குட்டி கைலாயம் என்று போற்றப்படும் பூ எதுவென்று தெரியுமா?

87

குட்டி கைலாயம் என்று போற்றப்படும் பூ எதுவென்று தெரியுமா?

தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் கால சக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும். நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தல் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும். இந்த நாகலிங்கப்பூ, கடவுளுக்கானதல்ல இதுவே கடவுள். பூவுக்குள்ளே இறங்கி வந்து குடியிருக்கிறான் இறைவன். அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலராக நாகலிங்கப் பூவை கூறுவர்.

குட்டி கைலாயம்:

பூவில் நாகமுமிருக்கிறது. உள்ளே லிங்கமும் இருக்கிறது. சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள். தேவ கணங்களும் இருக்கின்றன. உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உற்று கவனித்தால் ஒரு குட்டி கைலாயமே கைக்குள் இருப்பதுபோல் இருக்கும். விசேஷத்திலும் விசேஷமாக மரத்தில் பூக்கும் பூவாக வேர்ப் பகுதிக்கு சற்று மேலே கொத்துக் கொத்தாக இலைகளைக் கொண்ட கிளைகளில் பூக்காமல் தனக்கென்று தான் பூப்பதற்கு என்று பிரத்யேகமாக ஒரு கிளையை உருவாக்கிக் கொண்டு பூக்கும் மலராக நாகலிங்கப்பூ உள்ளது.

ஒரு நாகலிங்க மரத்தில் ஒரே நாளில் ஆயிரம் மலர்கள் வரை பூக்குமாம். அமேசான் காட்டுப் பகுதிகளில் இந்த மரம் துர்தேவதைகளில் இருந்து காக்கும் மரமாகவும் ஆசிய கண்டத்தில் செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. மேலும் இந்த மரம் மாசுக் கட்டுப்பாட்டின் தன்மையைக் காட்டும் குறியீட்டுக் கருவியாகவும் கருதப்படுகிறது.

பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை. நாகலிங்கப் பூவை வைத்து பூஜிப்பதின் முழுபலன்களையும் அடைய, பூஜிக்கப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒரு வருக்கேனும் அன்னதானம் அளிக்க வேண்டும். நாகலிங்க மரம் இயற்கையான யோக அக்னியைப் பூண்டது, நாகலிங்கப் பூவை மரத்தில் இருந்து பறிக்கும்போது கைக்கு இதமான. உஷ்ணமாய் இருப்பதை உணர்ந்திடலாம். ஒவ்வொரு நாகலிங்கப் பூவும் உள்சூட்டுடன் இருக்கும் இதுவே யோகபுஷ்ப தவச்சூடு ஆகும் .இதன் ஸ்பரிசம் மனித மூளைக்கு மிகவும் நல்லது.

1008 முறை பஞ்சாட்சரம்:

இந்த பூவை தொடுவதற்கு முன்னரே 1008 முறை பஞ்சாட்சரம் ஜெபித்து தொட வேண்டும். அதேபோல் இந்த பூவை வைத்து பூஜை செய்து முடித்த பின்னர் 21 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். அதை சூட்சும வடிவில் 21 மாத்ருகா ரிஷிகள் பெற்று செல்வதாக சிவ புராணம் கூறுகிறது. மேலும் வாடிய பூக்களை ஓடும் ஆற்றில் விட்டு விட வேண்டும்.

விஷ காய்ச்சலுக்கு மருந்தாகும்:

காற்றில் அதிகமான சல்பர் இருந்தால் இதன் இலைகளை உதிர்த்து வெளிப்படுத்துமாம். இந்த மரத்தின் இலைகளை அரைத்து தோல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள். இதன் இலைகளை மென்று திண்பதால் பல்வலிக்கு மருந்தாகவும், பட்டைகளையும் காய்களையும் பக்குவப்படுத்தி விஷ காய்ச்சலுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவம்.

ஒவ்வொரு நாகலிங்க பூவும் சூரிய, சந்திர கிரணங்களின் யோக சக்தியை கொண்டு மட்டுமே மலர்கின்றது என்ற அறிய விடயத்தை நாகசாலிச் சித்தரும், நாகமாதா சித்தரும் பூவுலகிற்கு மீண்டும் உணர்த்தினார்கள். இவ்வாறு கண்ணுக்குத் தெரிந்த நாகலிங்க பூவின் மகிமையை இனிமேலாவது உணர்ந்து நாகலிங்க பூவைக்கொண்டு இறைவனை வணங்குவோம்.