மாதத்தில் சில நாட்கள் மன உளைச்சலோடும் எரிச்சலோடும் இருப்பார்கள். எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள். அன்றைய தினம் காலண்டரைப்பார்த்தால் அவர்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் என்று இருக்கும். ஒருவர் பிறந்த ராசிக்கு ஒவ்வொரு மாதமும், சந்திரன் எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தை கடந்து செல்லும். இதையே சந்திராஷ்டமம் என்று ஜோதிடத்தில் கூறுகின்றனர். மனோகாரகன் சந்திரன் எட்டாம் இடத்தில் மறையும் போது மன உளைச்சல் ஏற்படுவது இயற்கைத்தானே. அந்த நாட்களில் அமைதியாக இருந்து அதற்கேற்ப பரிகாரம் செய்தால் பாதிப்பு இல்லை
சந்திரன்+அஷ்டமம் = சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம’ காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டம வேளையாகும்.
ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும். ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டை குறிப்பதாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம்.
*மனோகாரகன் சந்திரன்*
சந்திரனை மனநிலைக்கு உரியவன் (மனோகாரகன்) என்றும் போக்குவரத்துகளுக்கு காரகன் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மறைவுஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் காலத்தில் மனதில் தெளிவின்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக கோபப்படுதல், பொறுமை இன்மையால் எரிச்சல், அடுத்தவரிடத்தில் தேவையற்ற கோபம், இல்லறத்தில் சண்டை போன்றவை ஏற்படும் எனவேதான் சந்திராஷ்டம நாட்களில் பெரும்பாலும் மவுன விரதம் இருப்பது நல்லது என்கின்றனர் ஜோதிடர்கள்.
*சந்திராஷ்டமத்தால் பாதிப்பு*
மனோகாரகனான சந்திரன் கால புருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் நீசம் அடைகிறது. எனவே விருச்சிக ராசியில் சந்திரன் வரும்போது எண்ண அதிர்வுகளில் சில மாற்றம் ஏற்படுகிறது. பொதுவாகவே கால புருஷனுக்கு எட்டாம் வீட்டை எந்த கிரகம் கடந்தாலும் அது போகிர போக்கில் சில கெடுதல்களை செய்துவிட்டுதான் போகிறது.
*எட்டாம் இடத்தில் சந்திரன்*
அந்த விதத்தில் சந்திரன் மனோகாரகன் மற்றும் பயண காரகன் என்பதால் மனதிலும் பிரயாணத்திலும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதன் அடிப்படையில்தான் சந்திரன் எட்டாம் இடத்தில் வரும்போது சந்திராஷ்டமம் என அனுஷ்டிக்க ஆரம்பிக்கப்பட்டது.
*குடும்பம் பாதிப்பு*
பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனசங்கடங்கள், மனச்சோர்வு, இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர்பார்வையாக தனம், வாக்கு, குடும்பம் எனும் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புக்களும் பாதிப்படைகின்றன.
*சுபகாரியம் ஆகாது*
சந்திராஷ்டம காலத்தில் வெளியில் பயணம் செய்யும் பொழுது அதிக கவனம் தேவை. வளர்பிறை காட்டிலும் தேய்பிறையில் சந்திர மறைவு தன்மை அதிக பலம் உள்ளது. இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்யமாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள்.
*பாதிப்பு தீர பரிகாரம்*
சந்திராஷ்டம நாளில் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்வது நல்லது. அம்மன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வரலாம். அதே போல வெண்மை நிற பொருட்கள் பாதிப்படைவது. அடுப்பில் வைத்த பால் பொங்குவது. உணவு வீணாவது என இயற்கையாக நடப்பது சந்திராஷ்டம தோஷத்தை போக்கிவிடும். சந்திராஷ்டம நாளில் ரசகுல்லா சாப்பிட தோஷம் நீங்கிவிடும். அதேபோல சந்திராஷ்டம நாளில் மஞ்சள் கயிறு கட்டிக்கொள்ளலாம் பாதிப்பு குறையும்
*மேஷம், விருச்சிகம்*
சந்திராஷ்டம நாட்களில் முக்கியமான செயல்களை செய்ய வேண்டும் என்று நினைத்தால் சில பரிகாரங்களை செய்து விட்டு முக்கிய காரியங்களை செய்யத் தொடங்கலாம். மேஷ ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து விட்டு சுப்ரமணியர் வழிபாடு செய்து அதன் பிறகு காரியங்களைச் செய்யத் தொடங்கலாம். விருச்சிக ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து அங்காரகனை வழிபட்டு காரியங்களை தொடங்கலாம்.
*ரிஷபம், துலாம்*
ரிஷப ராசிக்காரர்கள் மொச்சை தானம் செய்து மகா லட்சுமியை வழிபட்ட பிறகு செயல்படலாம். துலாம் ராசிக்காரர்கள் சர்க்கரை தானம் செய்து, அம்பிகையை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.
*மிதுனம், கன்னி*
மிதுன ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து விட்டு பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டதும் காரியங்களைத் தொடங்கலாம். கன்னி ராசிக்காரர்கள் தேன் தானம் செய்து விட்டு பின்னர் கண்ணனை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.
*கடகம், சிம்மம்*
கடக ராசிக்காரர்கள் பச்சரிசி தானம் செய்து, அம்பிகை வழிபாடு முடித்து காரியத்தை தொடங்கலாம். சிம்ம ராசிக்காரர்கள் அவல் தானம் கொடுத்து, சிவன் வழிபாடு செய்த பிறகு காரியத்தைக் தொடங்கலாம்.
^தனுசு, மீனம்*
தனுசு ராசிக்காரர்கள் பேரீச்சம் பழம் தானம் செய்து விட்டு பின்னர் குருபகவானை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம். மீனம் ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து, பைரவரை வழிபட்ட பிறகு காரியங்களைத் தொடங்கலாம்.
*மகரம், கும்பம்*
மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் எள் போன்ற கருப்பு நிற உணவுப்பொருட்களை தானம் செய்து, அனுமனை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம். பரிகாரம் மற்றும் வழிபாட்டிற்குப் பிறகு சந்திராஷ்டம நாட்களில் தவிர்க்க முடியாத காரியங்களைச் செய்தால் ஓரளவாவது தடைகள் நீங்கி காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
பரிகாரம் செய்ய முடியாதவர்கள் இந்த மந்திரத்தை சொல்லலாம்.
*இந்த முருக பெருமானின் சுலோகத்தை 9 முறை சொல்லலாம்*
*சுலோகம்*
*கந்தர் அலங்காரம்*
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
*கந்தர் அனுபூதி*
எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறை நாயகனே.
