கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் தீர கண்ணுடைய நாயகி அம்மன் வழிபாடு
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை யில் அருள்பாளிக்கும் கண்ணுடைய நாயகி அம்மன் ஆலயத்தின் புராணக் கதை பற்றி இப்பதிவில் விரிவாக காணலாம்…
ஆலயத்தின் சிறப்பு:
இவ்வாலயத்தின் மூலவர் கண்ணுடைய நாயகி அம்மன் ஆவார். இவ்வாலயம் சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஆலயம் ஆகும்.
புராணக் கதை:
நாட்டரசன் கோட்டையின் தென்புறம் 2 கி.மீ தொலைவில் அடர்ந்த மரங்கள் நிரம்பிய காட்டுப் பகுதியில் அமைந்த கிராமங்களான பிரண்டகுளம், அல்லூர், பனங்காடியிலிருந்து தினமும் பால், மோர், தயிர் விற்க, பலர் நாட்டரசன்கோட்டை வருவர். பிரண்டகுளம் கிராம எல்லையில் வரும்போது விற்பனைக்கு கொண்டு வரும் பால், மோர் குறிப்பிட்ட இடத்தில் தட்டி, தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருந்தது. அவற்றை விற்க முடியாமல் அனைவரும் கிராமத்திற்கு வேதனையுடன் திரும்புவது வாடிக்கையாக நிகழ்ந்தது.
இதற்கு காரணம் என்ன என தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். நீண்ட நாட்கள் கிராமங்களில் நடத்தப்பட்ட விவாதத்திற்கு பின்னர் சிவகங்கை மன்னரிடம் பிரச்னையை கொண்டு செல்ல முடிவு செய்தனர். மன்னரிடம் பேச மக்கள் திரண்டு செல்வதற்கு முதல் நாளில் அம்பாள் மன்னரின் கனவில் தோன்றி, “நான் பூமிக்கடியில் பிரண்டகுளம் கிராமத்தில் பலாமரம் பக்கத்தில் இருக்கிறேன்” எனக் கோடிட்டு காண்பித்தாள். மறுநாள் திரண்டு வந்த மக்களிடம் விஷயத்தை கூறிய மன்னரும் மக்களுடன் சென்று குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்த மக்களிடம் தரையை தோண்டிப் பார்க்க சென்னார்.
கண்ணாத்தாள்:
தோண்டிய பள்ளத்தில் அம்பாள் சிலை வடிவத்தில் காட்சியளித்தாள். அப்போது தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தவரின் கடப்பாரையின் நுனி கண்ணில் பட்டு இரத்தம் கொட்டியது. அடுத்தவர் அந்த பணியை தொடர முற்பட்டார். அதை மறுத்த முதலாமவர் பணியைத் தொடர்ந்து செய்து அம்பாள் சிலையை மேலே கொண்டு வந்தார். அம்பாள் சிலை மேலே வந்த நிமிடத்திலேயே பாதிக்கப்பட்டவரின் கண் பார்வை சரியானது. அவருக்கு கண் கொடுத்த காரணத்தால், “கண் கொடுத்த தெய்வம் கண்ணாத்தாள்” என போற்றப்பட்டது.
எடுத்த அம்பாள் சிலையை யாதவர் குல மக்கள் வடக்கு நோக்கி கொண்டு வந்தனர். வரும் வழியில் நாயன்மார்குளம் கீழ்புறத்தில் சிலையை கொண்டு செல்ல முடியாமல் கிழக்கு புறமாக கீழே வைத்து விட்டனர். நகரத்தார் தரிசனத்தில் வடக்கு நோக்கி செல்வதாக கனவில் தோன்றி களியாட்டம் நடத்தி, பலி கொடுக்குமாறு அம்பாள் கூறினாள். நகரத்தார் உடனடியாக களியாட்டம் கூட்டி 30 நாள் திருவிழா நடத்தி பெண் வீடு, மாப்பிள்ளை வீடு என 2 கட்டடங்கள் தனித் தனியாக கட்டினர்.
அதில் பெண் வீட்டார் கள்ளர்கள் என்றும் மாப்பிள்ளை வீட்டார் கணக்குப்பிள்ளை வகையறாக்கள் என்றும் கூறப்பட்டது. காலை, மாலை இருவேளையிலும் பூஜைகள் நடத்தி நாயன்மார்குலத்தில் அம்பாளுக்கு ஆரயித்து 500 ஆடுகள் பலிகொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதில் வெட்டப்பட்ட 1499 ஆடுகளிலிருந்து ஒருதுளி ரத்தம் கூட சிந்தவில்லை. 1500வது ஆட்டைவெட்டும் போதுதான் ரத்தம் வந்தது. அப்போது தான் அம்பாளும் அந்த இடத்தை விட்டு கிளம்பினார். அங்கிருந்து தொடர்ந்து கொண்டு வரப்பட்ட அம்பாள் சிலை விரகண்டான் ஊரணி தென்புறத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலின் தெற்குப்புறம் பார்த்தமாதிரி வைக்கப்பட்டது. மறுநாள் கோயிலில் சென்று பார்த்தபோது அம்பாள் வடக்குப் புறமாக திரும்பி இருந்தாள். அதன்படியே அம்பாளை தூக்கி வந்தனர்.
களியாட்டம்:
தற்போது கருவறை இருக்கும் இடத்தில் அம்பாளை வைத்து பூஜிக்குமாறு அசரீரி ஒலித்தது. அதன்படி அம்பாள் ஸ்தாபிதம் செய்யப்பட்டு வளையர் குல மக்கள் மூலம் பூஜைகள் செய்யப்பட்டது. சில நாட்கள் கழித்து வளையர்களின் கனவில் அம்பாள் தோன்றி எனக்கு பூஜை செய்ய உகந்தவன், உவச்சர் இனத்தை சேர்ந்தவர்கள் பொன்னமராவதியில் இருப்பதாக கூறி அவர்களை அழைத்து வந்து பூஜை செய்யுமாறு உத்தரவிட்டாள். அன்று முதல் இன்று வரை அவர்களே அம்பாளுக்கு பூஜை செய்து வருகின்றனர்.
காளியாட்டம் எனும் திருவிழா கண்ணுடைய நாயகி அம்மனுக்கு மிகவும் பிடித்தமான விழாவாகும். இக்களியாட்டம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். கும்பகோணம் மகாமகத் திருவிழா போன்று இத் திருவிழாவும் நடத்து வருகிறது. இவ்விழாவிற்காக நாட்டரசன் கோட்டை பழைய வளைவில் களியாட்ட கண்ணாத்தாள் தெருவில் இரு களியாட்ட வீடுகள் இருக்கின்றன. அவை கள்ளவீட்டு களியாட்ட வீடு என்றும் கணக்க வீட்டு களியாட்ட வீடு என்றும் கூறப்படும்.
காரணக்காரர்களாகிய கள்ளரையும் கணக்கரையும் கொண்டு நகரத்தார் இவ்விழாவை நடத்துகின்றனர். கள்ளரில் 5 பிரிவினர் இருப்பதால் அவர்கள் ஐந்து காரணக்காரர்கள் எனப் பெறுவர். இவர்களது களியாட்ட வீடு “பெண் வீடு” என்றும் கணக்கரது களியாட்ட வீடு “மாப்பிள்ளை வீடு” என்றும் செல்லப்பெயரிட்டு அழைக்கப்படும். களியாட்ட வீடுகள் 2ம் அஸ்திவாரம் சுட்ட செங்கலாலும், அதன் மேல் பச்சை செங்கலாலும், அதற்கப்பால் இருவரிசை சுட்ட செங்கலாலும் புதிதாக கட்டப்பெற்று கைமரம் போட்டு ஓடுகள் போடப்படும்.
அதன் உட்புறம் அம்மனும், இருபுறமும் பூசாரிகளும், விநாயகர், வீரபத்திரர், பைரவர் ஆகிய பரிவார மூர்த்திகளும், மதுக்காரியும், அடுத்து துவாரசக்திகள் இருபுறமும், நான்கு சுவர்களிலும் வரையப்பெற்றும், வெளிப்பக்கம் முகப்பின் இருபுறமும் பூதங்கள் 2ம் வரையப்படும். ஒவ்வொரு முறையும் களியாட்டம் கூட்டும் போது வீடுகள் தரைமட்டம் செய்யப்பட்டு, புதிதாக மேற்கூறியபடி களியாட்ட வீடுகள் கட்டி சித்திரங்களும் வரையப்படும், தச்சு செய்தல், நிலை வைத்தல், கைமரம் போடுதல், ஓடு போடுதல், உரு எழுதுதல் என ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சித்திரை முதல் செவ்வாய்க்கு முன் அதாவது களியாட்ட விழா துவங்கும் முன்னரே நல்ல நாள் பார்த்து நடைபெறும்.
திருவிழாக்கள்:
சித்திரை திங்கள் முதல் செவ்வாயன்று காலையில் கண்திறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக செய்யப் பெறும். தொடர்ந்து 22 நாள் விழா நடை பெறும்.
அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள், காலசந்தி மற்றும் மாலை பூஜை சிறப்புற நடத்தப்படும். முதல் நாள் காலசந்தியை முடித்துக் கொண்டு நகரத்தார் மற்றும் அனைவரும் களியாட்ட வீடுகளில் வைப்பதற்காக இருகரகக் குடங்களை பூஜாரிகளை சுமந்து வரச்செய்து வைப்பர்.
22 நாட்கள் இரவில் முளை கொட்டி பாட்டுக்களைப் பாடி வழிபாடு நடத்தப்படும். நகரத்தார் முதலில் கள்ளவீட்டுக் களியாட்ட வீட்டில் முளைகொட்டும் ஐந்து காரணக்காரர்களுக்கு வெற்றிலை, பாக்கு, சந்தனம், பூ முதலியன கொடுத்து முறைகொட்ட செய்வர். இங்கு முளை கொட்டி முடிந்தவுடன் கணக்கு வீட்டில் நகரத்தார் சென்று மேற்கூறியவற்றை கொடுத்து முளை கொட்ட செய்வர்.
வேண்டுதல்கள்:
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க, கண் நோய் பிரச்னைகள் தீர இறைவனை பிரார்த்திக்கலாம். அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
