Monday, October 23, 2023
HomeAanmeega Thagavalgalஆணவம் ஒழிய சிவராத்திரியில் சிவன் வழிபாடு!

ஆணவம் ஒழிய சிவராத்திரியில் சிவன் வழிபாடு!

ஆணவம் ஒழிய சிவராத்திரியில் சிவன் வழிபாடு!

வாசீஸ்வரர் (தங்காதலி வாசீஸ்வரர்) கோயிலானது திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருப்பாசூர் என்ற ஊரில் உள்ளது. இங்கு வாசீஸ்வரர் தான் மூலவர். சோமாஸ்கந்தர் உற்சவர். மோகனாம்பாள், பசுபதி நாயகி தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு கோயில்களில் இந்தக் கோயில் 16ஆவது கோயிலாகும்.

வைகாசியில் 10 நாட்கள் பிரம்மோற்சவம், மார்கழியில் திருவாதிரை, சிவராத்திரி ஆகிய நாட்கள் இந்தக் கோயிலில் சிற்ப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாக சதுர வடிவ பீடத்தில் காட்சி தருகிறார். இவர், தலையில் வெட்டுபட்ட தடத்துடன் தன் உடலில் மேல் பகுதி மட்டும் இடது புறமாக நகர்ந்து இருப்பது போன்று காட்சி தருவது சிறப்பம்சம்.

காயம்பட்ட லிங்கம் என்பதால், இவரை கையால் தொட்டு பூஜைகள் செய்யப்படுவதில்லை. அர்த்தமண்டபத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சக்கரம் இருக்கிறது. மூங்கில் வனத்தின் அடியில் தோன்றிய சிவன் என்பதால், இவருக்கு பாசுரநாதர் என்று பெயர். பாசு என்பதற்கு மூங்கில் என்று பொருள்படும். சிவன் இங்கு லிங்க வடிவில் பெருமாள் வினை தீர்த்த ஈஸ்வரன் என்ற பெயரில் தனியாகவும் இருக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 249ஆவது சிவாலயமாகும்.

தடைபட்ட திருமணங்கள் நடக்கவும், தோஷங்கள் நீங்கவும் இந்தக் கோயிலில் பிரார்த்தனை செய்கின்றன. பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் விநாயகர் சபையில் 11, ஸ்ரீ சக்கரத்தில் 5 என்று நெய் தீபங்கள் ஏற்றி தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

சிவன் சன்னதிக்கு வலதுபுறம் அம்பாள் தனிச்சன்னதியில் அருள் பாலிக்கிறாள். இதனை சிவன், அம்பாள் திருமணம் செய்த கோலம் என்று அழைப்பார்கள். சிவன் மற்றும் அம்பாள் சன்னதிகளுக்கு இடையில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் அமைந்து சுப்பிரமணியர் ஒரே வரிசையாக சிவ குடும்ப தெய்வங்கள் காட்சி தருவது எங்குமேயில்லாத அதிசயமாக இந்தக் கோயிலில் திகழ்கிறது.

தனது தலை முடியை கண்டதாக பொய் சொன்ன தாழம்பூவை (பிரம்மனுக்காக பொய் சொன்னதால்) பூஜையிலிருந்து ஒதுக்கி வைத்தார் சிவபெருமான். தனது தவறை உணர்ந்த தாழம்பூ சிவனிடம் மன்னிப்பு கேட்டு பரிகாரம் வேண்டியதைத் தொடர்ந்து சிவராத்திரி நாளில் மட்டும் தனது பூஜைக்கு பயன்படும்படி சிவன் வரம் கொடுத்துள்ளார்.

இதன் காரணமாக இந்தக் கோயிலில் சிவராத்திரி அன்று இரவு ஒரு நேரம் மட்டும் சிவனின் உச்சியில் தாழம்பூவை வைத்து பூஜை செய்கின்றனர். இந்த நேரத்தில் சிவனை தரிசனம் செய்தால், ஆணவம், பொய் சொல்லும் குணங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம். தட்சனின் யாகத்திற்கு பார்வதி தேவி சென்றதால், அவரை பூலோகத்தில் சாதாரண பெண்ணாக பிறக்கும்படி சிவன் சபித்தார்.

சிவனின் சாபத்தால் பூலோகத்தில் பெண்ணாக பிறந்த பார்வதி தேவி இந்தக் கோயிலுக்கு வந்து சிவனை நினைத்து தவம் புரிந்தாள். அவளது தவத்தால் மனம் மகிழ்ந்த சிவன் அம்பாளை தனது காதலியே என்று அன்போடு அழைத்து அவளை மன்னித்து அருள் புரிந்தார். இதனால், இங்குள்ள அம்மனை தங்காதலி அம்பாள் என்று அழைப்பார்கள். தங்காதலி அம்மனிடம் வேண்டிக் கொண்டால் கணவன் மனைவிக்கிடையில் ஒற்றுமை அதிகரிக்கும். அம்பாளின் அருளால் இந்த ஊருக்கு தங்காதலிபுரம் என்று பெயர் உண்டு.

விஷ்ணு பகவான் அசுரர்களை அழித்த தோஷத்தால் தன்னிடமிருந்த 16 செல்வங்களில் 11 செல்வங்களை இழந்துள்ளார். இழந்த செல்வங்களை மீண்டும் பெறுவதற்கு சிவனை வழிபட்டுள்ளார். அவரது ஆலோசனையின்படி, இத்தலத்தில் 11 விநாயகர்களை பிரதிஷ்டை செய்து வணங்கி இழந்த செல்வங்களை பெற்றார் என்று வரலாறு கூறுகிறது.

இதனை உணர்த்தும் விதமாக இந்தக் கோயிலில் 11 விநாயகர் ஒரே இடத்தில் சிறு மண்டபத்தின் கீழ் காட்சி தருகின்றார். இதனை விநாயகர் சபை என்று அழைப்பார்கள். இதில், 3 விநாயகர் கிழக்கு பார்த்தும், இவர்களுக்கு பின்புறம் இருபுறமும் சிறிய விநாயகர்களுடன் நடுவில் ஒரு பெரிய விநாயகரும், இடது புறத்தில் 5 விநாயகர்களும் இருக்கின்றனர். அருகிலேயே கேது பகவான் தனி சன்னதியில் காட்சி புரிகிறார்.

திரிபுராந்தகர்களை அழிக்க சென்ற சிவபெருமான், விநாயகரை வணங்காமல் செல்லவே அவரது தேர்ச்சக்கரத்தின் அச்சை விநாயகர் முறித்துவிட்டார். அவர் ஒரு சபை அமைத்து சிவனிடம் தன்னை வணங்காமல் சென்றது ஏன்? என்று கேட்டு விசாரணை செய்ததாகவும் விநாயகர் சபை உண்டானதற்கு மற்றொரு வரலாறு கூறப்படுகிறது.

இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த குறும்பன் என்ற சிற்றரசன் ஒருவன் மன்னனுக்கு சரியாக வரி கட்டாமல் இருந்தால். ஆகையால், அவனுடன் போரிட்டு வரியை வாங்க சோழ மன்னன் ஒருவன் குறும்பன் மீது படையெடுத்தான். காளி தேவியின் தீவிர பக்தனாக குறும்பன் இருந்தான். அதனால், காளி தேவியை ஏவி விட்டு சோழ படைகளை விரட்டியடித்தான். சோழ மன்னன் தனக்கு உதவி செய்யும்படி சிவபெருமானிடம் வேண்டினான்.

சோழ மன்னனின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் காளியை அடக்க நந்தி பகவானை அனுப்பி வைத்தார். பூலோகம் வந்த நந்தி பகவான் காளியுடன் போரிட்டு அதனை வெற்றி பெற்றது. அதோடு காளியின் இரு கால்களிலும் பொன் விலங்கை பூட்டியும் அதனைக் கட்டுப்படுத்தினார். பின் சோழ மன்ன்ன் இந்தப் பகுதியை மீண்டும் கைப்பற்றினான்.

நந்தியால் அடக்கப்பட்ட சொர்ணகாளி இந்தக் கோயில் பிரகாரத்தில் 4 கைகளுடன் நின்ற கோலத்தில் தனியாக காட்சி தருகிறாள். இவளது கால்களில் விலங்கு பூட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பௌர்ணியன்றும் இவளுக்கு மாலை வேளையில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

பல நூறாண்டுகளுக்கு முன்பு இத்தலம் மூங்கில் மரங்கள் நிறைந்த வனமாக இருந்துள்ளது. அருகில் உள்ள புல்வெளிப் பகுதியில் மேய்ச்சலுக்கு வந்த பசுக்களில் ஒன்று மட்டும் தொடர்ந்து இங்கு ஒரு சிறு மேட்டின் மீது அடிக்கடி பால் சொரிந்துள்ளது. இதனைக் கண்ட இடையன் இது குறித்து மன்னனிடம் தெரியப்படுத்தினான். மன்னன் மண்ணிற்கு அடியில் தோண்டிப் பார்க்க உத்தரவிட்டான்.

காவலர்கள் இந்த இடத்தில் வாசி என்ற கருவியால் தோண்டினர். அப்போது மண்ணிற்கு அடியில் இரத்தம் வெளிவந்துள்ளது. அதிர்ந்த மன்னன் அடியில் பார்த்த போது சிவன், சுயம்பு லிங்கமாக இருந்தார். மன்னன் பயத்துடனையே அரண்மனைக்கு திரும்பி விட்டான். அடுத்தநாள் மன்னனின் எதிரிகள் அவனை பழி தீர்ப்பதற்கு கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்றை குடத்தில் போட்டு அவனிடம் கொடுத்துவிட்டனர்.

ஆனால், மன்னன் குடத்தை திறந்து பார்ப்பதற்கு முன்பாகவே அங்கு வந்த பாம்பாட்டி குட த்திலிருந்த கொடிய விஷம் கொண்ட பாம்பை பிடித்து சென்றுவிட்டான். அன்றிரவு தானே பாம்பாட்டியாக வந்ததையும், மூங்கில் காட்டிற்குள் சுயம்புவாக எழுந்தருளியிருப்பதையும் மன்னனுக்கு உணர்த்தினார். அதன்பின் மன்னன் இத்தலத்தில் கோயில் எழுப்பினான். வாசி என்ற கருவியால் வெட்டுப்பட்ட சிவன் என்பதால், இத்தல இறைவனுக்கு வாசீஸ்வரர் என்று பெயரிட்டான்.

மது கைடபர் எனும் இரு அசுரர்கள் பிரம்மாவின் வேகத்தை கடலுக்கு அடியில் மறைத்து வைத்து விட்டனர். இதன் காரணமாக பிரம்மாவால் படைப்புத் தொழிலை செய்யமுடியவில்லை. எனவே மகாவிஷ்ணு மத்ஸ்ய (மீன்) அவதாரம் எடுத்துச் சென்று அவர்களை அழித்து வேகத்தை மீட்டு வந்தார்.

இதனால், அவரை தோஷம் பிடித்தது. இந்த தோஷம் நீங்க சிவனிடம் வேண்டினார். அவர் பூலோகத்தில் இத்தலத்தை சுட்டிக்காட்டி தன்னை வழிபட்டு வர தோஷம் நீங்கும் என்றார். அதன்படி மகாவிஷ்ணு இங்கு வந்தார். இங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றார். சிவனும் சுயம்புவாக எழுந்தருளினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 7 =

Most Popular