உலகிலேயே மிக உயரமான முருகன் கோவில் எதுவென்று தெரியுமா?
லிங்க ஸ்வரூபத்தில் காட்சியளிக்கும் முருகன்:
‘குன்று இருக்கும் இடமெல்லாம் குகன் இருப்பான்’ என்பது போல் மலையென்றாலே அதன் மீது வேலுடன் முருகப்பெருமான் காட்சி கொடுக்கிறார். திருவிளையாடல், கந்தன் கருணை போன்ற கதைகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அதில் கூறப்படுவது போல, முருகப்பெருமான் கடவுள் கணேசனிடம் ஞானப்பழத்திற்காக கோவித்துக் கொண்ட இடம் பூலோகத்தில் இருக்கிறது. அதுவும் கைலாய மலைக்கு அருகிலேயே தான் இந்த இடம் இருக்கிறது.
தமிழ்க்கடவுளான முருகனுக்கு தமிழகமெங்கும் எண்ணற்ற கோயில்களும், அறுபடை வீடு கோயில்களும் உள்ளன. இதில் திருச்செந்தூரைத் தவிர அனைத்து கோயில்களும் மலை மீது அல்லது மலைச் சார்ந்த இடங்களில் தான் அமைந்திருக்கின்றன. எந்த குன்றை பார்த்தாலும் அதில் பெரும்பாலும் முருகப்பெருமானே அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். முருகப்பெருமானுக்கு சஷ்டி, கார்த்திகை, உத்திரம் போன்ற விசேஷ நாட்களும் தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது.
ஞானப்பழத்திற்காக உலகை சுற்றி வந்த கதை:
சிவபெருமானும் பார்வதி தேவியும் பூத கணங்கள் சூழ கைலாய மலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று புராணங்கள் கூறுகின்றான். பிரம்ம தேவனும், சரஸ்வதி தேவியும் பிரம்ம லோகத்தில் இருப்பது போல, ஸ்ரீமன் நாராயணனும், லட்சுமி தேவியும் திருப்பாற்கடலில் குடிகொண்டிருப்பது போல சிவகுடும்பம் முழுதும் கைலாயத்தில் இருக்கிறது.
ஒரு நாள் ஞானப்பழமான மாம்பழத்தை நாரதர் கொண்டு வந்து பார்வதி தேவியிடம் கொடுத்தாராம். இந்த முழு பழத்தையும் பங்கு எதுவும் போடாமல் ஒருவர் மட்டுமே சாப்பிட வேண்டும், அப்பொழுது தான் முழு ஞானமும் அவருக்கு வந்து சேரும் என்று சொல்லி சென்றாராம். ஆனால் அவர் கொடுத்ததோ ஒரேயொரு பழம். முருகப்பெருமானும் கணேசனும் ஒருவரை ஒருவர் வசைப்பாடி கொண்டிருந்தனராம்.
இந்நேரத்தில் முதலில் உங்களில் எவர் உலகை சுற்றி வருகிறாரோ அவருக்கே இந்த பழம் என்று சிவபெருமான் கூறினார். இந்த பழம் எனக்கே என்று கூறி, மயில் மீது அமர்ந்து உலகைச் சுற்ற முருகன் கிளம்பினாராம். அன்னையும் தந்தையுமே என் உலகம் என்று கூறி அவர்கள் இருவரையும் சுற்றி வந்து கணேசப்பெருமான் ஞானப்பழத்தைப் பெற்றுக் கொண்டாராம். இதனால் கோவமுற்ற முருகன், கைலாயத்தை விட்டு வெளியேறி ஒரு குன்றின் மீது வந்து அமர்ந்து கொண்டார்.
கோவத்தில் குன்றின் மேல் அமர்ந்த கார்த்திகேயன்:
அந்த இடம் இப்போது கார்த்திகேய சுவாமி கோவிலாக உள்ளது. இந்த இடம் ருத்ரபிரயாக்கிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ருத்ரப்ரயாக்கின் மலையடிவாரத்தில் கனக்சௌரி என்ற ஒரு கிராமம் இருக்கிறது. இக்கோயிலை அடைய கனக்சௌரி கிராமத்தில் இருந்து 3 கிமீ தூரத்திற்கு மலையேற வேண்டும். சாதாரணம் என்று நினைக்க வேண்டாம். மிக மிக கடினமான மலையேற்றம் இது
கவுஞ்ச பர்வதம்:
மலையேறி வந்தவுடன் அந்த களைப்பையெல்லாம் அந்த கார்த்திகேயன் போக்கி விடுகிறார். இமயமலைகளுக்கு நடுவே கவுஞ்ச பர்வதம் என்ற இடத்தில் தான் இந்த கோயில் அமைந்திருக்கிறது. மலையின் உச்சியில் மயில் வாகனத்தில், வேலோடு லிங்க ஸ்வரூபத்தில், ஆறு முகங்களில் முருகப்பெருமான் காட்சி தருகிறார். சதையை தாயிற்க்கும், தன் எலும்புகளை தந்தைக்கும் கொடுத்து விட்டு முருகன் இங்கு தவம் செய்கிறார் என்று கூறப்படுகிறது. இங்கு முருகனின் எலும்பை வைத்து பூஜிப்பதாக உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர்.
இந்த இடத்தில் ஒரு வன தேவி கோவிலும் இருக்கின்றது. சுற்றிலும் மணிகள் கட்டப்பட்டு உள்ளன. மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த கோவிலில் மக்கள் அனைவரும் ‘ஜெய் கார்த்திக் சுவாமி’ என்று மக்கள் கோஷமிடுகின்றனர். இது தான் உலகிலேயே மிக உயரமான முருகன் கோவிலாகும். ஆனால் அவர் நம்மை அழைத்தால் மட்டுமே நம்மால் அங்கு செல்ல முடியும். இங்கு செல்வது அவ்வளவு சாமானிய காரியம் இல்லை.