பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தின் சுவாரசியமான தகவல்கள்!
‘பூலோக வைகுண்டம்’ என்ற பெருமை பெற்றது திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். வைணவர்களின் 108 வைணவ திருத்தலங்களில் தலைமைச் செயலகம் போல் செயல்படுகின்றது. பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்கள், ‘மங்களாசாசனம்’ பெற்று பாடிய திருத்தலமாகும். 108 வைணவத் திருத்தலங்களில் இரண்டு திருத்தலங்கள், பூமியில் இல்லை. ஒன்று பரமபதம். மற்றொன்று திருப்பாற்கடல்.
இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோவில்தான் ஏழு பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி 21 கோபுரங்கள் உள்ளன.
கோவில், ‘நாழிக்கேட்டான் வாயில்’ வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் உள்ளனர்.
கோவிலின் உட்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி, மகாவிஷ்ணுவுக்கு உரியவராக முறையே சங்கு, தாமரை வடிவங்களில், ‘சங்க நிதி’, ‘பதும நிதி’ உருவங்களுடன் இருக்கின்றனர். விஜயரங்க சொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை முறையில், வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளன.
மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு, மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்யப்படுவதில்லை.
அதற்குப் பதில் கோவில் பணியாளரைக் கொண்டு இயற்கை மூலிகைகளினால் தயாரிக்க ப்பட்டதைலக்காப்புடன் மெருகூட்டப்படுகிறது. கோவில் கருவறையின்மேல் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தின் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன.
இந்தத் திருத்தலத்துக்கு வந்து ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்க நாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர். வருடத்துக்கு ஒருமுறை, பங்குனி உத்திர நாளில் பெருமாளும், தாயாரும். தாயார் சன்னதியில் இருக்கும் சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். கோவிலில் உள்ள நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்கும்.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரால் கட்டமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள 1,000 தூண்களும் முழுமையாக கட்டி முடிக்கப்ப டாமல் போய்விட்டது. 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. மீதமிருக்கும் 49 தூண்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் காலத்தில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களுடன் விழா நடைபெறுகிறது.
கோவில் தீர்த்தங்கள்: சந்திர புஷ்கரணி, சூர்ய புஷ்கரணி, வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவத்த தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆம்பர தீர்த்தம், தென்திருக்காவிரி, வட திருக்காவிரி கோவிலில் நிர்வாக முறையை ஏற்படுத்திய ராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார். ராமானுஜரது திருமேனி 5-வது ‘திருச்சுற்று’ எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் புதைக்கப்பட்டது.
பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது. அதுவே தற்போது ராமானுஜர் சந்நிதி மூலஸ்தானமாக உள்ளது. தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதைக் கண்காணித்து வருகிறார் ராமானுஜர் என்பது ஐதீகம்.
ஐந்து குழி மூன்று வாசல்:
ஸ்ரீரங்கம் கோவிலின் தாயார் சந்நிதிக்கு வெளியே இருக்கும், ஐந்து குழி மூன்று வாசல் அற்புதமானது. இங்குள்ள ஐந்து குழிகள் வழியே, ஐந்து விரல்களை வைத்து தெற்கு பக்கம் பார்த்தால் பரமபத வாசல் தெரியும். இப்படித்தான் தாயார் பெருமாளை சேவிக்கிறார் என்பது ஐதீகம். அர்த்த பஞ்சக ஞானத்தைக் குறிப்பதே ஐந்து குழி என்றும் மூன்று வாசல் என்பது பிரம்மத்தின் வழி என்பதும் பெரியோர்கள் வாக்கு.
கல்லிலே கலை வண்ணம் திருவரங்கம் திருச்சியில் காவிரியும் கொள்ளி டமும் உருவாக்கிய மணல் தீவு முக்கொம்பு தொடங்கி கல்லணை வரை உள்ளது. அரங்கம் என்றால் ஆற்றிடைக்குறை என்றும் பொருள்படும். சிறப்பு கருதி திருவரங்கம் ஆனது. அங்கு பெருமாள் வந்து தங்கியது ஒரு சுவையான புராணம்.
