ஜெகந்நாதப் பெருமாளை உறுத்திய செண்பகப்பூ

414

ஏசினால் கூட ஏற்பான் எம்பெருமான். எனக்குத் தெரிந்த பட்டர் ஒருவர் காலையில் எம்பிரானின் சந்நிதியைத் திறந்த உடன், அவனோடு யதார்த்தமாகப் பேசுவார்.
‘ பெருமாளே உமக்கு என்ன ஒய் பிரச்னை. ஒரு நிமிடம் கூட நேற்றிரவு என்னைத் தூங்க விடவில்லையே. எத்தனை கவலைகள் குழப்பங்கள். நீர் மட்டும் இன்னும் திருப்தியாய் திவ்ய சயனத்தில் இருந்து விழிக்க வில்லை. இனிமேல் கோபம் இருந்தால் நேரில் சொல்லும் ஒய் ‘ என்று அன்புக் கோபத்துடன்,
அவன் பற்றிய குறையை அவனிடமே முறையிடும் அவருடைய பக்தி, பல முறை, அடியேனின் கண்களைப் பனிக்கச் செய்திருக்கிறது.

இந்த அந்நியோன்னியத்தை விட அவனுக்கு உயர்ந்த அர்ச்சனை வேறெதுவும் இருக்க முடியுமா?.

மகா கவி காளமேகம் என்ற அற்புதக் கவிஞன், பெருமாளை நிந்தா ஸ்துதி என்னும் வகையில் நையாண்டி செய்து பாடுவான். இருந்தும் அவனுடைய ஆழ்ந்த பக்தியினால் அவனை நிரம்பவும் ஸ்நேகித்தான் எம்பிரான்.

‘செண்பக மல்லிகை யோடு செங்கழுநீர் இருவாட்சி எண் பகர் பூவும் கொணர்ந்தேன்’, என்று யசோதையின் மொழியாக பெரியாழ்வார் பேசுவார்.
எம்பெருமான் மிகவும் விழையும் செண்பகம், மல்லிகை, செங்கழுனீர், இருவாட்சி என்னும் எண்ணிக்கையில் பேசக் கூடியதான பூக்களைக் கொண்டு வந்தேன், என்று யசோதை பேசுவதனால், வேறு மலர்கள் எம்பெருமானுக்கு உகப்பில்லை என்று பேசுபவர்களின் அறியாமையை விலக்கிட வியாக்கியான சக்ரவர்த்தியான பெரியவாச்சான் பிள்ளை கூறிய ஒரு கதை.

பூரியில் ஜெகந்நாதப் பெருமாளுக்கு விசேஷமாக செண்பக மல்லிகையை தினம்தோறும் சாத்துவது வழக்கம். பெருமாளை சேவிக்க வந்த சில ராஜகுமாரர்கள், ஒரு நாள் சற்றே நேரம் தாழ்ந்து தரிசிக்க வந்ததனால், கடைவீதியில் செண்பகப் பூவை வாங்கிடச் சென்றார்கள். ஏற்கனவே எல்லாம் விற்றுப் போனதினால், எங்கு தேடியும் ஒரு பூ கூட கிடைக்கவில்லை. இறுதியில் ஒரு வணிகரிடம் ஒரே ஒரு செண்பகப் பூ மிஞ்சி இருந்ததாம்.

அந்தப் பூவை எந்த ஒரு விலையானாலும் கொடுத்து வாங்கிட ராஜ குமாரர்களுக்குள் போட்டா போட்டி ஏற்பட்டது. விலையை ஏற்றிக் கொண்டே போனார்கள். அவர்களில் செல்வச் செருக்கு மிகுந்த ஒரு ராஜகுமாரன் மிக மிக அதிக விலை கொடுத்து அந்த ஒரே ஒரு செண்பகப் பூவை வாங்கி அர்ச்சகர் மூலமாக ஜெகந்நாதருக்குச் சாத்தினானாம்.

அன்று இரவு, ராஜகுமாரனுடைய கனவில் ஜெகந்நாதர் தோன்றி ‘ அப்பப்பா நீ சூட்டிய செண்பகப் பூவை என்னாலே சுமக்க முடியவில்லையே. மிகவும் உறுத்துகிறதே’ என்று தெரிவித்தாராம்.

” பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்ச தி / ததஹம் பக்தி உபஹ்ருதயம் அச்னாமி ப்ரயத ஆத்மந : // ”

என்று கீதாச்சார்யனான கண்ணன் உரைத்தது போலே
‘சிறிய இலையோ, மலரோ, பழமோ ஒரு துளி நீரோ எம்பெருமானை அர்ச்சிக்கப் போதுமானவை. அவன் வேண்டுவதெல்லாம் அவன் மேல் நமக்கு ஏற்பட்ட பக்தியின் ஆழத்தையும் அந்நியோன்னியத்தையும் தான், என்பதனை எம்பெருமானின் மொழி கேட்டு செருக்கு ஒழிந்த ராஜகுமாரன் புரிந்து கொண்டானாம்.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !