Sunday, October 15, 2023
HomeAanmeega Thagavalgalவிவசாயம் செழிக்க வழிபட வேண்டிய கோயில்!

விவசாயம் செழிக்க வழிபட வேண்டிய கோயில்!

விவசாயம் செழிக்க வழிபட வேண்டிய கோயில்!

கரூர் மாவட்டம் பெரிய திருமங்கலம் என்ற ஊரில் உள்ள கோயில் அருங்கரை அம்மன் கோயில். இந்தக் கோயிலில் அருங்கரை அம்மன் மூலவராக காட்சி தருகிறாள். இங்கு ஊஞ்சல் மரம் தல விருட்சமாக விளங்குகிறது. இங்கு 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் விழா நடத்தப்பட்டதாம்.

இதை பேரூட்ட விழா என்று அழைத்தனர். இந்த விழாவின் போது மட்டும் அம்பாள் சிலை இருக்கும் பெட்டியை கிராமம் முழுவதும் உலாவாக எடுத்துச் செல்வார்களாம். அம்பாள் உத்தரவு கிடைக்காததால் இந்த விழா சில நூற்றாண்டுகளாக நடத்தப்படவில்லை. தை மாதத்தில் அருகிலுள்ள நாட்ராயர் கோயிலிலிருந்து அம்பாளுக்கு பொங்கல் சீர் கொடுக்கும் விழா நடக்கிறது. பொதுவாக அம்பாள் கோயில்களில் குங்குமம், மஞ்சள் தான் பிரசாதமாக கொடுப்பது வழக்கம். ஆனால், இங்கு அவளுக்கு நைவேத்தியம் தயாரிக்கும் அடுப்பிலுள்ள சாம்பலையே தருகின்றனர். இந்த சாம்பல் அதிக மருத்துவ தன்மை வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.

கோயில் அருகே ஓடும் அமராவதி ஆறு அம்பாளுக்கு மாலையிட்டது போல இந்த இடத்தில் திரும்பிச் செல்கிறது. தொடக்கத்தில் அம்பாள் நல்லதாய் என்று அழைக்கப்பட்டாள். ஆற்றங்கரையில் அமர்ந்த அம்பாள் என்பதால் இவளை அருங்கரை அம்மன் என்று அழைத்தனர். காலப்போக்கில் இந்தப் பெயரே அம்மன் பெயராக அமைந்துவிட்டது.

கருவறை, கோபுரம், விமானம் என்று எதுவுமே இந்தக் கோயிலில் இல்லை. பெட்டி இருக்கும் இடத்தையே அம்பாளாக கருதி வழிபாடு செய்கின்றனர். நாட்ராயர், லாடமுனி, மதுரைவீரன், கருப்பசாமி, மகாமுனி என்ற காவல் தெய்வங்கள், ராகு கேதுவுடன் விநாயகர் உள்ளனர். விநாயகருக்கும் காவல் தெய்வங்களுக்கும் அபிஷேகம் கிடையாது. கோயில் முன்புறத்தில் உள்ள பலிபீடத்தை ஆமை தாங்குவது போன்று அமைந்திருக்கிறது.

குடும்பம் சிறக்க, விவசாயம் செழிக்க இந்தக் கோயிலில் அம்பாளிடம் வேண்டிக் கொள்கின்றனர். காவல் தெய்வங்களுக்கு கிடா வெட்டியும், குதிரை பொம்மைகள் செய்து வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அம்பாள், காவல் தெய்வங்களுக்கு கிடா வெட்டியும், அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன்கள் செலுத்தலாம்.

சிறுமியை தேடிய ஆண்கள் இந்தப் பகுதிக்கு வந்தது செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேளை என்பதால், இங்கு செவ்வாய்க்கிழமை மட்டும் கோயில் திறக்கப்பட்டு நள்ளிரவில் பூஜை நடக்கிறது. மற்ற நாட்களில் கோயில் இரவும், பகலும் அடைக்கப்பட்டே இருக்கும். ஆண்கள் மட்டுமே இந்தக் கோயிலுக்குள் சென்று வழிபடுகின்றனர்.

பெண்களுக்கு மட்டும் இந்தக் கோயிலில் அனுமதியில்லை. அவர்கள் வாசலில் நின்று கோயிலில் வழிபாடு செய்யலாம். பெண் குழந்தைகள் கூட கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. வெளியில் நின்று வணங்கும் பெண்கள், அமராவதி ஆற்றில் குளித்துவிட்டு தலை முடியாமல் ஈரத்துணியுடன் வழிபட வேண்டும்.

அம்பாளுக்கு பூஜை முடிந்த பின் படைக்கப்பட்ட பூஜைப் பொருட்கள், நேர்த்திக்கடனாக செலுத்தும் வாழை, தானியங்கள் ஆகியவற்றை கோயில் முன் மண்டபத்தில் இருந்து சூரை விடுகின்றனர். இதனை பெண்கள் தங்களது சேலைத்தலைப்பில் பிடித்துக் கொள்கின்றனர். அம்பாள் பிரசாத பொருட்களில் வடிவில் பெண்களுக்கு அருளுவதாக நம்பிக்கை.

ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் வசித்த மீனவர்கள் அமராவதி ஆற்றில் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வந்தனர். ஒரு சமயம் மீனவர் ஆற்றில் வலைவீசிய போது பெட்டி ஒன்று சிக்கியது. அதனை திறந்து பார்த்தபோது அதற்குள் ஒரு அம்மன் சிலை இருந்தைக் கண்டான். அம்பாள் தனக்கு அருள் புரிவதற்காகவே ஆற்றில் வந்ததாக கருதிய அவன் ஆற்றங்கரையிலுள்ள மரத்தின் அடியில் பெட்டியை வைத்தான்.

மீனவர்கள் அம்பாளுக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் அவர்கள் அந்த இடத்தை விட்டு சென்றுவிடவே மணல் மூடி பெட்டி மண்ணுக்குள் புதைந்துவிட்டது. பெட்டி இருந்த இடத்தில் சிறிய மேடு மட்டும் இருந்தது. பல வருடங்களுக்குப் பிறகு இந்தப் பகுதியில் சிலர் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த போது ஒரு பசு  மட்டும் மரத்தின் அடியிலிருந்த மணல் மேட்டின் மீது பால் சொரிந்ததைக் கண்டாள். வியப்புற்று அருகில் சென்று பார்த்த போது ஒரு மேடு இருந்தது. அதன் மீது அவள் அமர்ந்தாள். அதன்பின் எழவில்லை. மாலையில் மாடு மட்டுமே வீடு திரும்பின.

சிறுமியைக் காணாததால் ஊரிலிருந்து ஆண்கள் அவளைத் தேடி அங்கு வந்த போது சிறுமி மணல் திட்டில் அமர்ந்திருந்ததைக் கண்டனர். அவர்கள் சிறுமியை வீட்டிற்கு வரும்படி அழைத்தனர். அங்கிருந்து வர மறுத்த சிறுமி அவர்களிடம் நான் இங்கே தான் இருக்க விரும்புகிறேன். என்னைக் கண்ட இந்த நாளில் இதே நேரத்தில் மட்டும் எனக்கு பூஜை செய்து வழிபடுங்கள் என்று சொல்லிவிட்டு ஜோதியாக மாறி மறைந்துவிட்டாள். பின்பு அவர்கள் சிறுமியை அம்பாளாக எண்ணி உருவம் ஏதுமில்லாமல் வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில் இங்கு கோயில் கட்டப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × four =

Most Popular