Thursday, October 19, 2023
HomeAanmeega Thagavalgalநாகதோஷம் போக்கும் ஆறுமுக நயினார் கோயில்!

நாகதோஷம் போக்கும் ஆறுமுக நயினார் கோயில்!

நாகதோஷம் போக்கும் ஆறுமுக நயினார் கோயில்…!

தேனிபோடி சாலையில் கோடாங்கிபட்டி கிராமத்தின் அருகில் கொட்டக்குடி ஆற்றின் மேற்கு கரையில் உள்ளது ஆயிரம் ஆண்டுகள் பழமையான விருப்பாட்சி ஆறுமுக நயினார் கோயில். மூலவராக ஆறுமுக நயினார் என அழைக்கப்படும் முருகன் சிலை உள்ளது. மயில் மேல் அமர்ந்த நிலையில் 6 முகங்களுடன் முருகன் காட்சியளிக்கிறார்.
அருகில் 7 தலை நாகம் மற்றும் மயில் வாகனத்துடன் நாக சுப்பிரமணியர் சிலை உள்ளது. மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் திரிதளம் என அழைக்கப்படுகிறது. ருத்ராட்ச மூர்த்தி என்ற பெயரில் இங்கு சிவனுக்கு தனி சன்னதி உள்ளது.

இங்கு சிவன் குருவாக இருப்பதாக ஐதீகம். அவரது சிலையுடன் ருத்ராட்ச மாலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது வேறெந்த கோயிலிலும் காண முடியாத சிறப்பாகும்.
மேலும் சன்னதியின் முன்பு நந்தி சிலை இல்லாதது குறிப்பிடத்தக்கது. கோயிலில் கொடிமரம் உள்ளது. தலமரமாக வில்வ மரங்கள் உள்ளன.

முருகன் சன்னதி முன்பு மயில் சிலை உள்ளது. கோயில் முன்பு முருக தீர்த்தம் எனப்படும் வற்றாத தீர்த்த தொட்டி உள்ளது. தீர்த்த தொட்டியின் சுவற்றில் விநாயகர், முருகன், சிவலிங்கம், வழிபட்ட நிலையில் சப்த கன்னியர் சிலைகள் உள்ளன.

தல வரலாறு:

பண்டைய காலத்தில் இப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான் அருகில் உள்ள விளை நிலத்தில் தனது சிலை உள்ளதாகவும், அதனை தோண்டியெடுத்து கோயில் எழுப்புமாறு கூறி மறைந்தார்.
இதனை அப்பகுதியை ஆண்ட குறுநில மன்னரிடம் விவசாயி தெரிவித்தார்.

மன்னர் உதவியுடன் தோண்டியெடுக்கப்பட்ட அந்த சிலைக்கு சிறிய அளவில் கோயில் எழுப்பப்பட்டது. பிற்காலத்தில் கோபுரத்துடன் கோயில் விரிவுபடுத்தப்பட்டது.
தைப்பூசம், தமிழ் வருட பிறப்பு, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, கந்த சஷ்டி உள்ளிட்டவை இக்கோயிலின் விசேஷ தினங்கள். சித்திரை மாத பிறப்பன்று முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதனால் அன்று விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜைகளுடன் விழா நடக்கிறது. தினமும் நாகசுப்பிரமணியருக்கு பூஜை செய்த பின்னரே மூலவருக்கு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் நீங்க வேண்டி இங்குள்ள தீர்த்த தொட்டியில் நீராடுகின்றனர். பின்னர் நாகசுப்பிரமணியருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். குடும்ப நலம், தொழில் முன்னேற்றம், கல்வி சிறக்க பக்தர்கள் வழிபடுகின்றனர்.

வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் முருகனுக்கு பாலாபிஷேகம், சந்தனாபிஷேகம் உள்ளிட்டவையால் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் வணங்குகின்றனர்.
குருப்பெயர்ச்சியால் ஏற்பட்ட தோஷம் நீங்க கோரி இங்குள்ள ருத்ராட்ச மூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை மாலையணிவித்து பக்தர்கள் வேண்டுகின்றனர்.

ஐப்பசி அன்னாபிஷகத்தின் போது அன்னத்தால் லிங்க வடிவம் பிடித்து வில்வம் மற்றும் சந்தனம் அணிவித்து பூஜை செய்யப்படுகிறது. மறுநாள் அந்த அன்னலிங்கத்தை ஆற்றில் கரைத்து விடுகின்றனர். கோயில் நடை தினமும் காலை 6 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + fifteen =

Most Popular