அப்பனுக்கு சங்காழி அளித்த பெருமான் , யார் தெரியுமா ?

146

அப்பன் என்றால் திருப்பதி வெங்கடாஜலபதியை குறிக்கும்.

மோர் கொண்டுவந்த மங்கைக்கு மோட்சம் கோடு என்று ராமானுஜர் பனை ஓலையில் எழுதிக் கொடுத்த பரிந்துரைக் கடிதத்தை திருப்பதி பெருமாள் ஏற்றுக் கொள்ளக் காரணமே… ‘எனக்கு சங்கு சக்கரம் கொடுத்த ராமானுஜர் சொன்னால் கேட்காமல் இருக்க முடியுமோ?’ என்பதுதான்.

திருமாலே சங்கு சக்கரத்தோடுதானே இருக்கிறார்… பிறகு என்ன அதை ராமானுஜர் கொடுப்பது?
கேள்விக்கு விடை காண நாம் முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் காலத்துக்குச் சென்று வர வேண்டும்.
பேயாழ்வார் திருப்பதி பெருமாளை தனது பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். அதில் ஒரு பாசுரம் இதோ….

தாழ்சடையும் நீள் முடியும் ஒண் மழுவும்- சக்கரமும்
சூழ் அரவும் பொன்னாணும் தோன்றுமால்- சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து!

தாழ்ந்த சடையும், அழகிய மழுப்படையும், சக்கரமும், சுற்றி அணிந்துள்ள பாம்பணியும்…. நீண்ட திருமுடியும் பொன் அரைஞாண் அணிந்த வடிவும் என இரு வடிவமாக தெரிகிறான் அருவிகள் பாயும் மலையில் இருக்கும் என் தந்தையான திருவேங்கடம் உடையான் என்கிறார் பேயாழ்வார்.

ராமானுஜர் காலத்துக்கு சில நூற்றாண்டுகள் முன்பாகவே…. திருப்பதி மலையில் இருக்கும் தெய்வம் திருமாலா, சிவனா என்கிற வாத பிரதிவாதங்கள் இருந்திருக்கின்றன என்பதை பேயாழ்வாரின் பாசுரத்தில் இருந்தே நாம் அறியலாம்.
வேங்கடமுடையான் சிவன் என்று சைவர்கள் வாதம் புரிந்து தாங்களே வழிபடுவோம் என்று கூறினர். ஆனால் வைணவர்களோ, ‘இது சிவன் அல்ல… வேங்கடமுடையான் எம் நாராயணனே’ என்று வாதிட்டனர். இந்த போட்டி சில நூற்றாண்டுகளாகவே நடந்துகொண்டிருந்தது.

இந்த நிலையில்தான் ராமானுஜர் திக் விஜயம் எனப்படும் பயணம் புறப்பட்டார். ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டார் ராமானுஜர். முதலில் சோழ மண்டலத்திலுள்ள அத்தனை திவ்ய தேசங்களையும் தரிசித்தார். ஒவ்வொரு திருமாலுக்கும் மங்களாசாசனம் செய்தார். இமயமலை சாரலில் உள்ள பத்ரிகாசிரமம், சாளகிராமம் போன்ற வட பாரத திவ்ய தேசங்களையும் கண்டு திருமாலை மங்களாசாசனம் செய்துவிட்டு… திரும்பும் வழியில் திருப்பதி வந்தார் ராமானுஜர்.

ராமானுஜரிடம் சிஷ்யர்கள் அங்கே நடந்துவரும் நிகழ்வுகளை சுட்டிக் காட்டினார்கள். ராமானுஜர் வேங்கடவனை தரிசிக்கப் புறப்பட்டார். பேயாழ்வார் சொன்ன அடையாளங்கள் பல அப்போது மாறிப் போயிருக்க வேண்டும். ஏனெனில் இரு தரப்பினரும் இது தம் தெய்வமே என்று உரிமை கொண்டாடி வந்ததால்… இரு தரப்பு அடையாளங்களும் இல்லாமல் வேங்கடவன் வெறுமையாய் இருந்தார்.
திருமலையில்,சைவர்கள் ஸ்ரீநிவாஸன் எங்களுக்கே சொந்தம், அவர்கள் எங்கள் தெய்வம், என்று பெரியதிருமலைநம்பிகளுடன் வாதிட்டு வந்த நேரம். சிலர் சிவனுடைய சின்னங்களையே பெருமாள் தாங்கியிருக்கிறார் என்று வாதிட்டனர்.

பாஷ்யகாரர் இன்றிரவு, உங்கள் தம்பிரான் சின்னங்களான சூலம், டமரு போன்றவைகளையும், எங்கள் எம்பெருமான், சின்னங்களான ஆழி, சங்கம் ஆகியவற்றையும் பெருமாள் சந்நதியில் வைத்து விட்டு கர்பக்ருஹத்தைப்பூட்டி, இருதரப்பினரும் காவல் காத்து வரவேண்டியது. மறுநாள் காலை ஸ்வாமி எந்தச் சின்னங்களைத் தாங்கி இருக்கிறாரோ அதனையே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கூறினார்.

எல்லோரும் சம்மதிக்க அதுபோலவே செய்ய, இருதரப்பினரும் அன்று இரவு காவல் இருந்தனர். மறுநாள், ஸூர்யோதயம் ஆனதும், திருகாப்பு நீக்கி, உள்ளேச் சென்று சேவித்தனர். எம்பெருமான் வேங்கடவன் திருக்கரங்களில் சங்கும், சக்ரமும் ஜொலிக்க, கண்டு அனைவரும் வியந்தனர்.

ஆழ்வார் திருவடிகளில் சரணம்.
திருவேங்கடவனின் திருவடிகளில் சரணம்……