மறுபிறவி இல்லாத வாழ்க்கைக்கு அந்தாதி பாடல்!
மறு பிறவி இன்றி வாய்க்க ஓதவேண்டிய அந்தாதி பாடல்..!
அன்னையவள் நம் இல்லத்தைத் தன் அருளால் நிரப்புவது, நம் மனந்தனில் குடிகொண்ட அருளை வெளியேற்றுவதற்கு அல்ல. தகுதியுடையோர்க்கு உதவி செய்வதற்காக தான். ஆனால் பொருட் செல்வத்தை நிலையானது என்று நாம் நினைக்கத் துவங்கும் வேளை நம் மனத்திலிருந்து அருளானது தானாகவே வெளியேறிவிடுகின்றது…
பணம் சேர்க்கும் குறிக்கோள் வந்தவுடன், மற்றவர்களுக்கு உதவ நேரமும் இருப்பது இல்லை, மனமும் இருப்பது இல்லை. பொருளே நிரந்தரம் என்று நினைத்து விடுகிறார்கள். மேலும் மேலும் பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஒரு அசுரத்தனம் வந்து விடுகிறது. அசுரத்தனம் வந்தால் கடைசியில் அழிவுதான் நடக்கிறது.
சரி.. பிறவி என்று இருந்தால் பொருள் வேண்டும். நமக்கு, நம் குடும்பத்திற்கு, உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, நமது எதிர் காலத்திற்கு என்று பொருள் கட்டாயம் வேண்டும். எவ்வளவு பொருள் இருந்தாலும் பத்தாது என்றே தோன்றுகிறது. அதை சேர்ப்பதிலேயே காலம் முழுவதும் சென்று விடுகிறது. பின் இதற்க்கு என்ன தான் வழி?
அபிராமி அன்னை ஒன்றே இதற்க்கு வழி. அவளை வணங்கினால் பிறவியே வராது. அப்படி இருக்க பின் எங்கிருந்து பொருள் ஆசை வரும்? அன்னையை வணங்கினால் மரணமும் இன்றி, பிறவியும் இன்றி ஆனந்த பெறு வாழ்வு வாய்க்கும்.
அரணம் பொருள் என்று,
அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த
பெம்மானும், முகுந்தனுமே,
சரணம் சரணம் என நின்ற
நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார்,
இந்த வையகத்தே.
மரணம் என்பது தோல் போர்த்திய இந்த உடம்புக்குத்தானேயன்றி, நமது ஆன்மாவுக்கு அல்ல… அன்னையை நம்பினார், அவளடியே சரணமென்று தஞ்சமடைந்தோருக்கு மீண்டும் பிறப்பில்லை. அவர்களது ஆன்மாவுக்கு மரணமேயில்லை. அது மீண்டும் ஒரு உடலைத் தனக்கு வேண்டுமென்று தேடிச் செல்லாது. செல்லவேண்டிய அவசியத்தையும் அது தாண்டி முக்தி பெற்று விடுகின்றது.. அது பிறப்பறுப்பினைக் குறிக்கின்றது…
மரணமில்லாப் பெருவாழ்வு என்பது அன்னையின் அடியார்களுக்குக் கிடைத்த வரம். அன்னையையே தஞ்சமென்று நம்பி விழுந்தோர், புண்ணியங்களை மட்டுமே புரிவாரன்றி, பாவங்களை சுமப்பதில்லை. அவர்தம் புண்ணியங்களே அவர்களது பெயர்களை இவ்வுலகத்தில் நிலைநிறுத்தி விடுகின்றது…
ஆகவே அன்னையை போற்றுவோம்.
அவள் திருவடி பணிவோம்.
அன்னை அபிராமியே போற்றி!
திருச்சிற்றம்பலம்.
