மனக்குழப்பம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோயில் என்ற ஊரில் சங்கரநாராயணர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சங்கர நாராயணர் (சங்கரலிங்கம்) மூலவராக காட்சி தருகிறார். கோமதி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் புரிகிறாள். புன்னை மரம் தல விருட்சமாக திகழ்கிறது.
ஆடித்தபசு, பங்குனி – சித்திரையில் 41 நாட்கள் பிரம்மோற்சவம், ஐப்பசியில் திருக்கல்யாணம், தை மாதம் தெப்ப உற்சவம் ஆகிய நாட்களில் கோயிலில் திருவிழா நடக்கிறது. மூலஸ்தானத்தில் சிவன் மற்றும் பெருமாள் இருவரும் ஒன்றாக அருள் பாலிக்கின்றனர். ஆண்டுதோறும் மார்ச், செப்டம்பர் மாதங்களில் 21 ஆம் தேதியிலிருந்து 3 நாட்கள் சங்கரலிங்கம் மீது சூரிய ஒளி விழுகிறது.
சங்கர நாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. மாறாக, இச்சன்னதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமௌலீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்கு சங்கர நாராயணர் சிறப்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். தல விநாயகர் அனுக்ஞை விநாயகர் எனப்படுகிறார். இங்குள்ள கோபுரம் 9 நிலைகளைக் கொண்டுள்ளது.
இந்தக் கோயிலில் புற்றுமண் தான் பிரதான பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மண்ணை தண்ணீரில் கரைத்து சாப்பிடுகின்றனர். வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்பு தொல்லை இருந்தால் சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு அதன் வெள்ளி உருவங்களை வாங்கி காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும்.
ஆண்டுதோறும் சித்திர, மார்கழி மாதங்களில் கோயில் திருவிழாவின் போது சிவன் ரிஷப வாகனத்தில் அறுபத்து மூவருக்கு காட்சி தரும் வைபம் நடக்கிறது. தை கடைசி வெள்ளியன்று தெப்பத் திருவிழா நடக்கிறது. கோயில் நுழை வாயிலில் அதிகார நந்தி, தன் மனைவி சுயஜ்ஜாதேவியுடன் காட்சி தருகிறார். சிவனுக்கு எதிரேயுள்ள நந்தி ருத்ராட்ச பந்தலின் கீழ் இருக்கிறார்.
ஒற்றுமை குணம் உண்டாக, தானே பெரியவன் என்ற எண்ணம் நீங்க இந்தக் கோயிலில் வேண்டிக் கொள்ளலாம். சுவாமி, அம்பாள், சங்கரநாராயணருக்கு அபிஷேகம் செய்வித்து, வஸ்திரம் அணிவித்து, நைவேத்தியம் படைத்து நிவர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தபஸ் என்றால் தவம் அல்லது காட்சி என்று பொருள்படும். அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கர நாராயணராக காட்சி தர வேண்டி தவமிருந்து அவரது காட்சியை பெற்ற நாளே ஆடித்தபசு திருநாள் ஆகும். இந்த விழாவானது 12 நாட்கள் நடக்கும். அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள்.
மாலையில் சங்கர நாராயணர் இவளுக்கு காட்சி தருகிறார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்கு செல்வார். சிவன் கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி நாளில் தான் லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வார்கள். தொடங்கும் புதிய வருடத்தில் உணவிற்கு பஞ்சம் இருக்க கூடாது என்பதற்காக சித்திரையிலும், ஐப்பசி புண்ணிய கால துவக்கம் என்பதால் அந்த மாதத்தின் முதல் நாளிலும் இந்த அன்னாபிஷேகத்தை செய்கின்றனர்.
பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடப்பது போன்று இங்கும் கொண்டாடப்படுகிறது. இதற்காக கோயிலின் வடக்கு பிரகாரத்தில் சொர்க்க வாசல் இருக்கிறது. அன்று மகாவிஷ்ணு பல்லக்கில் அனந்த சயனத்தில் எழுந்தருளி, ரதவீதி சுற்றி வருவார். அன்று சொர்க்க வாசல் திறக்கப்படும்.
சிவன் சன்னதி பிரகாரத்தில் வன்மீகநாதர் சன்னதி இருக்கிறது. புற்று வடிவில் அமைந்த இந்த சன்னதியில் சிவன் சுயரூபத்துடன் காட்சி தருகிறார். தலைக்கு மேலே குடைபிடித்தபடி இருக்கும் நாகத்தின் மீது இவர் அமர்ந்திருப்பது அபூர்வ அமைப்பு. புற்றுக்குள் (வன்மீகம் என்றால் புற்று) இருப்பவர் என்பதால் இவருக்கு இப்பெயர் நாகதோஷம் உள்ளவர்கள் புற்று மீது மஞ்சள் தூவி வேண்டிக் கொள்கிறார்கள்.
இச்சன்னதி எதிரில் பஞ்ச நாக சிலைகள் இருக்கிறது. பக்தர்கள் இச்சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்கிறார்கள். சிவன் சன்னதியின் கோஷ்டத்தின் பின்புறத்தில் லிங்கோத்பவர் இருப்பார். சில கோயில்களில் திருமால் காட்சி தருவார். ஆனால், இந்தக் கோயிலில் யோக நரசிம்மர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
பல் வலி உள்ளவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இந்தக் கோயிலில் சர்ப்ப விநாயகர் கையில் நாகத்துடன் காட்சி தருகிறார். ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இவருக்கு ஞாயிறு ராகு காலத்தில், பாலபிஷேகம் செய்து பால் பாயாசம் படைத்து வேண்டிக் கொள்கிறார்கள்.
குழந்தைகள், விஷப் பூச்சிகளால் பாதிக்கப்படாமல் இருக்க இவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் வேண்டிக் கொள்கிறார்கள். பெரும்பாலான முருகன் கோயில்களில் கந்தசஷ்டியின் போது சூரசம்ஹாரத்திற்கு ஒரு முகம் கொண்ட சுப்பிரமணியராக மட்டுமே முருகன் செல்வார். ஆனால், இங்கு ஆறு முகங்களுடன் சண்முகர் செல்கிறார். சூரசம்ஹாரத்தின் போது முருகன் விஸ்வரூபம் எடுத்ததன் அடிப்படையில் முருகன் இவ்வாறு செல்வதாக சொல்லப்படுகிறது. மறுநாள் முருகன் – தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
சங்கன் என்ற நாக அரசன் சிவன் மீதும், பதுமன் என்ற அரசன் திருமால் மீதும் பக்தி கொண்டிருந்தனர். இருவருக்கும் சிவன் பெரியவரா? அல்லது திருமால் பெரியவரா? என்ற வாதம் நிகழ்ந்தது. இதையடுத்து, இதற்காக பார்வதி தேவியிடம் முறையிட்டனர். இருவரும் சம அளவில் சக்தி கொண்டவர்கள் என்பதை அவர்களுக்கு நிரூபிக்க இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள்.
இதையடுத்து இருவரும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சி தந்தனர். பின்னர், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவன் சங்கரலிங்கமாகவும் எழுந்தருளினார். நாகராஜக்கள் இருவரும் சங்கரலிங்கத்தை வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் இந்த லிங்கத்தை புற்று மூடிவிட்டது. நாகராக்களும் அதனுள்ளேயே இருந்தனர். பக்தர் ஒருவர் இந்த புற்றை இடித்த போது உள்ளே இருந்த நாகத்தின் வாலை வெட்டி விட்டார். இதில், ரத்தம் வெளிப்பட்டது.
இதனால், அதிர்ச்சியடைந்த அவர் புற்றுக்குள் பார்த்த போது லிங்கத்தைக் கண்டார். இதையடுத்து, இது குறித்து பாண்டிய மன்னனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. லிங்கம் இருந்த இடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.
சிவன், அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் சங்கர நாராயணர் சன்னதி உள்ளது. சிவனுக்குரிய வலப்பக்கத்தில் தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடியும் உள்ளன. காதில் தாடங்கம் கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை இருக்கிறது.
திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான். திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது. இவர் பக்கமுள்ள திருவாசியில் நாக வடிவில் பதுமண் குடை பிடிக்கிறான். இச்சன்னதியில் காலை பூஜையில் மட்டும் துளசி தீர்த்தம் தரப்படும். மற்ற நேரங்களில் விபூதி தருகின்றனர்.
பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், திருமாலுக்குரிய துளசி மாலை சாற்றப்படுகிறது. சிவன் அபிஷேகப்பிரியர், திருமால் அலங்காரப்பிரியர். எனவே திருமாலுக்கு உகந்த வகையில் மூலவர் சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. இச்சன்னதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமௌலீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
சிவராத்திரி, ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு அபிஷேக பூஜை நடக்கும். ஆடித்தபசு விழாவன்று மட்டும் அம்பாளுக்கு காட்சி தர இவர் வெளியே புறப்பாடாகிறார். சந்திரன் போல பொலிவான முகம் கொண்ட அம்பிகை, இங்கே தவம் புரிய வந்த போது தேவலோக மாதர்கள் பசுக்கள் வடிவில் அவளுடன் வந்தனர். எனவே இவள், கோமதி என்று பெயர் பெற்றாள்.
இவளுக்கு ஆவுடையாம்பிகை என்று பெயரும் உண்டு. ஆ என்றாலும் பசு தான். பசுக்களை உடையவள் என்று பொருள் உண்டு. திங்கள் கிழமைகளில் இவளுக்கு மலர் பாவாடை, வெள்ளிக்கிழமைகளில் தங்கப்பாவாடை அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். திருமண தடை நீங்கவும், புத்திர தோஷம் நீங்கவும் மாவிளக்கில் நெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.
அம்பாள் கோயிலில் பீடத்திற்கு அடியில் அல்லது அம்பிகையின் பாதம் முன்பு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால், இந்தக் கோயிலில் அம்பாள் சன்னதி முன்மண்டபத்தில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை ஆக்ஞா சக்கரம் என்கின்றனர்.
மனநோய், மனக்குழப்பம் உள்ளவர்கள் இச்சக்கரத்தின் மேல் அமர்ந்து அம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள். இதனால், நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை. முன்பு ஒரு காலத்தில் நாகராஜாக்கள் வழிபட்ட லிங்கத்தை காலப்போக்கில் புற்று மூடிவிட்டது. நாகராஜாக்கள் அதனுள்ளேயே இருந்தனர். மணிக்ரீவன் என்ற தேவன் பார்வதி தேவியின் சாபத்தால் மண்ணில் பிறந்து புன்னைவனக் காவலனாக இருந்தான். அவன் காப்பறையன் என்றும், காவற்பறையன் என்றும் பெயர் பெற்றான்.
கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ண நாதருக்குப் புன்னைவனத்திலே ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் அவனே காவலன். தோட்டத்தின் ஒரு பக்கம் புற்றொன்று வளர்ந்தது. அதை ஒரு நாள் அவன் வெட்ட அதிலிருந்த பாம்பின் வாலும் வெட்டுபட்டுவிட்டது. அப்போது அவன் புற்றின் பக்கத்தில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டான்.
திருநெல்வேலிக்கு மேற்கே பொருநையாற்றின் கரையிலுள்ள மணலூரில் அரசாண்டிருந்த உக்கிரபாண்டியர் அடிக்கடி மீனாட்சியம்மையையும், சொக்கநாதப் பெருமானையும் வழிபடுவது வழக்கம். காவற்பறையன் புற்றை வெட்டி சிவலிங்கத்தை கண்ட அன்று பாண்டியருடைய யானை கொம்பினால் தரையை குத்திக் கீழே விழுந்து புரண்டது. அப்போது காவற்பறையன் ஓடிவந்து அவரிடம் செய்தியை தெரிவித்தான்.
உக்கிரபாண்டியர் அங்கு சென்றதும் சங்கரனார் அசரீரியாக ஆணை தர, பாண்டியர் காட்டை நாடாக்கி சங்கரநாராயணர் கோவிலையும் ஊரையும் தோற்றுவித்தார். கோயிலில் கோபுரத்தை தாண்டி நிர்வாக அலுவலக இடப்புறத் தூணில் காவற்பறையனின் திருவுருவம் உள்ளது.
