பக்தனின் பாக்கியம்…. பகவானின் தரிசனம்….

311

மட்டபல்லி பகுதியில் காட்டிலே வாழும் மக்கள் அதிகம். அவர்களைச் சேர்ந்த ஒரு முதியவன், நிறைய அரிசி, பருப்பு, காய், பழங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு மட்டபல்லிக்கு வந்தான்.அவ்வாறு அவன் நடந்து வந்த ஒற்றையடிப் பாதை மட்டபல்லியில் இன்றும் இருக்கிறது. அவன் வந்து சேரும் நேரத்தில் கோயிலைப் பூட்டிவிட்டு அர்ச்சகர்களெல்லாம் கிளம்பிப் போய் விட்டார்கள்.

வெளியே ஒரு மண்டபம். அதில் வந்து உட்கார்ந்தான் அவன். “இனி விடியும் நேரத்தில்தான் பகவானை சேவிக்க முடியும்… அதிலும் நமக்கு முதல் சேவை கிடைக்காது. விச்வரூபாதிகள் எல்லாம் ஆகி, திருமஞ்சனம் ஆன பின்புதான் பகவானை சேவிக்க முடியும்’.

-இப்படி நினைத்து ஏங்கி உருகினான் அவன். “சுவாமி உம்மோட தரிசனத்துக்கு வந்திருக்கேனே, எனக்கு உம் தரிசனம் கிடைக்குமா? நீர் அருள் புரியாவிட்டால் வேறு எங்கேயிருந்து அது எனக்குக் கிடைக்கும்? இப்படி நேரங்கெட்ட நேரத்தில் வந்திருக்கிறேனே. உம் தரிசனம் எனக்கு எப்போது கிடைக்குமோ தெரியவில்லையே’ என்று புலம்பியபடி சோர்ந்து போய் உட்கார்ந்துவிட்டான்.

அதேநேரம் திடீரென்று ஓர் அர்ச்சகர் வந்தார். தோளில் சாவியை சாற்றிக் கொண்டிருந்தார். அவனைப் பார்த்து “வாப்பா உள்ளே போகலாம். உனக்கு சேவை பண்ணி வைக்கிறேன்’ என்றார். அவனும் எல்லாப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு உள்ளே போனான்.
கதவைத் திறந்த அர்ச்சகர், அரிசி, பருப்பு எல்லாவற்றையும் எம்பெருமான், அந்த மட்டபல்லி ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மனின் திருவடியில் சேர்ப்பித்தார். ஆனந்தமாக நிதானமாக அர்ச்சனை பண்ணினார். விசேஷமாக கற்பூர ஆரத்தியெல்லாம் பண்ணி அவனுக்கு அனுக்ரஹம் பண்ணினார். எல்லாம் முடிந்ததும் அவனைப் பார்த்து “திருப்தியா?’ என்றும் கேட்டார். “ரொம்ப திருப்தி’ என்றான் அவன்.

அவனை அழைத்துப் போய் மறுபடியும் மண்டபத்திலே இருக்க வைத்துவிட்டு, “நீ இப்போது எங்கேயும் போகாதே. இந்த இருட்டிலே கிளம்பினால் ஊர் போய்ச் சேர்வது கஷ்டம். இங்கேயே படுத்துக்கொள்.
காலையில் எழுந்து போகலாம்’ என்று சொல்லிவிட்டு அர்ச்சகர் புறப்பட்டுப் போய்விட்டார்.
அவனுக்கு ரொம்ப சந்தோஷம். இவ்வளவு கருணையோடு வந்து இந்த அகால நேரத்திலே நமக்கு சேவை பண்ணி வைத்தாரே என்று வியந்தான். அந்த ஆனந்த அனுபவத்திலேயே அப்படியே படுத்துத் தூங்கியும் போனான்.

மறுநாள் காலை ஆறு மணி, அர்ச்சகர் வந்தார். “இங்கே எதற்கு படுத்திருக்கிறாய் நீ?’ என்று அதட்டினார். அந்தக் கிழவன் நடுங்கிப்போனான்… “போ, போய் ஸ்நானம் பண்ணிவிட்டு அப்புறம் வா’ – விரட்டினார் அர்ச்சகர்.
பின்னர் உள்ளே போனவர் சந்நிதியைப் பார்த்ததும் விக்கித்துப் போனார். அழகாக ஜொலித்துக் கொண்டிருந்த பெருமாளின் முன்பு அரிசியாகக் கொட்டிக் கிடக்கிறது, ஒரு பக்கம் பழமாக அடுக்கியிருக்கிறது. இன்னொரு பக்கம் பருப்புக் குவியல்.இதெல்லாம் எப்படி? யார்? அர்ச்சகர் மனத்தில் கேள்வி எழுந்தபோதே கண் முன் ஒரு தோற்றமும் எழுந்தது. அது வெளியே மண்டபத்திலே பார்த்து, தாம் மிரட்டிய முதியவரின் தோற்றம் என்பதை உணர்ந்தார். பெருமான் முன்னிலையிலேயே தெரிந்தான் கிழவன். அந்தக் காட்சியைக் கண்டதும் நடுங்கிப் போனார் அர்ச்சகர்.

கோவிலை விட்டு வெளியே ஓடினார். கிழவன் கிருஷ்ணா நதியிலே இறங்கி ஸ்நானம் பண்ணிக் கொண்டிருந்தான். ஓடிப்போய் அவன் காலில் விழுந்தார். “அப்பா நான் நித்யம் பூஜை பண்றேன். அந்த மட்டபல்லி லக்ஷ்மி நரசிம்மனைத் தொட்டு நித்ய பூஜை பண்ணும் எனக்கு ஒரு நாளும் தரிசனம் கொடுக்கவில்லை.. ஆனால், உனக்காக அவன் வந்து, தனக்கு வேண்டியவற்றை எல்லாம் தானே கேட்டு வாங்கிக் கொண்டிருக்கிறான். தானே அர்ச்சனை பண்ணி தன்னுடைய திருவடியிலே உன்னைச் சேர்த்துக் கொண்டானே’ என்று உருகினார்.

அந்த பகவானுடைய காருண்யத்தை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். சாமான்யன் என்பதால் பகவான் யாரையும் ஒதுக்குவதில்லை. உயர்ந்தவன் என்பதாலே, பக்தியில்லாத ஒருவனை அவன் ஏற்றுக் கொள்வானா? எல்லோரிடத்திலும் விசேஷமான அன்பு கொண்டவன் எம்பெருமான். பிரத்யட்சமாக அதை மட்டபல்லி தலத்தில் பெருமான் நமக்குக் காட்டியிருக்கிறான்.

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் !