Saturday, October 28, 2023
HomeAanmeega Thagavalgalஅருள் மழை பொழியும் ஆடி மாதம்

அருள் மழை பொழியும் ஆடி மாதம்

ஓராண்டில்,ஆடி, புரட்டாசி,மார்கழி ஆகிய மூன்று மாதங்களும் இறை வழிபாட்டுக்காக ஒதுக்கப்பட்டவை.
இவற்றில் மார்கழி பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தது.புரட்டாசி மாதத்தின் ஒரு பாதி பித்ரு வழிபாட்டுக்கும் மறுபாதி நவராத்திரி என்று அம்மன் வழிபாட்டுக்கும் ஒதுக்கப்பட்டது.
ஆடி மாதத்திற்கோ #அம்மன் மாதம் என்றே பெயர்.ஆடி மாதம் பிறந்து விட்டாலே பண்டிகைகள் களைகட்டும்.
ஆடியில் அம்மன் கோவில்கள் எல்லாம் திருவிழாக் கோலம் காணும்.இல்லங்களில் விரதங்கள் நடைபெறும்.இத்தகைய சிறப்புகள் உடைய ஆடி மாதத்தின் சிறப்புகளை இந்த மாதத்தில் வரும் விழாக்களின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
சூரியனை அடிப்படையாகக் கொண்ட மாதங்கள் நம் தமிழ் மாதங்கள்.சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதமே ஆடி மாதம்.
ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையிலான ஆறு மாதங்களும் தட்சிணாயன புண்ணியகாலம் எனப்படும்.சூரிய பகவான் தனது வடக்கு முகமான பயணத்தை முடித்துத் தெற்கு திசை நோக்கிய பயணமே தட்சிணாயனம்.தெற்கு என்பதே பித்ருக்களின் திசையைக் குறிக்கும்.அதனால் தான் இந்தக் காலத்தில் மிகுதியாகப் பித்ருக்களுக்கு பிரீத்தி செய்யும் வழிபாடுகள் மிகுதியாக இருக்கும்.
இந்த ஆடி மாதத்தில் மற்றுமொரு சிறப்பு,ஆறு மாதத்துக்கும் மேலாகச் சந்திரனைத் தவிர வேறு கிரகங்கள் அனைத்தும் கேதுவுக்கும் ராகுவுக்கும் இடையிலேயே அடைபட்டு இருக்கின்றன.சந்திரனும் மாதத்தில் பாதி நாள்கள் கேதுவுக்கும் ராகுவுக்கும் இடையில் நகர்ந்து கால சர்ப்ப தோஷம் அமைந்தது.கடந்த டிசம்பர் மாதம் தனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை ஏற்பட்டது.இதன் பின் தான் நோய் தொற்று தோன்றி உலகையே ஆட்டிவைத்தது.
தற்போது ஆரோக்கியத்துக்கு அதிபதியான சூரியன் அந்த நிலையை உடைத்து வெளியே வருவது மிகவும் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.எனவே,நோய்த் தொற்று படிப்படியாகக் குறையும் என்று நம்பப்படுகிறது.

ஆடி அமாவாசை
ஆடி மாதத்தின் தொடக்கமே புண்ணிய காலமாகக் கருதப்படும்.இந்த நாளில் முன்னோர்களுக்குரிய வழிபாடுகளைச் செய்வது மிகவும் புண்ணிய பலன்களைத் தரும்.அதனால் தான் ஆடி மாதத்தின் முதல் நாளை ஆடிப் பண்டிகை என்றே சொல்வது வழக்கம்.
ஆடி மாதத்தில் வரும் மற்றுமொரு புண்ணிய தினம் அனைவரும் தவறவிடக் கூடாத,ஆடி அமாவாசை.
ஆடி அமாவாசை அன்று சமுத்திரக் கரைகளிலும் நதிக்கரைகளிலும் கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் தரும் வழக்கம் உண்டு.இந்த நாளில் செய்யும் முன்னோர் வழிபாடு வாழ்வில் முன்வினை காரணமாக உண்டாகும் தீவினைப் பயன்களைக் குறைத்து நல்வினைப் பயன்களை அதிகப்படுத்தும்.
இந்த முறை #ஆடி #அமாவாசை 20/7/2020 அன்று

ஆண்டாள்
ஆடிப்பூரம்
பூமி தேவியின் அம்சமான ஆண்டாள் நாச்சியார் இந்த பூலோகத்தில் அவதரித்த திருநாள்.
அன்னை பார்வதி தேவி இந்த உலகின் நன்மைக்காக பூலோகத்தில் தோன்றிய தினமும் ஆடிப்பூரம் என்கின்றன புராணங்கள்.
பூர நட்சத்திர தினத்தில் அம்மன் வழிபாடும் ஆண்டாள் வழிபாடும் செய்வது மிகவும் பயனுடையதாகச் சொல்லப்படுகிறது.
ஆடிப்பூரமும் #நாகசதுர்த்தியும் ஒரே நாளில் 24/7/2020 வருகின்றன.
இயற்கை வழிபாடுகளில் ஒன்றான நாகர் வழிபாடு என்பது தென் இந்தியா முழுவதும் ஆதியில் இருந்து வந்த வழிபாடாகும்.அதன் தொடர்ச்சியாகவே தற்போதும் நாம் ஆலயங்களில் அம்மன் வழிபாட்டோடு இணைத்துக் கொண்டாடுகிறோம்.
நாகசதுர்த்தி நாளில் பலர் வீடுகளில் நாகர் வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளது.வழக்கமாக இந்த நாளில் ஆலயம் சென்று அங்கிருக்கும் நாகருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.
நாகர் வழிபாடு ராகு தோஷத்தால் உண்டாகும் திருமணத் தடையினை நீக்கும் என்பது நம்பிக்கை.
நாகர் சதுர்த்திக்கு அடுத்த நாள் கருட பஞ்சமி என்று கொண்டாடப்படும்.நாகர் சதுர்த்தி கொண்டாடியவர்கள்,கட்டாயம் கருட பஞ்சமி நோன்பையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது நியதி.

மூன்று பிரதோஷம் வரும் அபூர்வ ஆடி
வழக்கமாக ஒரு மாதத்தில் இரண்டு பிரதோஷ தினங்களே வரும்.ஆனால் இந்த முறை மூன்று தினங்கள் வருகிறது.அவற்றில் இரண்டு பிரதோஷம் #சனிமஹாபிரதோஷம்.சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷமே மஹாபிரதோஷம்.
18/7/2020 மற்றும் 2/8/2020 ஆகிய தினங்கள் சனிக்கிழமைகளில் வருகின்றன.மூன்றாவது #பிரதோஷம் 16/8/2020 ஞாயிற்றுக் கிழமையில் வருகிறது.
நாமெல்லாம் சிவ வழிபாட்டில் ஈடுபட்டு நமக்கு உண்டாகும் துன்பங்கள் தீர்வதற்காக இறைவனே அருளும் புண்ணிய தினங்கள் இவை.இந்த நாளில் தவறாமல் சிவபுராணம் பாடி #சிவபெருமானைப் போற்றி நமக்கு வரும் இன்னல்களிலிருந்து விடுதலை பெறலாம்.

வரலட்சுமி நோன்பு
சுமங்கலிகள் கட்டாயம் கடைப் பிடிக்க வேண்டிய விரதம் வரலட்சுமி நோன்பு.ஆடி மாதம் பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக் கிழமையில் கடைப் பிடிக்க வேண்டிய இந்த விரதத்தை மேற்கொண்டால் வீட்டில் செல்வ வளமும் மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியமும் மேம்படும் என்றும் நம்பப்படுகிறது.குறிப்பாகப் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக வாழும் வரம் அருளும் விரதம் இது என்பது ஆன்றோர்களின் வாக்கு.

ஆடிப்பெருக்கு
ஆடி மாதம் என்பது விவசாயத்தைத் தொடங்கும் மாதம்.மழை பொழிந்து நதியில் நீர்ப்பெருக்கு காணும் மாதம்.அதனால் தான் ஆடிப் பட்டம் தேடி விதை என்னும் பழமொழி நம்மிடையே காணப்படுகிறது.
நீரே நமக்கு உணவாகிறது.அந்த நீரை வழிபடும் நாள் ஆடிப்பெருக்கு.
ஆடி மாதம் 18 ம் தேதி இது கொண்டாடப்படுவதால் பதினெட்டாம் பெருக்கு என்றும் சொல்லப்படுகிறது.
காவிரித் தாயை இந்த நாளில் பூத்தூவிக் கொண்டாடும் மரபு நம்மிடையே உண்டு.அவ்வாறு செய்வதன் மூலம் நல்ல விளைச்சல் உண்டாகும் என்பது நம்பிக்கை.
இவை தவிர முருகக் கடவுளை வழிபட வேண்டிய #ஆடிக்கிருத்திகை, ஹயக்கிரீவரை வழிபட வேண்டிய ஆடிப் பௌர்ணமி, ஹரியும் ஹரனும் ஒன்று என்று விளக்கும் #ஆடித்தபசு என்று பல்வேறு சிறப்புகளும் இந்த மாதத்தில் உண்டு.
அம்மனை வழிபட வேண்டிய ஆடியில் அம்மன் வழிபாடு கட்டாயம் செய்ய வேண்டியது ஒன்று.
ஆடி மாதம் காற்றடி காலமாகச் சொல்லப்படுவது.காற்றின் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும் காலம் இது.எனவே இந்தக் காலத்தில் நோய்கள் நீங்க வீட்டில் வேப்பிலைக் காப்பிட்டு அம்மனை வழிபடும் மாதமாக இந்த ஆடி மாதத்தை நம் முன்னோர்கள் குறித்தனர்.
அம்மனை இந்த மாதத்தில் வீட்டுக்கு அழைத்து அவளுக்கு உகந்த கூழ் ஊற்றி வழிபடுவது வழக்கம்.அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறும்.கிராமங்களில் அனைத்து கிராம தேவதைக் கோவில்களிலும் விழாக்கள் களைகட்டும்.
எந்த தெய்வத்தை மறந்தாலும் #குலதெய்வத்தை வழிபட மறக்கக் கூடாது என்பது பழமொழி.குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டிய மாதமாக இந்த ஆடி மாதம் திகழ்கிறது.
இந்த ஆண்டு ஆடி மாதம் வரும் வியாழக்கிழமை 16/7/2020 அன்று .
இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக எந்த விழாக்களும் பொதுவில் நடைபெறாது.அதனால் என்ன!அம்பிகை நம் மனதில் அருள விரும்புபவள்.நம் வீட்டில் அம்பிகையை வழிபட்டுத் திருவிழாக் காண்போம்.நம்மைப் பிடித்திருக்கும் துன்பங்கள் எல்லாவற்றையும் நீக்குமாறு #அம்மனை வணங்கி வேண்டிக் கொள்வோம்.
#அம்பிகையும் அருள்வாள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 3 =

Most Popular