மதுரை அழகர் கோயிலில் பிரசாதமாக தோசை

330

பிரசாதங்களில் பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு போல அழகர் கோவிலின் தோசை ஒரு சுவைமிகு பிரசாதம். அழகர்மலையில் மட்டுமல்ல தல்லாகுளம் பெருமாள் கோவிலிலும் கிடைக்கும். அதென்ன அழகர்கோவில் தோசையின் சிறப்பு என்று அறியாது கேட்பவர்களுக்குதான் இந்த பதிவு.

இதனை தோசை என்பது இதன் வடிவத்தால் சொல்லப்பட்டாலும் வடைக்கும் அடைக்கும் மேற்பட்ட தோசை எனலாம்.. இந்த தோசை சாதாரண தோசை போலில்லாமல் கெட்டியான தோசையாக இருக்கும். புரியும் படி சொன்னால் 4 அடை தோசைகளை ஒன்றன் மீது ஒன்று அடுக்கினால் என்ன கனம் இருக்குமோ, அந்தளவு கனத்தில் இருக்கும்.

கம கம நெய் மணத்தில் மிளகும் சுக்கும் கலந்த அருமையான சுவையிலிருக்கும். அதிலும் அழகர்கோவிலில் செய்யும் தோசைக்கு தனி ருசி உண்டு. காரணம் அந்த தோசைக்கு அவர்கள் நுபுர கங்கை தீர்த்த நீரை மாவில் கலப்பதால் அபாரமாயிருக்கும் என்பார்கள்.!
அழகர்கோவிலில் மாலையில் கோவிலிலேயே சுடப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும், மெகா அழகர் கோவில் தோசையை (ஒன்றரை அடி அளவு வட்டத்தில்) ருசித்தால் அதன் நெய் மணத்தில் நீங்கள் மெய் மறந்து போவீர்கள்.

கோவில் மடப்பள்ளியில் இந்த தோசை வார்க்கும் நேரத்தில் எழும் கமகம வாசனையை அனுபவிக்க வேண்டுமே.. அடடா அழகரே சொக்கிப் போய் அமர்ந்திருப்பார்.. இந்த தோசை சூடாக சாப்பிடும் போது ஒரு சுவையிலும்.. ஆறிப் போன பின்பு வேறொரு சுவையிலும் இருக்கும்.. ஆனால் இரண்டுமே அற்புதச்சுவைதான்.

அழகர்கோவில் தோசைக்கு 100 மதிப்பெண் தந்தால் தல்லாகுளம் பெருமாள் கோவில் தோசைக்கு 92 மதிப்பெண்கள் தரலாம். காரணம் இங்கு கங்கை நீரை சேர்ப்பதில்லை.
மதுரை காமராசர் சாலையில் சந்தைப் பேட்டை பஸ் ஸ்டாப் அருகே அழகர் கோவில் தோசைக்கடைன்னு பிரத்யேகமாக ஒரு கடையே உண்டு. ஒரு வயதான தம்பதியர் நடத்தி வருகிறார்கள்.. இவர்கள் தோசையில் வறுத்த சீரகம் சேர்த்து இருப்பார்கள்.. சுவையும் பிரமாதமாக இருக்கும்.. இப்போ இந்தக்கடை இருக்கான்னு தெரியவில்லை.

மதுரைக்காரர்களில் பலருக்கே அழகர் கோவில் தோசை பற்றி தெரியாது.
அத்தி வரதரை ஹிட் அடித்தது போல மதுரைக்கு வரும் அழகரின் பக்தர்கள் இந்த தோசை பிரசாதத்தின் மீது கொஞ்சம் ஆசை வைத்தால் திருப்பதி லட்டுக்கு இணையான டிமாண்டில் சூப்பர் ஹிட்டடிக்கும்.. அந்த தோசையின் அருமை பெருமைகள் பற்றி பேசி, எழுதி நாம் அனைவருமே முயற்சிக்கலாம்…