ராமேஸ்வரத்தில் கடல் மேல் பாலம் கட்ட தீர்மானம் ஆகிவிட்டது.
பாலம் கட்டும் வேலையை ஆரம்பிக்குமுன் ஸ்ரீராமர் தனது இஷ்ட தெய்வமான சிவபெருமானுக்கு பூஜை செய்து அவரின் ஆசி பெற்று பாலத்தின் வேலையை தொடங்க எண்ணினார்.
அதற்கென சிவலிங்கத்தை தேடியபோது ஸ்ரீராமரின் அன்புக்குரிய பக்தன் அனுமன் தான் இமயம் சென்று ஒரு சிறந்த சிவலிங்கத்தை கொண்டு வருவதாக ராமரிடம் சொல்ல அவரும் சம்மதித்தார்.
அதே சமயம் பூஜைக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் தனது இஷ்ட தெய்வமான சிவலிங்கத்தை கொண்டுவருமாறு சொல்லி அனுப்பினார்.
ஸ்ரீராமரின் பக்தன் அனுமன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். சந்தோஷத்துடன் அனுமன் வானில் இமயம் நோக்கி பறந்தான்.
நேரம் கடந்துகொண்டே கொண்டிருந்தது. அனுமன் இன்னும் திரும்பவில்லை.
ஆம் ! இமயம் சென்ற அனுமன் அங்கு பல அளவுகளில் பல நிறங்களில் சிவலிங்கங்களை கண்டான். ஒன்றுக்கொன்று அழகிலும் அமைப்பிலும் சிறந்ததாகவே இருந்தது.
இத்தனை அழகான சிவலிங்கங்களில் எதை தேர்ந்தெடுப்பது என்று புரியாமல் குழம்பித் தவித்துக் கொண்டிருந்தான் அனுமன். இறுதியாக ஒன்றை தேர்ந்தெடுத்து ஸ்ரீ ராமரிடம் ஒப்படைக்க ஆகாயத்தில் எகிறினான்.
இங்கே ராமேஸ்வரத்தில் பூஜைக்கான நேரம் வந்துவிட்டதால். ஸ்ரீராமர் தனது தம்பி லட்சுமணனிடம். கைப்பிடி மண்ணை எடுத்து கடல் நீரில் குழைத்து லிங்கமாக அமைக்கச் சொன்னார்.
ஜாம்பவானை அந்த லிங்கத்தை பூமியில் ஆகிருதி செய்யச் சொன்னார். சிவலிங்கத்திற்கு புஷ்பங்களால் அலங்கரித்து மந்திரங்கள் சொல்லி ஆவாகனம் செய்து விட்டார். பூஜை நல்ல முறையில் முடிந்தது.
வானில் பறந்து வந்த அனுமன் தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை ஸ்ரீராமரிடம் கொடுத்தான்.
ஸ்ரீ ராமர் அங்கு நடந்ததை அனுமனிடம் விளக்கி கால நேரத்திற்குள் பூஜை முடிய வேண்டியதின் அவசியத்தையும் எனவே அனுமன் கொண்டுவந்த லிங்கத்தை ஏற்க முடியாத நிலையையும் விளக்கினார்.
அனுமன் மிகுந்த வருத்தமுற்றான் , வருத்தத்தால் கண்ணீர் விட்டபடி ஒரு மூலையில் சென்று கோப முத்திரையுடன் அனுமன் அமர்ந்தான்.
அனுமனின் நிலையைக் கண்ட ஸ்ரீ ராமர். அனுமனே நீ எனது அன்புக்கு பாத்திரமானவன் தான். ஆனாலும் விதிப்படி நடக்காதது உன் தவறல்லவா ? என்றார் ஸ்ரீராமர்.
அதனால் என்ன ? சுவாமி சிறிது நேரம் தானே தாமதமானது. அந்த மண் லிங்கத்தை எடுத்து விட்டு நான் கொண்டு வந்த சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்யலாகாதா ? என்று அழுகுரலுடன் கேட்டான் அனுமன்.
அப்படியா ! சரி நீயே அந்த மண் லிங்கத்தை எடுத்து விட்டு நீ எடுத்து வந்த சிவலிங்கத்தை அவ்விடத்தில் வைத்து விடு என்றார் ஸ்ரீராமர்.
மிக்க மகிழ்ச்சி கொண்டான் அனுமன் ஓடிச் சென்றான். ஆதர்சனம் செய்யப்பட்ட மண் லிங்கத்தை எடுக்க முயன்றான்.
தன்னுடைய முழு பலத்தையும் உபயோகித்தும். அந்த மண் லிங்கத்தை பூமியிலிருந்து உருவ முடியவில்லை. இழுத்த வேகத்தில் அனுமனை தடுமாறி பின்னால் விழுந்தான்.
அனுமனுக்கு அப்போது ஸ்ரீராமர் தனக்கு புகட்டிய பாடம் என்னவென்று புரிந்தது.
ஓடோடி சென்று ஸ்ரீராமரின் காலடியில் விழுந்தான். சுவாமி என்னை மன்னித்து விடுங்கள்.உங்கள் முழு ஆதரவு எனக்கு இருப்பதால் அதில் அதிக உரிமையுடன் சட்டதிட்டங்களை வளைக்க நினைத்தது என் தவறு என்று மன்னிப்பு கேட்டான் அனுமன்.
ஸ்ரீராமரும் அனுமனே ! காலத்தின் மதிப்பை அறியாதது செயலின் சிறப்பை மறைத்துவிடும்.
இருந்தாலும் நீ வருந்தாதே. ராமேஸ்வரம் புனித நீராட வரும் யாவரும் இமயத்தில் இருந்து எடுத்து வந்த உன் லிங்கத்தையும் சேர்ந்து தரிசித்தாலே நற்பயன் அடைவார் என்று ஆசி அருளினார்.
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா
