Thursday, October 19, 2023
HomeAanmeega Thagavalgalஹா மஹத்துவங்கள் நிறைந்த விரதமே கார்த்திகை சோமவார விரதம்

ஹா மஹத்துவங்கள் நிறைந்த விரதமே கார்த்திகை சோமவார விரதம்

சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது. அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம். திங்கட்கிழமை என்பது “சோமவாரம்” என்றழைக்கப்படுகிறது. சிவபெருமானை நினைத்து திங்கட்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் என்பதால் சோமவார விரதம் என்று பெயர் பெற்றது. கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாள். கார்த்திகை மாத முதல் சோம வாரத்தில் இருந்து சோம வார விரதத்தை தொடங்குதல் வேண்டும். இந்த விரதத்தை ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்கலாம்.
குஷ்ட ரோகத்தால் பாதிக்கப்பட்டு சாபம் பெற்ற சந்திரன் கார்த்திகை சோமவார விரதத்தைக் கடைப்பிடித்து, விமோசனம் பெற்று சிறப்புற்றார். ஈசனும் தனது முடிமேல் சந்திரனைச் சூடிக்கொண்டு சந்திரசேகரர் என்ற பெயரையும் ஏற்றார்.
சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள். அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படவும் நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இவ் விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
இவ்விதம் குறித்து ஒரு தெய்வீகமான புராணக் கதையும் உண்டு.
#சிவ_பார்வதி_விளையாட்டு…
சர்வேஸ்வரரும் பார்வதிதேவியாரும் சொக்கட்டான் ஆடும் போது அதில் பார்வதி தேவியே ஜெயித்தார். ஆயினும் ஈசன் தானே வென்றாகக் கூறவே, அதிருப்தியடைந்த தேவி நடுவர் ஒருவரை நியமிக்குமாறு வேண்டினார்.
எம்பெருமான் தான் லீலாதரனாயிற்றே. அவர் திருவிளையாடலைத் தொடங்கினார். ஒரு பிராமணரை அழைத்து நடுவராக்கினார். மீண்டும் பார்வதி தேவியாரே விளையாட்டில் ஜெயித்தாலும், பிராமணர் சுவாமி வென்றதாகவே கூறினார். கோபமடைந்த தேவி குஷ்டரோகம் உண்டாகும் படி பிராமணரை சபித்துவிட்டார்.
அந்தக்ஷணமே பிராமணருக்கு இரத்தம் ஒழுகி உடம்பு முழுவதும் நாற்றம் எடுத்து சீழ், புழு முதலியன வெளியேறியது. அவ்வியாதியின் கஷ்டம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்ள ஆயத்தமானார் அவர்.
அப்போது அவ்வழியே சென்ற ஒரு பெண், அவரை தடுத்து நிறுத்தி காரணம் கேட்டாள். அதற்கு அவர் நடந்ததை கூற, அந்த பெண் சோமவார விரதத்தைப் பற்றி கூறினாள்.
இந்திரன் சாபத்தினால் பூலோகத்தில் அவதாரம் எடுத்து சோமவார விரதம் இருந்து சாபம் தீர்ந்து இந்திரலோகம் போய்க் கொண்டிருந்த அந்த பெண், 16 சோமவார விரதம் இருந்து சிவனை வழிபடுங்கள், உங்கள் வியாதி குணமாகிவிடும். ஆனால் எனக்கு அதைப்பற்றிக் கூற நேரமில்லை. நீங்கள் அருகிலுள்ள விதர்பநகர் சென்றால் அங்கு கிணற்றடியில் இருக்கும் பெண்கள் சோமவார விரத மகிமையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களிடம் சென்று சோமவார விரத மகிமையைக் கேட்டால் அவர்கள் சொல்வார்கள். அதன்படி சோமவார விரதம் இருந்து வந்தால் உங்கள் வியாதி குணமாகிவிடும், என்று சொன்னாள்.
#பெண்கள்_சொன்ன_விரத_மகிமை
விதர்பநகர் சென்ற அந்த பிராமணர், கிணற்றடியில் இருக்கும் பெண்களை சிறுபெண்கள் என்றுகூட நினைக்காமல் நமஸ்காரம் செய்து சோமவார விரத மகிமையைப் பற்றி கேட்டார். அவர்கள் எல்லோரும் சோமவார விரதத்தால் தங்களுக்கு கிடைத்த பலாபலன்களைக் கூறினார்கள். மேற்படி விரதத்தின் மகிமையையும் செய்யும் முறையையும் கூறினார்கள்.
கார்த்திகை முதல் திங்கள் தொடங்கி ஒவ்வொரு திங்கட்கிழமையும் விரதம் இருந்து சிவ தரிசனம் செய்ய வேண்டும்.
சிவபக்தியுடன் 16 சோமவார விரதம் இருந்து முடிக்கவேண்டும்.
யாரிடமும் கோபப்படாமல் அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் எந்தவிதமான கஷ்டமும் இருக்காது என்று அப்பெண்கள் கூறினார்கள். அதன்படியே சோமவார விரதத்தை 2 வருடங்கள் அதாவது 8 சோமவாரங்கள் கடைபிடித்தவுடனேயே அந்த விரத மகிமையால் பிராமணரின் வியாதி குணமாகியது.
#அனுஷ்டிக்கும்_முறை
சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமை தொடங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கலாம். ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும்.
பிரம்ம முகூர்தத்தில் கணபதியை வழிபட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு தேங்காய் உடைத்து கற்பூர தீபம் காட்டவேண்டும்.
பின்னர் நிறைகலசம் தயார் வைக்க வேண்டும். கலசத்தின் மையப் பகுதியில் மஞ்சள் தடவி, தேங்காய் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். அதன்பிறகே பூஜையைத் தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.
வழிபாட்டின் போது சிவ நாமத்தை உச்சரிப்பது சிறப்பான வாழ்வை அருளும். வழிபாட்டின் முடிவில் இறைவனுக்கு தீபாராதனை காட்ட வேண்டும். பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை பார்வதி பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு புதுவேட்டி, ரவிக்கைதுணி, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம் இவற்றுடன் தட்சனை ஆகியவை அடங்கிய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னதானம் செய்து அந்த அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசி பெறவேண்டும்.
இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைப்பிடிக்கலாம். இவ் விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது அனுஷ்டிப்பது நலம் தரும்.
இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் முற் பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும், தீராத நோய்கள் தீரும், சகல சௌபாக்கியங்களும் கிட்டும் அத்துடன் இம்மைக்கும் மறுமைக்கும் நன்மையே விளையும்.
#கார்த்திகை_முதலாம்_சோமவாரம்
நற்றுணையாவது நமச்சிவாயவே:
அகிலம் போற்றும் அண்ணாமலையார் பொற்பாதங்களுக்கு கோடானுகோடி ஆத்ம நமஸ்காரங்கள்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 14 =

Most Popular