நவக்கிரக தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில் – பகுதி 2!
5. ஸ்ரீ காரணீஸ்வரர் கோயில் – குரு ஸ்தலம்
மயிலாப்பூர் பகுதியில் கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோயில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. உலகத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே காரணம் என்ற பொருளில் இங்குள்ள இறைவன் ஸ்ரீ காரணீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டு அருள்புரிகிறார் அம்பிகை ஸ்ரீ சொர்ணாம்பிகை. இந்த அம்பிகையை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் செழித்துச் சிறக்கும் என்பது நம்பிக்கை.
Also Read This: நவக்கிரக தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில் – பகுதி 1!
இத்தலத்து ஈசன் நவக்கிரகங்களில் தன காரகன் மற்றும் புத்திர காரகனான குரு பகவானின் அம்சமாகத் திகழ்கிறார். இவரை வியாழக் கிழமைகளில் வணங்கிவரத் திருமண தோஷங்கள் மற்றும் புத்திர தோஷங்கள் நீங்கும். மேலும் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம்.
6. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் – சுக்கிர ஸ்தலம்
மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே இருக்கும் இந்த வெள்ளீஸ்வரர் கோயில், சிவனுக்கும் காமாட்சிக்கும் உரியத் திருத்தலமாக அமைந்துள்ளது. மகாபலி யாகத்தின் போது, வாமனனாக வந்த விஷ்ணு மூன்றடி நிலம் தானம் கேட்டபோது, வந்திருப்பது மகாவிஷ்ணு என்றும் தானம் கொடுக்க வேண்டாம் என்றும் குரு சுக்கிராச்சாரியார் தடுத்தார். ஆனாலும், மகாபலி தானம் கொடுக்க முன்வரவே, வேறு வழி இல்லாமல் சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி தாரை வார்க்க முயன்ற மகாபலியின் கமண்டலத்துக்குள் புகுந்துகொண்டு நீர் வெளியில் வராமல் அடைத்துக் கொள்கிறார்.
வாமனனாக வந்த விஷ்ணு தன் தர்ப்பை மோதிரத்தால் குத்த, கமண்டலத்தில் வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்பார்வை போய்விடுகிறது. சுக்கிராச்சாரியார் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வழிபட்டு கண்பார்வை பெற்றதாகத் தல வரலாறு. எனவே, ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வழிபட்டால் கண் தொடர்பான நோய்கள் நீங்குவதாகப் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். மேலும் சுக்கிர ஸ்தலத்து ஈசனை வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வர களத்திர தோஷம் மற்றும் திருமணத் தடை நீங்கும்.
7. ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் – சனி ஸ்தலம்
மயிலையின் சப்த சிவதலங்களில் மயிலையின் நாயகனாக, அருள்மிகு கற்பகாம்பிகை சமேதராக அருள்புரியும் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலே நாம் முதலில் தரிசிக்கவேண்டிய ஆலயமாகும். கபாலீஸ்வரரை காஸ்யப முனிவர் வழிபட்டதாகத் தலவரலாறு சொல்கிறது. சிவபெருமான் மேற்கு பார்த்து எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் இந்தக் கோயிலும் ஒன்று. புன்னை மரத்தின் அடியில் எழுந்தருளி இருந்த இறைவனை, அம்பிகை மயில் வடிவம் கொண்டு பூஜித்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு மயிலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது.
நவக்கிரகங்களில் ஆயுள் காரகனான சனிஸ்வரனின் அம்சமாக கபாலீஸ்வரர் அமைந்திருக்கிறார். எலும்பின் காரகர் சனிஸ்வர பகவான். இத்தலத்து ஈசன் கபாலம் மற்றும் எலும்பிற்கு அதிபதியாக இருக்கிறார். மேலும் அஸ்தியிலிருந்து பூம்பாவமையை பெண்ணாக உருவாக்கிய ஸ்தலம். இங்கு சனி கிழமைகளில் வணங்கி வர ஆயுள் தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். மேலும் இந்த ஸ்தலம் திருக்கடையூர் மற்றும் திருபைஞ்ஞீலி ஸ்தலங்களைப் போல் ஆயுள் வளர்க்கும் ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.
