாவில் பங்கேற்பவர்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் என்பது பொதுவான விதியாக கூறப்பட்டுள்ளது.

சுமங்கலிகள் இந்த விழாவில் கலந்து கொண்டால் நீடூழி வாழ்வார்கள். கன்னிப்பெண்கள் பங்கேற்றால் விரைவில் அவர்களுக்கு உரிய இடத்தில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும். மொத்தத்தில் சிவ-சக்தி இருவரது பேரருளும் நமக்கு கிடைக்கும்.

ஈசனே சிவகாமி நேசனே !
எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × one =

Most Popular