ராவணனின் மகிமை பற்றி தெரியுமா?
ராவணன் போர் புரியாமல் இருந்ததால் அவர் மீது அனைவருக்கும் சந்தேஎகம் வந்துவிட்டதாக நினைத்தான். குறிப்பாக மனைவியான மண்டோதரியும் அலட்சியமாக நினைப்பதாக தோன்றியது. இதனால் தான் சீதையை விடுவிக்கச் சொல்லி அடிக்கடி அவள் வற்புறுத்துகிறாள்.
அந்தப்புரத்தில் ஆசை நாயகியரில் சீதையும் ஒருத்தியாக இருந்தால் இவளுக்கு என்ன? சீதைக்கு கூடுதல் முக்கியத்துவம் தருவேன் என்ற பயம் வந்து விட்டதோ? அல்லது ராமனைப் பெரிய வீரனாக கருதுகிறாளா? அவன் தாடகையை வதம் செய்ததையும், அசுரர்களான மாரீசன்-, சுபாகுவை விரட்டியதையும், பலம் மிக்க வாலியைக் கொன்றதையும், தங்கை சூர்ப்பணகையை அவமானப்படுத்தியதையும் பேசிப் பேசி ராமனின் ஆற்றலை மிகைப்படுத்துகிறாளே ஏன்?
என் வீரத்தை அடியோடு மறந்து விட்டாளோ? மானுடரைத் தவிர வேறு யாரும் என்னைக் கொல்லக்கூடாது என பிரம்மாவிடம் வரம் பெற்றிருக்கிறேனே! நவகிரகங்களை அடிமைப்படுத்தி என் சிம்மாசனத்திற்கு படிக்கட்டுகளாக்கி அவர்களின் முதுகில் கால் பதித்து ஏறுகிறேனே! சிவனின் இருப்பிடமான கயிலை மலையை அசைத்தவன் நான் தானே! என் வீரத்தில் என்ன குறை கண்டாள் இவள்?.
ராமனுக்கு சமமான பலசாலி என்ற எண்ணம் வந்தால் கூட, சீதையை நான் கடத்தியதை விமர்சனம் செய்ய மாட்டாள். ராமன் போர் தொடுத்தாலும் போரிட்டு வெல்வேன் என்னும் ஏற்பட்டால் என்னைக் குறை சொல்ல மாட்டாள். அதை எப்படி உருவாக்குவது? என சிந்தித்துக் கொண்டே உலவினான் ராவணன். அப்போது அங்கு வந்த மண்டோதரியின் முகம் இருண்டு கிடந்தது.
ஏதோ சம்பவம் நிகழ்ந்தது போல சோகத்தில் அவள் இருந்தாள். குற்ற உணர்வுடன் பார்த்தான் ராவணன். “தகவல் தெரியுமா உங்களுக்கு? இலங்கை மீது படையெடுக்க ராமன் திட்டமிட்டுருக்கிறான்” என்றாள் மண்டோதரி. “எப்படி முடியும்?” அலட்சியமாக சிரித்தான் ராவணன். “குறுக்கே கடல் இருக்கிறது. பறந்தா வர முடியும்? அனுமன் என்னும் குரங்கு எப்படியோ வந்து இலங்கையை தீக்கிரையாக்கிச் சென்றது. ஆனால் ராமன் சாதாரண மனிதன்.
அசுர பலம் கொண்ட எனக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது” “ராமனுடைய பலம், அவனுக்கு உதவும் வானரப் படைகள் பற்றியெல்லாம் நீங்கள் ஏதும் அறியவில்லை” என்றாள் மண்டோதரி. “அவன் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால் எனக்கு ஈடாக மாட்டான். அற்ப மனிதன். எந்த தந்திரத்தாலும் என்னை வெல்ல முடியாது.”
“ராமனால் இயற்கைக்கு முரண்பட்ட அதிசயங்களையும் நிகழ்த்த முடிகிறதே” “என்ன அதிசயம்?” எனக் கேட்டான் ராவணன். “கடலின் மீது பாலம் கட்டுகிறான் ராமன். வானரங்கள் அந்த பணியில் ஈடுபட்டுள்ளன” “முட்டாள்கள்…” எனச் சிரித்தான் ராவணன். “கடலில் எவ்வளவு பாறைகளைத் தான் போட முடியும்? கடலின் ஆழம் தெரியாத மூடர்கள்.
மூழ்கும் பாறைகளைக் கொண்டு பாலம் கட்டுவது வேடிக்கையான செயல் தானே!” “அதைத் தான் நானும் சொல்கிறேன்” மண்டோதரி அவனை தீர்க்கமாகப் பார்த்தபடி, “பாறைகள் கடலில் மிதக்கின்றன. ஒவ்வொரு பாறையிலும் ‘ராம்’ என்ற மந்திரம் எழுதி கடலில் வீசுகிறார்கள். அவை நீரில் மிதந்து பாலம் கட்ட உதவுகின்றன” திடுக்கிட்டான் ராவணன்.
”ஏதோ மாயம். ஏமாற்று வித்தை சூது இதில் இருக்கிறது” என்றான். ராவணனின் மனநிலையை உணர்ந்த மண்டோதரி, “மாய மானை அனுப்பியது தங்களின் திட்டம் தானே? நம் மகன் இந்திரஜித் கற்காத மாயங்களா என்ன?” என்றாள். ”கடலில் கற்களை மிதக்க வைக்கும் வித்தையை என்னாலும் செய்ய முடியும்” என வீரவசனம் பேசினான் ராவணன். “அதெப்படி முடியும்?” என்றாள் மண்டோதரி.
அக்கேள்வியில், கல் மிதந்தால் தன் மீதான மதிப்பு அதிகரிக்கும் என்ற பிரமிப்பு தொனித்தது. “முடியும், என்னால் முடியும்?” என உறுதியாகச் சொன்னான் ராவணன். சந்தேகத்தை பார்வையில் வெளிப்படுத்தியபடி அங்கிருந்து நகர்ந்தாள் மண்டோதரி.
ராவணன் ஒரு பரிசோதனையில் ஈடுபட்டான். நீர் நிறைந்த பாத்திரத்தில் கற்களை போட்டான். அவை மூழ்கின. வேதனையுடன் ஏதோ தீர்மானத்தவனாக, கல் ஒன்றில் ‘ராவணன்’ என எழுதினான். அதை அரண்மனை தடாகத்தில் போட்டான்…மிதந்தது!
அதை கவனித்த மண்டோதரி திக்குமுக்காடிப் போனாள். தன் கணவராலும் அதிசயம் நிகழ்கிறதே என ஆரத் தழுவினாள். பெருமிதம் கொண்ட ராவணன், மனைவியை கடற்கரைக்கு அழைத்துச் சென்றான். ஒரு பெரிய பாறையை எடுத்து ‘ராவணன்’ என எழுதி கடலுக்குள் வீசினான். அந்த பாறை மிதந்தது. பிரமிப்பின் எல்லைக்குச் சென்றாள் மண்டோதரி. ஆனால் ராவணனின் மனம் உறுத்தியது. தனக்கு மரணச்சங்கு ஒலிக்கத் துவங்கி விட்டதை உணர்ந்தான்.
ராவணனுக்கும் கல் மிதப்பது எப்படி சாத்தியமாயிற்று? யாரிடமும் அந்த ரகசியத்தை சொல்லவில்லை. அவன் மனதில் தியானித்தது இதைத்தான் – ‘ராமன் மீது ஆணை; இந்தக் கல் மிதக்க வேண்டும்.’
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா!