எதனால் பசு புனிதமுடையதாக போற்றப்படுகிறது?
பசு புனிதமிக்க பிராணி என்பதை எல்லோரும் அறிவோம். ஆயினும், “எதனால் அது புனிதமிக்கது?” என்று பிற சமயத்தோர் வினவும்போது அதற்கு தக்க விடையளிக்க நம்மில் பலராலும் முடிவதில்லை. காரணம் நம்மவர் பலருக்கே அதன் காரணம் தெரியவில்லை.
ஆகமங்களின்படி ,ஶிவலோகாத்தில் பரமேஶ்வரனின் சன்னிதானத்தில் வ்ருஷபதேவரின் அருகில் கபிலை நிறமுள்ள நந்தை, கருமை நிறமுள்ள பத்ரை, புகை நிறமுள்ள சுசீலை, வெண்மை நிறமுள்ள ஸுரபி, செம்மை நிறமுள்ள ஸுமனை என்று ஐந்து திவ்ய பசுக்கள் இருந்தன. இவ்வைந்து பசுக்களும் ஶிவபூஜை மற்றும் யாகாதி கர்மங்களுக்கு பால் முதலிய த்ரவ்யங்களை அளிப்பதற்காக திருப்பாற்கடலிலிருந்து உதித்து பூவுலகத்திற்கு செல்லுமாறு ஶிவபரம்பொருள் கட்டளையிட்டருளினார். இதுவே பசுக்கள் பூமிக்கு வந்த வரலாறு.
பசுவின் உடலில் அனைத்து தேவர்களும், முனிவர்களும், தீர்த்தங்களும் வாசம் செய்கின்றன. அதன் இரு கொம்புகளில் அயனும் மாலும் ; கொம்பின் நுனியில் கோதாவரி முதலிய தீர்த்தங்களும் சராசரங்களும்; சிரத்தில் ஶிவனும்; நடுநெற்றியில் உமையம்மையும்; மேல் நாசியில் ஸுப்ரமண்யரும்; உள்நாசியில் நாகேஶரும்; இரண்டு காதுகளில் அஶ்வினி தேவர்களும்; கண்களில் ஸூர்ய – சந்த்ரர்களும்;
பற்களில் வாயுவும்; நாவில் வருணனும்; ஹும்காரத்தில் ஸரஸ்வதியும்; இதயத்தில் யமனும்; உதட்டில் உதயாஸ்தமன சந்திகளும்; கெண்டைத்தளத்தில் யக்ஷர்களும்; கழுத்தில் இந்த்ரனும்; திமிலில் ஆதித்யர்களும்; மார்பில் சாத்யர்களும்; நான்கு பாதங்களில் அனில வாயுவும்; முழந்தாள்களில் மருத்துக்களும்; குரத்தின் நுனியில் நாகலோகத்தாரும்; குரத்தின்
நடுவில் கந்தர்வர்களும்; மேற்குரத்தில் தேவ ஸ்த்ரீகளும்; முதுகில் ருத்ரர்களும்; சந்திகளில் வசுக்களும் ; அரைப்பலகையில் பித்ருக்களும்;
பகத்தில் ஸப்தமாதாக்களும்; பின் பகுதியில் மஹாலக்ஷ்மியும்; அடிவாலில் நாகேஶரும்; வாலின் மயிரில் சூரியனின் ஒளியும்; மூத்திரத்தில் கங்கையும்; சாணத்தில் யமுனையும்; உரோமத்தில் ருஷிகளும்; உதரத்தில் பூதேவியும்; முலையில் சமுத்திரமும்; வயிறு, இதயம் மற்றும் முகத்தில் கார்ஹபத்யம், ஆஹவனீயம் மற்றும் தக்ஷினாக்நீ ஆகிய மூன்று வேள்வி தீக்களும் ; எலும்பு மற்றும் சுக்கிலத்தில் அனைத்து யாகங்களும்; அனைத்து உறுப்புகளிலும் கற்புக்கரசியரான பெண்கள் குடிகொண்டுள்ளனர்.
ஆதலால், பசுவை ஹிம்சிப்பது அதன் உடலில்
குடிகொண்டுள்ள எண்ணற்ற தேவர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள், யக்ஷர்கள் மற்றும் பரமேஶ்வரனை ஹிம்சிப்பதற்கு ஒப்பாகும்; பசுவை கொள்வது எண்ணற்ற ஆலயங்களை இடிப்பதற்கு சமானனாகும்.
அதுவன்றி, பசுவிடமிருந்து பெறப்படும் பால், தயிர், நெய், மூத்திரம் மற்றும் சாணத்தை மந்த்ரோக்தமாக கூட்டி தயாரிக்கப்படும் “ஆணைந்து” எனப்படும் பஞ்சகவ்யமே ஶிவபெருமானுக்கு மிக உயர்ந்த இடு இணையற்ற திருமஞ்சனப் பொருள்.
ஒரு தாய் தனது குழந்தைக்கு தாய்ப்பால் தரவியலாத சந்தர்ப்பத்தில் ஆவின் பாலே அதற்கு தாய்ப்பாலாக ஆகிறது. ஆதலால் தான் சாஸ்திரம் பசுவை ஒருவனின் இன்னொரு தாயாக போற்றுகிறது:
ஆத்மா மாதா குரோ: பத்னீ ப்ராஹ்மநீ ராஜ பத்னிகா |
தேனுர் தாத்ரீ ததா ப்ருத்வீ ஸப்தைதா மாதர: ஸ்ம்ருதா ||
தனது சொந்த தாய், குருவின் பத்னி, அந்தணரின் மனைவி, அரசனின் மனைவி, பசு செவிலியர் மற்றும் மண் ஆகிய எழுவரும் ஒரு மனிதனின் ஏழு தாய்கள் விளங்குகிறார்கள்.
கோமதி வித்யா, விஷ்ணு தர்மோத்தரம்
பசுவை காப்போம் !
பசுவை போற்றுவோம்!
கோலக்ஷ்மீம் நமாம்யஹம்
