தென்திருப்பதி என்று பக்தகோடிகளால் போற்றப்பெறும் தான்தோன்றி மலை ஒரு தலைசிறந்த புனிதத்தலமாகவும், பிரார்த்தனை தலமாகவும் திகழ்கிறது. கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் கரூருக்கு தெற்கே 4கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தலத்தில் திருப்பதி வெங்கடாஜலபதியே கல்யாண வெங்கடரமண சுவாமி எனும் திருப்பெயருடன் எழுந்தருளியுள்ளார்.தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறும் இத்திருக்கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், இது ஒரு குடைவரைக் கோயில் என்றும் கூறப்படுகிறது. திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்க முடியாமல் சோமசன்மா என்ற பக்தன் மிகவும் மனம் வருந்திக் கிடந்தான். அச்சமயத்தில் அந்த பக்தனுக்காக திருப்பதி ஸ்ரீ்னிவாச பெருமாளே இங்கு வந்து தோன்றியதாக ஐதீகம். பெருமாள் தானாக தோன்றியதால் இக்கோயில் தான்தோன்றி மலை என்ற பெயர் பெற்றது.
குன்றின் மேல் கோவில்
இந்த விஷ்ணுதலம் குன்றின் மேல் அமைந்துள்ளது. இக்குன்று மேல்புறம் உயர்ந்தும், கீழ்புறம் தாழ்ந்தும் காணப்படுகிறது. மூலஸ்தானத்தின் மேல்கட்டப்பட்ட கோபுரம் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. குன்றின் மேல்புறம்குடையப்பட்டுள்ள அழகிய குடைவரையில் கல்யாண வெங்கடரமண பெருமாள், மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரம்மாண்ட வடிவம் கொண்ட இந்தப் பெருமாள், லட்சுமியைத் தனது மார்பில் தாங்கி இருக்கிறார். இதனால் இங்கு தாயாருக்குத் தனிச் சன்னிதி கிடையாது.
புரட்டாசி பிரம்மோற்சவம் :
புரட்டாசி மாதம் அமாவாசை முடிந்த மறுநாள் இத்திருக்கோயிலில் கொடியேற்றப்பட்டு, புரட்டாசி மாத பிரம்மோற்சவ திருவிழா துவங்குகிறது. இத்திருவிழாவின் 7 – வது நாள் ஸ்வாமிக்கு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெறும். திருவோண நட்சத்திரத்தன்று திருத்தேர் விழா கொண்டாடப்பட்டு, மறுநாள் அமராவதி நதிக்கரையில் ஸ்வாமிக்கு தீர்த்தவாரி நடைபெறும். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் விடையாற்றி உற்சவம் என்று சொல்லக்கூடிய பூ பல்லக்கு, முத்துப் பல்லக்கு போன்ற விஷேசமான வாகனங்களில் 10 நாட்கள் ஸ்வாமி வலம் வருவார். திருவிழாவின் இறுதி நாளன்று ஸ்வாமிக்கு பலவிதமான புஷ்பங்களைக் கொண்டு புஷ்ப யாக அர்ச்சனை செய்யப்பட்டு திருவிழா நிறைவுபெறும். குறிப்பாக புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அதிகாலை 3 மணிக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவர்.
தலவரலாறு
ஒரு சமயத்தில் திருப்பாற்கடலில் திருமால், லட்சுமிதேவியுடன் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது வாசலின் வெளியே ஆதிசேஷன் காவல் இருந்தார். அப்போது வாயுபகவான் இறைவனைச் சேவிக்க உள்ளே நுழைய முயன்றார். ஆதிசேஷனோ, வாயுபகவானைத் தடுத்து நிறுத்தினார். அதனால் இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. அந்த தருணத்தில் வெளியே வந்த பகவான் இருவரிடையே சமரசம் செய்து வைத்தார். இருவருக்கும் ஒரு போட்டியையும் வைத்தார். தான்தோன்றி மலை அதாவது ஆதிசேஷன் திருவேங்கட மலையைத் தனது உடலால் அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். வாயுதேவன் அதைத் தனது பலத்தால் அசைத்துப் பிடுங்க வேண்டும். இதுதான் போட்டி. இந்த போட்டி ஆரம்பமாயிற்று. ஆதிசேஷன், மலையைத் தனது உடலால் சுற்றி இறுக அழுத்திக் கொண்டார். வாயு பகவான் அதனை பெயர்த்தெடுக்க முயன்றார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. கோபம் கொண்ட வாயு பகவான், தனது முழு பலத்தையும் கொண்டு பெரும் புயலாகவீசியபோது மலை சிதறுண்டு நாலா பக்கமும் விழுந்தன. அவ்வாறு சிதறி விழுந்த குன்றுகளில் ஒன்றுதான் இந்த தான்தோன்றி மலை என்று கூறப்படுகிறது.
கால் பாதம் அடித்தல்:
கை, கால் பிரச்னைகள் தீர வேண்டி இக்கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் தங்களின் பிரச்னை தீர்ந்தவுடன், ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்துவிட்டு, பிறகு ஒரு கல்லில் தாங்கள் குணம் பெற்ற கை அல்லது காலை அக்கல்லின் மீது வைத்து கை, காலின் வடிவத்தைக் குறித்துக்கொண்டு அதன் மீது அடிப்பர். இந்த வழக்கம் நெடுங்காலமாக இக்கோயிலில் பின்பற்றப்படுகிறது. மேலும் இக்கோயிலுக்கு வந்து திருமண வரம் வேண்டியவர்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் ஸ்வாமிக்குத் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைக்கின்றனர். இந்த கல்யாண உற்சவம் ஞாயிறு,திங்கள்,புதன்,வெள்ளி ஆகிய கிழமைகளில் மட்டும் நடைபெறுகிறது. நேரம் கிடைக்கும் போது இந்த கோவிலை சென்று தரிசியுங்கள், அனைவருக்கும் இறைவன் அருள் கிடைக்கட்டும் .
