இஷ்ட தெய்வத்திற்கு படையல் போடுவது ஏன்? படையலை சரியாக இப்படி படைத்து பாருங்கள், இறைவனின் அருள் முழுமையாக உங்களுக்கு கிடைக்கும்.

258

இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து பூஜை செய்வது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு நடைமுறை ஆகும். பூஜையில் வைக்கப்படும் படையல் கடவுள் ஏற்றுக்கொள்வதாக நாம் நம்புகிறோம். அதை பிரசாதமாக சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று ஆத்மார்த்தமாக நைவேத்தியம் படைக்கிறோம். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு உணவு பொருட்கள் பிடித்தமானதாக இருக்கின்றது. ஸ்ரீ கிருஷ்ணருக்கு வெண்ணெய் பிடிக்கும். விஷ்ணு பகவானுக்கு பாலும், பால் பாயாசமும் மிகவும் பிடித்தமான நைவேத்தியம் ஆகும். விக்னங்களை தீர்க்கும் விநாயகருக்கு கொழுக்கட்டை பிடிக்கும். உலகத்தை காக்கும் அம்மன் தாய்க்கு கூல் என்றால் மிகவும் பிடிக்கும். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இப்படி கடவுளுக்கு பிடித்தமான படையல் போடும் பொழுது சாதாரண உணவு கூட சக்தி பெற்று பிரசாதமாக மாறுகிறது என்று நம்பப்பட்டு வருகிறது. இவ்வாறு கடவுளுக்கு போடப்படும் படையலை எப்படி போட்டால் நல்ல பலன் காணலாம்? என்பதைப் பற்றி இப்பதிவில் நாம் இனி காண்போம்

சாதாரணமாக நைவேத்தியம் படைத்தாலும், படையல் போட்டாலும் கட்டாயம் வாழை இலையில் தான் படையல் போட வேண்டும். படையல் போடுவது என்பது பூஜையின் இறுதிக்கட்டம் தான். எனவே பூஜையில் படையல் போட்டதும் இலையை திறந்து வைக்கக் கூடாது. இவ்வாறு திறந்து வைப்பதால் அதில் கிடைக்கப் பெறும் சக்திகள் பிரபஞ்சத்துடன் கலந்து விடும் என்பது ஐதீகம். படையல் போட்டதூம் மூடி வைப்பதால் இறை ஆற்றல் முழுமையாக நைவேத்தியத்தில் கலக்கும் என்பது நம்பிக்கை. படையல் போடும் பொழுது வாழை இலையில் கட்டாயமாக உப்பு பரிமாறக் கூடாது. வாழை இலை போடும் முன் சிறியதாக கோலமிட்டு, அந்த கோலத்தின் மேல் வாழை இலையை பரப்பி, படையல் போடுவது சரியான முறையாகும். வாழை இலையின் காம்பு பகுதி கடவுளையும், அதன் நுனிப்பகுதி நம்மையும் பார்த்தபடி போட வேண்டும். இவ்வாறு வாழை இலையை வைப்பதன் தத்துவம் என்னவென்றால், கடவுளை விட நாம் உயர்ந்தவர் அல்ல என்பதையும், மனிதனுக்கு இருக்கும் ஆணவம், அகங்காரத்தையும் குறைப்பதற்காகவும் இவ்வகையில் காம்பு பகுதி கடவுளை நோக்கியும், நுனிப்பகுதி நம்மை நோக்கியும் பார்த்தவாறு வாழை இலையை போட வேண்டும் என்கின்றனர். படையல் போட்டதும் தீர்த்தம் வைத்திருக்கும் தீர்த்த நீரை வாழை இலையை சுற்றி சிறிதளவு தெளித்து விட வேண்டும். தீர்த்தத்தில் துளசி இலைகள் போட்டு வைக்க வேண்டும். படையலுடன் துளசி இலைகளையும் வைக்கலாம். அதே போல் இறைவனின் பாதங்களிலும் துளசி இலைகள் வைப்பது நல்லது.

இறைவனுக்கு படையல் போடப்படும் பொழுது கட்டாயம் உப்பு, காரம், எண்ணெய் மிகவும் குறைந்த அளவே சேர்க்க வேண்டும். இந்த பொருட்களில் சாத்வீக குணம் கிடையாது என்பதே இதன் அளவை குறைப்பதற்கான காரணம். சுத்தமான பசு நெய்யில் சாத்வீக குணம் நிறைந்து காணப்படுகிறது. இதனால் படையலுக்கு சேர்க்கப்படும் பொருட்களில் நெய் எவ்வளவு வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் உப்பு, காரம், எண்ணெய் மட்டும் குறைந்த அளவு சேர்த்தால் போதுமானது. வாழையிலையில் படைக்கப்படும் சாத்வீக பொருள்களுக்கு அதீத சக்திகள் உண்டு. இவற்றையெல்லாம் முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் சாதாரண உணவுப் பொருள், பிரசாதமாக மாறுகிறது. இறைவனுக்கு படைக்கப்படும் நைவேத்தியம் முழுமையாக இறைவனுக்கு சென்றடைகிறது என்ற நம்பிக்கையுடனும், பக்தியுடனும் படைக்கப்படுவது நல்லது. கடவுள் வந்து சாப்பிட போகிறாரா? என்று எண்ணியபடி போடாதீர்கள். எந்த அளவிற்கு பக்தி சிரத்தையுடன் நீங்கள் நைவேத்தியம் செய்து படைக்கிறீர்களோ? அந்த அளவிற்கு, உங்களுக்கு வாழ்வில் சுபிட்சம் உண்டாகும். அனைத்து பிரச்சனைகளும் நீங்கி நிம்மதி கிடைக்கும். இறைவனின் அருள் முழுமையாக கிடைக்கும்.