விநாயகர் பற்றிய முக்கியமான தகவல்கள் தெரியுமா?
பெண்வடிவமாக சித்தரிக்கப்பட்ட விநாயகர்கள் விநாயகிகள் எனப்படுவார்கள். இந்தியாவில் 30 இடங்களில் இந்த விநாயகி சிற்பங்கள் உள்ளன. அவைகளில் சில மதுரை மீனாட்சியம்மன் கோயில் முன்மண்டபம், வடிவீஸ்வரம் வைப்புத்தலம் நாகர்கோயில், சுசீந்தரம் தாணுமாலைய சுவாமி கோயில் ஆகிய இடங்களில் உள்ளது.
விநாயகர் பூஜையில் பயன்படும் 21 பத்திரங்கள்: மாசிப்பச்சை, கத்திரி, வில்வம், அருகம்புல், ஊமத்தை, எலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, அரளி, விஷ்ணுகிரந்தம், மாதுளம், நெல்லி, மருதாணி, நொச்சி, ஜாதி வன்னி, கரிசிலாங்கன்னி, நீர்மருது, எருக்க இலை, கண்டலீ பத்ரம்.
வன்னி மரத்து விநாயகரை வழிபட திருமணத்தடை நீங்கும்.
புன்னை மரத்து விநாயகரை வழிபட தம்பதியர் ஒற்றுமை ஆவர்.
மகிழமரத்து விநாயகரை வழிபட இடமாற்ற பிரச்சனைகள் தீரும்.
மாமரத்து விநாயகரை வழிபட கோபம், பொறாமை நீங்கி வியாபாரம் செழிக்கும்.
வேப்ப மரத்து விநாயகரை வழிபட மனம் போல் மாங்கல்யம் கிடைக்கும்.
ஆலமரத்து விநாயகரை வழிபட தீராத வியாதி தீரும்.
அரசமரத்து விநாயகரை வழிபட நல்வினைகள் கூடும்.
வில்வமரத்து விநாயகரை வழிபட பிரிந்த தம்பதியர் இணைவர்.
இராமநாதபுரம் தேவி பட்டினம் அருகே உப்பூர் தலத்தில் எழுந்தருளி உள்ள வெயிலுக்குகந்த விநாயகர் ஆலயத்திற்கு மேற்கூரை கிடையாது.
காசி துண்டி கணபதியும் மேற் கூறை இல்லாமல் உள்ளார்.ஆதிசங்கரர் இந்த விநாயகரை வணங்கித்தான் கணேச பஞ்சரத்னம் பாடினார்.
ஸ்ரீ திருவலஞ்சுழி ஸ்வேதா விநாயகர் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறார். பாற்கடலில் உள்ள அமுதமயமான கடல் நுரையினால் உருவானதால் சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) என பெயர் பெற்றார் என்று கூறப்படுகிறது.
அகஸ்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து வெளிப்பட்ட காவிரி , சோழ நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கும் செய்தி அறிந்த சோழ மன்னன் தனது பரிவாரங்களுடன் சென்றான். வலம் சுழித்துச் பாய்ந்து வந்த காவிரியாறு இங்குள்ள சிவனை வலம் வந்து ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கிவிட்டது. அதுகண்ட சோழ மன்னன் கவலையுற்றுத் ஹேரண்ட மகரிஷி என்ற முனிவரிடம் சென்று மன்னன் முறையிட்டான், முனிவரும் திருவலஞ்சுழி வந்தடைந்து சிவனை வழிபட்டார்.
அசரீரியாக இறைவன், “மன்னனோ மகரிஷியோ இறங்கி அப்பாதாளத்தில் புகுந்தால் அப் பள்ளம் மூடிக்கொள்ளும். அப்போது காவிரி வெளிப்படும்” என்றருளினார். இதைக் கேட்ட முனிவர் நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தார். அவர் அந்த பிலத்துவாரத்தில் இறங்கி தன்னைப் பலி கொடுக்கவும் பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளிப்பட்டாள்.
இன்றும் மஹாசிவராத்திரி நாளில் இரவில் நான்கு ஜாமங்களிலும் ஆதிசேஷன் வெளிப்பட்டு வழிபடுவதாகச் செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.
தேவேந்திரன் அகல்யையால் ஏற்பட்ட சாபத்தை போக்கி கொள்ளும் பொருட்டு, சுவேத விநாயகர் – வெள்ளை விநாயகரை கையில் எடுத்துக் கொண்டு, பூலோகத்தில் உள்ள சிவ தலங்களை தரிசனம் செய்துவிட்டு இத்தலத்திற்கு வந்தடைந்தார்.
அந்த விநாயகர் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்யத் திருவலஞ்சுழியே ஏற்ற இடம் என இங்கே பிரதிஷ்டை செய்து இந்திரனால் பிள்ளையார் உள்ள மண்டபம் அமைக்கப்பட்டது என்று புராணங்கள் கூறுகின்றன. வெள்ளை பிள்ளையார் சன்னதியின் முன் உள்ளது கருங்கல் சன்னல்.
இது ஏழு அடி அகலமும் ஒன்பது அடி உயரமும் கொண்டது, நெடுக உள்ள கற்கள் முமூர்த்திகளையும், 24 கர்ண துவாரங்கள் அஷ்ட மூர்த்திகளையும் அஷ்ட ஐஸ்வர்ய சித்திகள் மற்றும் எட்டு வசுக்களையும், 111 கண்களும் மந்திரங்களையும், 10 யாளிகள் எட்டு திசைகளையும் ஆகாயம், பாதாளம் என 10 திசைகளையும், 49 மலர்கள் ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றை குறிக்கின்றன.
இவ் சன்னலின் வழியே விநாயகரை தரிசித்தால் சகல மூர்த்திகளையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும். சித்திரத் தூண்களும், கல்குத்துவிளக்கும் கொண்ட அழகான மண்டபமாக இது விளங்குகிறது. இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்று தேவேந்திரன் வந்து வெள்ளை விநாயகரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம்.
திருவலஞ்சுழியில் உள்ள ஸ்வேத விநாயகர். மற்ற ஆலயங்களில் நடப்பது போன்ற அபிஷேகம் இவருக்கு இங்கே இல்லை. சுமார் 10 அங்குல உயரமே உள்ள இந்த வெள்ளைப் பிள்ளையாருக்கு புனுகு மட்டும் சாத்துவார்கள். மேலும் பச்சைக் கற்பூரத்தைக் அரைத்து, இந்த விநாகயரின் திருமேனியைத் தொடாமல் அவர் மேல் மெள்ள தூவி விடுவார்கள் அதனால் இந்த விநாகயர் தீண்டாத் திருமேனி ஆவார்.
இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. அழகான கோபுரம் கிழக்கு நோக்கியுள்ளது. அம்பாள் வலப்பக்கம் திருமணக் கோலக்காட்சி தருகிறார். இங்குள்ள அஷ்டபுஜகாளி சிறப்பு வாய்ந்த மூர்த்தம். இங்குள்ள பைரவ மூர்த்தி மிகவும் உக்கிரம் வாய்ந்தவர். திருவிடைமருதூருக்குரிய பரிவாரத் தலங்களுள் திருவலஞ்சுழி விநாயகருக்கு உரிய தலமாகும்.
கிழக்கு நோக்கி உள்ள ஒரு இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. அம்பாள் பெரியநாயகியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளது. இத்தகைய அமைப்புள்ள தலங்கள் திருமணத் தலங்கள் என அழைக்கப்படுகின்றன.
திருமணம் தடை படுபவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டியவர்களும் இங்குள்ள சுவேத விநாயகப் பெருமானையும், இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் தாங்கள் எண்ணிய எண்ணம் ஈடேறும் என்பது நம்பிக்கை.
இறைவனுக்கும், இறைவிக்கும் உள்ள தனித்தனி சன்னதிகள் உள்ளது. இங்குள்ள அஷ்டபுஜகாளி சிறப்புவாய்ந்த மூர்த்தம். இங்குள்ள பைரவ மூர்த்தி மிகவும் உக்கிரம் வாய்ந்தவர். அஷ்டபுஜ மஹாகாளிக்கும், வெளிப் பிரகாரத்தில் பைரவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. சனீஸ்வரலுக்கும் இவ்வாலயத்தில் தனி சந்நிதி உள்ளது.
உள்பிராகாரத்திலுள்ள முருகப்பெருமான் ஆறு திருமுகங்களும், பன்னிரு கரங்களும் கொண்டு மயில் மீதமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் அருகில் நிற்கின்றனர். திருப்புகழில் இத்தல முருகர் மீது ஒரு பாடல் உள்ளது.
கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் சுவாமிமலைக்கு அருகே இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர், பாபநாசம், சுந்தரப் பெருமாள் கோயில் முதலிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துச் சாலையில் சென்று கோயிலை அடையலாம்.
