Friday, October 27, 2023
HomeAanmeega Thagavalgalகார்த்திகை தீபம் ஸ்பெஷல் !

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் !

சைவக் கடவுளான முருகப் பெருமானை வேண்டி அவரை மனதில் நினைத்து திருக் கார்த்திகையன்று விரதம் இருப்பர்.
இதனை பன்னிரெண்டு வருடங்கள் தொடர்ந்து கடைபிடிப்பவர்கள் வேண்டும் வரத்தினை பெறலாம் என்பது ஐதீகம்.
பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதமிருந்துதான் நாரதர், சப்த ரிஷிகளுக்கு மேலான பதவியை அடைந்தார். மகாபலிச் சக்கரவர்த்தி, திருக்கார்த்திகை விரதமிருந்தே தனது உடலின் வெப்பத்தைத் தணித்துக் கொண்டான். திரிசங்குவும், பகீரதனும் கார்த்திகை விரதமிருந்தே பேரரசர் ஆனார்கள். மகிஷனை வதம் செய்ததால் ஏற்பட்ட பாவம் நீங்க, பார்வதியாள் திருக்கார்த்திகை விரதம் இருந்ததாகச் சொல்கிறது புராணம். இவ்வாறு புராண காலத்திலிருந்தே கார்த்திகை விரதத்தின் சிறப்புகள் நாம் அறிந்த ஒன்று.
முருகனுக்கு விரதம்:
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் நட்சத்திர அடிப்படையில் அனுசரிக்கப்படுகிறது. மாதக் கார்த்திகைகளே சிறப்புடையது என்றால், கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படும் திருக்கார்த்திகை குமரனுக்கு மிக மிக முக்கியமானது. இதற்கு அடுத்த நிலையை ஆடிக்கிருத்திகை பெறும். இவ்விரதத்தை மேற்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர். இவ்விரதநாளில் முருகனின் கந்தசஷ்டிக்கவசம், சண்முககவசம் படிக்க வேண்டும். கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணம் கேட்பதும் நல்லது.
புராணங்கள் இவரை சிவனின் மகனாக சித்தரிக்கின்றன. புராணங்களின்படி, சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. கார்த்திகைப் பெண்கள் அறுவர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர். பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். ஆறு முகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்று அழைக்கப் படுகிறார்.
சிவபெருமான் முருகனை வளர்த்து ஆளாக்கிய கார்த்திகைப் பெண்களிடம், நம் பிள்ளையை நல்லமுறையில் வளர்த்து ஆளாக்கிய நீங்கள் அனைவரும் நட்சத்திர மண்டலத்தில் என்றென்றும் நிலைத்து வாழ்வீர்கள். உங்களை நினைவுபடுத்தும் வகையில் முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் வழங்கி, கார்த்திகை நாளில் முருகனுக்கு விரதமிருந்து வழிபடுவோர் எல்லா சவுபாக்கியங்களையும் பெறுவார்கள் என்று அருள்புரிந்தார். காளிதாசர் இயற்றிய குமாரசம்பவத்தில் இந்த வரலாறு விரிவாக விளக்கப்பட்டுள்ளது. குமார சம்பவத்தில் முருகப்பெருமான் தாரகாசுரனை வதம் செய்ததாக கூறப்பட்டுள்ளது.
கந்தனைக் கரம் குவித்து வணங்குவோருக்கு கலியின் கொடுமையும், காலபயமும் கிடையாது என்று வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது. நாம் அறியாமல் செய்த பிழைகளை முருகன் பொறுத்துக் கொள்வார். பிள்ளை போல பிரியம் காட்டுவார், என்று கந்தசஷ்டிகவசம் கூறுகிறது. என்னைப் பெற்றவன் நீயே! என் பிழைகளைப் பொறுத்துக் கொள்வது உன் கடமை! என்று, கந்தசஷ்டி கவசம் எழுதிய தேவராய சுவாமிகள் முருகனிடம் வேண்டுகிறார். நாமும் கார்த்திகை நன்னாளில் முருகப்பெருமானை வணங்கி நற்பலன்கள் பெறுவோம்.
கந்தனுக்கு அரோகரா !
முருகனுக்கு அரோகரா !
கார்த்திகை மைந்தனுக்கு அரோகரா !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + six =

Most Popular