விரும்பிய கணவர் அமைய ஆண்டாள் விரதம்!
சூடிக்கொடுத்த சுடர்கொடி, விரும்பிய கணவர் அமைய வேண்டுமா?
ஆண்டாள் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அதனால், மாதந்தொறும் வரும் பூர நட்சத்திர நாளன்று ஆண்டாளை நினைத்து விரதம் இருந்தால் நல்லது நடக்கும். திருமணமாகாத இளம் பெண்கள் திருப்பாவையில் தினமும் ஒரு பாடலை பாடி வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் ஐதீகம். மேலும், பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளுக்கு மாலை சாற்றி வழிபட்டால், வாரணம் ஆயிரம் பாடி வந்தாலும் பெண்களுக்கு மனம் போன்று விரும்பிய கணவர் அமைவார்.
திருமால் தான் தனக்கு கணவராக வர வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு, அவரையே நினைத்து நினைத்து உருகியவர் ஆண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் குடி கொண்டுள்ள பெருமாளுக்காக தொடுத்த மலர் மாலைகளை தானும் அணிந்து அழகு பார்த்து, சூடிக் கொடுத்த சுடர் கொடியாக மாறியவர் ஆண்டாள்.
கண்ணனே தனக்கு கணவனாக வர வேண்டும் என்பதற்கு, பாவை நோன்பை ஆண்டாள் மேற்கொண்டார். அப்படி இந்த நோன்பை மேற்கொள்பவர்கள், அதிகாலையிலேயே எழுந்து, தனது தோழிகளுடன் சென்று நீராடி விட்டு வருவார். பின்பு தன்னை கோபிகையாகவும், ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், பெருமாள் அமர்ந்த கோயிலை கண்ணனின் வீடாகவும் எண்ணிக்கொண்டு தினமும் வழிபாடு செய்தார்.
தனக்கு திருமால் தான் கணவராக வர வேண்டும். அவரைத் தவிர வேறு யாரையும் கணவனாக ஏற்க மாட்டேன் என்று சபதம் மேற்கொண்டாள் ஆண்டாள். இதையடுத்து தான், மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாவை நோன்பை மேற்கொண்டாள். கிருஷ்ணன் அவதாரத்தின்போது கிருஷ்ணரை மணக்க கோபியர்கள் மேற்கொண்ட நோன்பு தான் பாவை.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு, அவரது கையில் இருந்த சங்கை பார்த்தபடி, ‘மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால்” என தொடங்கி, வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை என்று முடியும் முப்பது பாடல்களை திருமாலை நினைத்து பாமாலையாக பாடினார். எப்படி ஆண்டாள், விரதமிருந்து திருமாலை திருமணம் செய்தாரோ அதே போன்று பெண்கள், தான் விரும்பிய கணவர் அமைய வேண்டி விரதம் இருந்து தங்களது விரத நாட்களில் நெய், பால், சேர்த்த உணவு வகைகளை உண்ணக் கூடாது.
அவர்கள், எளிய வகை உணவுகளை சாப்பிட்டு விரதத்தை கடைபிடிக்கலாம். ஆண்டாள், பெருமாள் படம் வைத்து மலர் தூவி, காலை மாலை என்று இரு நேரங்களிலும் வழிபாடு செய்யலாம். அப்படி செய்வதன் மூலமாக ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த கணவனை தர அருள் புரிவார். திருமணத் தடைகளும் விலகும் என்பது ஐதீகம்.
