ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபட சனீஸ்வரன் தொந்தரவுகள் நீங்குமா?

64

ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபட சனீஸ்வரன் தொந்தரவுகள் நீங்குமா?

ஆஞ்சநேயரை நினைத்தால் சனீஸ்வரர் பாதிப்புகள் நீங்கும் என்பது ஐதீகம். எவர் ஒருவருக்கு ஏழரை சனி காலம் ஆரம்பிக்கிறதோ, அவர் ஒன்று சிவனை வழிபட வேண்டும். அப்படியில்லை என்றால், ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று அவரை வழிபட வேண்டும்.

ஸ்ரீ ராமர் சேது அணையைக் கட்டும்போது அனுமர் பெரிய பெரிய கற்களைத் தலைமேல் சுமந்து சென்று ஸ்ரீ ராம கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். அப்போது சனீஸ்வரர் அனுமரைப் பிடிக்க அங்கு வந்தார். அனுமர் என்னைத் தொந்தரவு செய்யாதே, நான் இப்போது ஸ்ரீராம காரியத்தில் ஈடுபட்டுள்ளேன் என்று கூறினார். சனீஸ்வரர் விடுவதாக இல்லை. உன்னை இப்போது பிடித்துத்தான் ஆக வேண்டும் என்று சொன்னார். அனுமர் உடனே ஒப்புக்கொண்டு சனீஸ்வரரைத் தன் தலையில் அமரச் செய்தார். பின்பு கற்களை வழக்கம் போல் தூக்கித் தலைமேல் வைத்துக் கொள்ள சனிபகவான் கற்களுக்கு அடியில் நசுங்க ஆரம்பித்தார். தன்னை விடுவிக்குமாறு அனுமரை வேண்டினார்.

அனுமரும் மனமிரங்கி சனிபகவானை விடுவித்து, இனி ஸ்ரீ ராம பக்தர்களைத் தொந்தரவு செய்யாதே என்று கூறினார். சனி பகவானும் அனுமரை வணங்கி அவ்வாறே உறுதிமொழியும் அளித்தார். ஆஞ்சநேயரை நினைத்தாலே போதும் சனீஸ்வரரின் உபாதைகள் உங்களை விட்டு அகன்று ஓடிவிடும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்றிங்களா.. அவரை வணங்கிட்டு ஒரு நிமிடமாவது கோவிலில் அமர்ந்து அப்பறம்தான் வீட்டுக்கு கிளம்பனும்.

அனுமனைப் பிடித்த ஏழரை சனி: துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி

ஸ்ரீ ராமனின் பெரிய பக்தனான அனுமனை ஏழரை சனி பிடித்த போது என்ன செய்தார்? நாம் ஏன் ஏழரை சனி காலத்தில் அனுமனை வணங்க வேண்டும். சனி பகவானையே ஸ்ரீ ராமர் பணியை செய்ய வைத்த ஆஞ்சநேயரின் பெருமை பற்றி பார்க்கலாம் வாங்க.

திரேதாயுகத்தில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட அவதரித்தவர் தான் ஸ்ரீ ராமபிரான். அவருக்கு உதவி செய்யும் பொருட்டு வாயு பகவானுக்கும், கந்தர்வ பெண்ணுக்கும் மகனாக சிவ பெருமான் அவதரித்த புதல்வன் தான் அனுமன் என பெயர் பெற்றார்.

ராமனின் பணியில் அனுமன்:

ராவணனை அழித்து சீதா தேவியை மீட்க, இலங்கைக்கு கடலில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த பணியை அனுமன், சுக்ரீவன், அங்கதன் உள்ளிட்ட வானர படைகள் ஈடுபட்டிருந்தனர். வானர வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சக்திக்கு முடிந்த அளவு மரக்கட்டைகளையும், பாறைகளையும் எடுத்து வந்து பாலம் அமைக்கும் இடத்தில் போட்டுக் கொண்டிருந்தனர். ஸ்ரீ ராம, லட்சுமணரோ பாலம் அமைக்கும் நோக்கில் வருவோருக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தனர். அனுமன் எல்லா பாறைகள் மற்றும் மரக்கட்டைகள் மீது ‘ஸ்ரீ ராம ஜெயம்’ என எழுதி பாலம் அமைக்க கடலில் எறிந்து கொண்டிருந்தார்.

​சனியின் விண்ணப்பம்:

அப்போது அனுமனுக்கு ஏழரை சனி பிடிக்க வேண்டிய காலம். அதனால் ஸ்ரீ ராம, லட்சுமணன் முன் தோன்றிய சனீஸ்வரன், ‘பிரபு, உங்கள் அடியேன் ஆஞ்சநேயருக்கு ஏழரை சனி பிடிக்க வேண்டிய காலம் வந்து விட்டது. தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவரைப் பிடித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என வேண்டினார். அதற்கு ஸ்ரீ ராமன், “எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அதே போல உன் கடமையை நீ செய்யலாம். முடிந்தால் அனுமனைப் பிடித்துக் கொள்” என்றார்.

​அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி:

அனுமன் முன் தோன்றிய சனி, “அனுமனே, நான் சனீஸ்வரன் வந்திருக்கிறேன். உனக்கு ஏழரை சனி காலம் வந்து விட்டதால் உன்னைப் பிடிக்க வந்திருக்கிறேன். உன்னைப் பிடிக்க உன் உடலில் ஏதேனும் ஒரு இடம் கொடு” என்றார். அதற்கு அனுமனோ, “இராவணனின் சிறையில் இருக்கும் சீதா தேவியை மீட்டு ஸ்ரீ ராமனிடம் சேர்க்க சேது பந்தனப் பணியை மேற்கொண்டு வருகிறேன். சீதா தேவியை ராமனிடம் சேர்த்ததும் நானே உன்னைத் தேடி வருகிறேன். அப்போது என் உடல் முழுவதும் நீங்கள் வியாபித்துக் கொண்டு என்னை ஆட்டிப் படைக்கலாம்” என்றார்.

​தலையில் அமர்ந்த சனி:

சனி பகவானோ, “நான் சரியான காலத்தில் ஒருவரைப் பிடித்து, சரியான காலத்தில் விலகுபவன். காலதேவன் நிர்ணயித்த விதியை நானும் மீற முடியாது. நீயும் மீற முடியாது. அதனால் உன் உடலில் எந்த பாகத்தில் நான் பிடிக்கலாம் என்பதை கூறு” என்றார். தனது கையால் ஸ்ரீ ராம ஜெயம் என பாறைகளுக்கு எழுதிக் கொண்டிருக்க, தோளில் சுமந்து காலால் நடந்து கடலில் போடுவதால் இங்கெல்லாம் பிடிக்க வேண்டாம், வேண்டுமென்றால், உடலுக்கு தலையே பிரதானம் என்பதால் என் தலை மீது அமர்ந்து கொண்டு உங்கள் கடமையை செய்யுங்கள் என்றார் அனுமன்.

​வலியால் துடித்த சனீஸ்வரன்:

அதுவரை சாதாரண பாறையை சுமந்து வந்த அனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின், முன்பை விட மிகப்பெரிய பாறைகள் மீது ஜெய் ஸ்ரீ ராமன் என எழுதி தன் தலை மீது சுமந்து கடலில் வீசினார். இதுவரை அனுமன் சுமக்கும் பெரிய பாறைகளின் பாரம் அனுமன் சுமந்து கொண்டிருந்தார். ஆனால் தற்போது அனுமனின் தலையில் அமர்ந்திருந்த சனீஸ்வரன் சுமக்க வேண்டியதாக இருந்தது. இதனால் பாரத்தை தாங்க முடியாத சனீஸ்வரன் சிறிது நேரத்தில் அனுமனின் தலையிலிருந்து கீழே குதித்தார்.

​வரம் தந்த சனி பகவான்:

ஏழரை ஆண்டுகள் பிடிப்பதாக கூறி அதற்குள் என்னை விட்டுவிட்டீர்களே என அனுமன் கேட்க, பரமேஸ்வரனின் அம்சமான உங்களை கடந்த யுகத்தில் பிடித்து வெற்றி பெற்றேன். இந்த முறை தோல்வி அடைந்து விட்டேன் என்றார். இல்லை இந்த முறையும் வென்றுள்ளீர்கள். அதாவது ஏழரை ஆண்டுகளுக்கு பதிலாக ஏழரை விநாடி என்னைப் பிடித்துக் கொண்டீர்கள் என அனுமன் கூறினார். ஸ்ரீ ராம ஜெயம் என எழுதிய பாறையை என் மீது வைத்து சுமந்ததால் நானும் ராம சேவையில் ஈடுபட பாக்கியம் கிடைத்தது. அதனால் உனக்கு ஏதேனும் ஒரு வரம் தர விரும்புகிறேன் என்றார் சனி.

ராம நாமம்:

அனுமனோ, “ராம நாமத்தை பக்தியுடன் உச்சரிப்பவருக்கு ஏழரை சனி காலமாக இருந்தாலும், அவருக்கு ஏற்படும் துன்பங்களிலிருந்து நீங்கள் தான் காத்து அருள வேண்டும்” என்ற வரத்தை கேட்டார். அன்று முதல் ஏழரை சனி பிடித்தவர்கள் மிக சிறந்த பரிகாரமாக ஸ்ரீ ராமனையும், அனுமனையும் வழிபாடு செய்வது நன்மையை தரும் என்ற பரிகாரம் கூறப்படுகிறது.