Saturday, October 14, 2023
HomeAanmeega Thagavalgalபலமில்லாதவருக்கு பலம் ஸ்ரீராமசந்த்ரமூர்த்தி தான் !

பலமில்லாதவருக்கு பலம் ஸ்ரீராமசந்த்ரமூர்த்தி தான் !

“நிர்பல் கே பல் ராம்”. ஆபத்து வந்து சாய்கிற ஸமயத்தில் யார் வந்து தாங்கிக்கொண்டு பலம் தர முடியும்? ராமன்தான்! “ஆபதாம் அபஹர்த்தாரம்”1 என்கிறோம். “அக்ரத ப்ருஷ்டதச்சைவ பார்ச்வதச்ச மஹாபலௌ”2 — அதாவது, நமக்கு முன்னேயும் பின்னேயும் இரண்டு பக்கங்களிலும் நம்மைச் சூழ்ந்து கொண்டு ஸதாவும் நம்மை ரக்ஷிக்கிற மஹாபலவான் யார்? அந்த ராமன்தான்.

நமக்குத் துளி ஆபத்து வருகிறதென்றாலும், அம்பை விடுவதற்கு ஸித்தமாகக் கோதண்டத்தின் நாண்கயிற்றைக் காதுவரை இழுத்தபடி நம்மைச் சூழ்ந்திருக்கிறான். அவனை விட்டு விலகாத லக்ஷ்மணனும் அவனோடேயே இருந்து கொண்டிருப்பான் — “ஆகர்ண பூர்ண தந்வாநௌ ரக்ஷேதாம் ராம லக்ஷ்மணௌ”3. ஆனால் இப்படிப்பட்ட புருஷ ச்ரேஷ்டர், வீரராகவன், விஜயராகவன் என்றே பேர் பெற்ற மஹா வீரர் ஆஞ்ஜநேயரைத் தமக்குப் பக்கபலமாகக் கொண்டதால் தான் அவதார கார்யத்தைப் பண்ண முடிந்ததாகக் காட்டியிருக்கிறார்!

மநுஷ வேஷம் ப்ரமாதமாய்ப் போட்டவர் அவர். ஸீதையை ராவணன் கொண்டு போய் எங்கே வைத்திருக்கிறான் என்று தெரியாத மாதிரியே நடித்தார். சொல்லி முடியாத துக்கப்பட்டார். அப்போது அவள் இருக்கிற இடத்தைக் கண்டுபிடித்துச் சொல்லி அவருக்கு உத்ஸாஹமும், தெம்பும், பலமும் தந்தது யார் என்றால் ஆஞ்ஜநேய ஸ்வாமிதான்.

ஸீதையைப் பிரிந்து இவர் பட்ட துக்கத்தைவிட இவரைப் பிரிந்து ஸீதை பட்ட துக்கம் கோடி மடங்கு. ப்ரிய பத்னி பக்கத்தில் இல்லையே, தன்னைப் பிரிந்து அவள் கஷ்டப்படுவாளே என்ற கஷ்டம் மட்டுந்தான் ராமருக்கு. ஆனால் அவளுக்கோ இதோடு ராக்ஷஸ ராஜ்யத்தில் மஹா காமுகனால் சிறை வைக்கப்பட்டிருப்பதான மஹா கஷ்டமும் சேர்ந்திருந்தது. ‘அபலா’ என்றே ஸ்திரீக்குப் பெயர். ஸாக்ஷாத் ஜகன்மாதாவான மஹாலக்ஷ்மி ஸீதையாக வந்து அபலையிலும் அபலையாக அசோகவனத்தில் படாத கஷ்டப்பட்டு, அந்தக் கஷ்டத்துக்கு முடிவு ப்ராணனை விடுவதுதான் என்று சுருக்குப் போட்டுக்கொள்ள இருந்தபோது அவளுக்கு உத்ஸாஹத்தை, தெம்பை, பலத்தைத் தந்தது — ஆஞ்ஜநேயர்தான்.

அவர் செய்த அரும் செயல்கள் ஒன்றில்லை, இரண்டில்லை. ஆனால் இதற்கெல்லாம் சிகரமாக எதைச் சொல்லலாமென்றால் இந்த லோகம் முழுவதற்கும் ஸ்ரீயைக் கொடுத்து, ஸெளபாக்யத்தைக் கொடுத்து அநுக்ரஹிக்கும் தாயார் மனம் குலைந்து மட்கிக் கிடந்தபோது ஆஞ்ஜநேய ஸ்வாமி காய்ந்த பயிருக்கு மழையாகப் போய் அவளுக்கு உயிரும் உத்ஸாஹமும் தந்தாரே அதுதான். “ஜானகீ சோக நாசநம்” என்று இதைத்தான் சிறப்பித்துச் சொல்கிறோம்.
அஞ்ஜாநாநந்தனம் வீரம் ஜானகீ சோக நாசநம்

அஞ்ஜனை என்று யாரோ ஒரு வாநர ஸ்த்ரீக்குப் புத்ரராய் அவதாரம் பண்ணி அவளுக்கு ஆனந்தம் கொடுத்தார். இது பெரிதில்லை. எந்தப் பிள்ளை, அவன் என்ன துஷ்டத்தனம் செய்பவனாயிருந்தாலும், அம்மாவுக்கு மாத்திரம் ஆனந்தம் தருகிறவனாகத்
தான் தோன்றுவான். அதனால்தான் பிள்ளையை ‘நந்தனன்’ என்பது. தசரத நந்தனன், தேவகி நந்தனன் மாதிரி அஞ்ஜநா நந்தனன். இது பெரிசில்லை. அந்த அம்மாவுக்கு மாத்திரமில்லாமல் லோகஜனனிக்கு, லோகமுள்ளளவும் வரப்போகிற அத்தனை அம்மாகளுக்கும் ஐடியலாக இருக்கும் ஸீதம்மாவுக்கு மகத்தான சோகம் ஏற்பட்டபோது அதைப் போக்கினாரே, அதற்குத்தான் நாம் அவருக்கு நமஸ்காரம் பண்ணிக் கொண்டே இருக்கணும்.

ஸீதைக்குள் சோகாக்னி ஜ்வாலை விட்டுக் கொண்டிருந்தது. அவளுடைய ஜீவனை வற்றப் பண்ணிக் கொண்டிருந்தது. ராவணன் ஹநுமார் வாலில் நெருப்பு வைத்ததாகச் சொல்கிறார்களே, உண்மையில் அந்த நெருப்பாலா அவர் லங்கா தஹனம் செய்தார்? இல்லவே இல்லை. அந்த நெருப்புக்குள்ளேயே இன்னொரு நெருப்பை அவர் சேர்த்துக்கொண்டு இதனால்தான் ஊரை எரித்தார். ஸீதையின் சோகாக்னிதான் அது.

ஓம் சுந்தர காண்ட நாயகனே போற்றி !
ஓம் சுடர் ஒளித் திருவே போற்றி போற்றி !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − six =

Most Popular